மின்கிறுக்கல்

புலிக்கலைஞன்

ஒரு புலிக் கலைஞனின் கம்பீர முகமூடிக்குப் பின்னால் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கும் அவனது வறுமையையும் இயலாமையையும் நிதர்சனம் குறையாமல் வெளிக்கொணரும் ஒரு மகத்தான படைப்பு, அசோகமித்ரனின் “புலிக்கலைஞன்”.

எளிய, நடுத்தர மக்களின் ஆசைகளை அன்றாட அவலங்களை தனது கதைகளில் தொடர்ந்து படம் பிடித்துக் காட்டியவர் அசோகமித்திரன். வெகுஜனங்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்ததாலேயே அவரது எழுத்து இன்றும் பலரின் மனத்திற்கு நெருக்கமாய் இருப்பவை. அவரின் கதைகள் பல சொந்த அனுபவங்களால் பின்னப்பட்டவை.

புலிக்கலைஞன் கதையிலும் சினிமா கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஒரு ‘காஸ்டிங் அஸிஸ்டன்டின்’ பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அசோகமித்திரனும் அதே போன்று ஒரு பட நிறுவனத்தில் பலகாலம் வேலை செய்திருப்பதால் இந்தக் கதையும் அவரது சொந்த அனுபவமாக இருக்கலாம். அதுவே கதைக்குக் கூடுதல் கவனிப்பையும் கனத்தையும் கொடுக்கின்றது.

பட நிறுவனங்களின் தினசரி அலுவலக நடவடிக்கைகளில் இருந்து தொடங்குகிறது கதை. அங்கே வேலை செய்பவர்களின் பொறுப்புகளைக் கூறுமிடத்தில் அசோகமித்ரனின் பகடி தெறிக்கும் வாக்கியங்கள் பளிச்சிடுகின்றன. அதிக வேலையில்லாமல் இருக்கும் பணியாளர்களைப் பற்றிய வரிகளில் நாம் சந்தித்த சில மனிதர்களின் அலுவல் நடவடிக்கைகளைச் சுலபமாய்ப் பொருத்திப் பார்க்கலாம்.

//தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து, டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து.. நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். …… நிஜமாகவே வேலை வந்தபோது….வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம்.//

காதர் என்பவன் பட வாய்ப்பு கேட்டு அவர்கள் அலுவலகத்திற்கு வந்த பின் கதை புது வேகமெடுக்கிறது. அவன் தான் யார் என்பதை அங்கிருப்போர் முன்னிலையில் நிலைநிறுத்திக் கொள்ளப் படும் சிரமங்களை வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

கிடைத்த வாய்ப்பைத் தவற விடாது, தனது வித்தையைக் காட்டத் துவங்கும் ‘டைகர் பைட்’ காதர், ஒரு புலியாகவே விஸ்வரூபமெடுத்து மிரட்டும் காட்சி, கதையை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. எந்தப் பொருளையும் அசைக்காமல் சர்மாவின் மேஜையிலும், கால் உடைந்த நாற்காலியின் முதுகிலும், புலியாய் இலாவகமாக வந்தமர்வதும், காதரின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆரம்பத்தில் ‘பேஷ்’ போடும் சர்மா ஒருகட்டத்தில் பேச்சற்று நிற்பதும், படிப்பவர் உடலையும் புல்லரிக்கச் செய்பவை. அக்காட்சியின் தத்ரூபமான விவரணைகள் இக்கதையை உலகத்தரத்திற்குக் கொண்டு போய்விடுகின்றன.

அசோகமித்ரனின் எழுத்தில் எங்கேயுமே உணர்ச்சித் ததும்பல்கள் இல்லை. அவர் கதையை வெறும் காட்சிப்படுத்துதலோடு விட்டுவிடுகிறார். ஆனால் படிக்கும் நம்மில் அந்த வார்த்தைகள் கொண்டு உணர்வுகளை வெள்ளெமெனப் பெருக்கெடுக்க வைக்கிறார். சர்மாவின் காலில் விழுந்து காதர் கண் கலங்கும்போது “அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்” என்று கதைசொல்லி கூறுமிடத்தில் மொத்தக் கதையும் அந்த வாக்கியத்தில் அடக்கிவிடுகிறார்.

எந்தவொரு நாடகத் தன்மையும் இல்லாத கதையின் முடிவு, அதுவரை விஞ்சி நின்ற யதார்த்தத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

புறக்கணிக்கப்பட்ட பல காதர்களின் ஒடுக்கப்பட்ட பாய்ச்சலை நினைவூட்டி மனம் கனக்க வைக்கிறான் இந்தப் ‘புலிக்கலைஞன்’.

Exit mobile version