மின்கிறுக்கல்

புலம்பும் ஓவியம்

கூரான வார்த்தையில் தீட்டிய வாளால்
கரகரவென என் குரல்வளையை அறுக்கிறாய்.
ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து
உறைந்தே போய்விட்டது.

தலையும் முண்டமும் சம்மந்தமற்றுப் போனாலும்
இன்னும் விழி வழியாய்க் கண்ணீர்
உறைந்த ரத்தத்தில் பாய்கிறது.

இதோ அப்பெருவெளி
கண்ணாடியாய் விரிகிறது.
அதில் பாழாய்ப்போன
அவ்வாளையேந்திய
தொன்ம ஓவியமொன்று
‘வார்த்தையின் வலிமையறியாத மூடனாகிவிட்டேனே’ என
பரிதவித்துப் புலம்புகிறது.

அதன் கண்ணீர்த்துளி ஒரு கல்லாகி
ஆணவம் பிடித்த அவ்வோவியத்தைக்
கலங்கடிக்கிறது!

Exit mobile version