மின்கிறுக்கல்

ஹாப்பி ஜர்னி (2014 மராத்தி)

இந்த லாக்டவுனால் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும் சில நன்மைகள் இருக்கவே செய்கிறது. தமிழ் படங்களையே அதிகமாக பார்த்து பழகிப்போன எனக்கு கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் வராததால் பிறமொழி படங்கள் அதிகமாக பார்க்கும் பழக்கம் உண்டானது. பிறமொழி படங்களை பார்க்கும்போது சப் டைட்டிலையும் படத்தோடு சேர்ந்து கவனிக்க வேண்டி இருப்பதால் தமிழ் படங்களைப் போல சொகுசாக பார்க்க முடியவில்லை என்ற ஒரு சிறு குறை இருந்தாலும் நாளாக நாளாக அதுவும் பழகி விட்டது. பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரத்தை தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற பாரதியாரின் கனவை அறிவியலறிஞர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, சினிமாவில் அது நன்கு பின்பற்றப்படுகிறது என்றே தோன்றுகிறது. அந்தப் பெரும் கனவில், எனது சிறு பங்களிப்பாக, சில பிறமொழி படங்களின் முன்னோட்டத்தை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

ஹாப்பி ஜர்னி (2014 மராத்தி) 

எனது பள்ளிக்கூட பருவத்தில் தென்னிந்தியாவை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை மட்டுமே பேச்சு வழக்கிற்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். வாலிப வயதை அடைந்து பல இடங்களுக்கு பயணம் சென்ற பொழுதுதான் என்னுடைய அறிவிலித்தனம் எனக்கு புலப்பட்டது. பல்வேறு மொழிப் படங்களை பார்ப்பதன் மூலமாகவும் அவர்களின் வாழ்க்கை முறை நமக்கு பரிச்சயம் ஆகிறது. அப்படிப் பார்த்ததில், சமீபத்தில் நான் ரசித்த ஒரு படம்தான் 2014இல் மராத்தி மொழியில் வெளிவந்த ஹாப்பி ஜர்னி என்ற படம். இந்தியாவில் அமேசான் பிரைம் இல் பார்க்கக் கிடைக்கிறது.

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை ஆகிய நான்கு பேர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் கதை நகர்கிறது. பிறந்ததிலிருந்தே நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் தங்கையின் மருத்துவ செலவுக்காக படிப்பை பாதியிலேயே கைவிட்ட அண்ணன், அரேபிய நாடுகளுக்கு சென்று கொத்தடிமையாக வேலை செய்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறான். அப்படியும் ஒரு கட்டத்திற்கு மேல் தங்கையை காப்பாற்ற முடியாமல் தங்கை உயிரிழக்க நேரிடுகிறது. பிறந்ததிலிருந்தே அண்ணனை மருத்துவ செலவுக்காக கஷ்டப்படுத்துகிறோம் என்று  உணர்ந்த தங்கை இறந்த பின்பு ஆவியாக வந்து அவளுடைய அண்ணனின் வாழ்க்கையை எவ்வாறு சரி செய்கிறார் என்பதே படத்தின் மையக் கதை. இந்திய படங்களில் வழக்கமாக அடித்து துவைத்த குடும்ப கதையை மீண்டும் எடுத்துள்ளார்கள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் ஒரு பேய் படத்தில் எதார்த்தமான குடும்ப கதையை நேர்த்தியாக பின்னி நகைச்சுவை கலந்து எடுத்த விதம் தான் இந்த படத்தை ரசிக்க வைக்கிறது.

அண்ணனாக நடிக்கும் அதுல் குல்கர்னி படத்தின் முதுகெலும்பாக விளங்குகிறார். பல தமிழ் படங்களில் நடித்த இவரை தமிழ் திரையுலகம் இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தங்கை ஆவியாக நடிக்கும் பிரியா பாபத் கதாப்பாத்திரத்திற்கு சரியாக ஒத்துப் போகிறார். சிறுவயது முதல் அண்ணனுடன் சேர்ந்து செய்ய மறந்த குறும்புகளை ஆவியாக வந்து செய்வது நகைச்சுவை உணர்வுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு சிற்றுந்துகுள் புகுந்து கொள்ளும் தங்கையின் ஆவி அண்ணனுடன் சேர்ந்து பயணம் செல்லும்போது நமக்கும் பயணம் செய்யும் உணர்வு ஏற்படுகிறது.

ஆவியாக ஆனாலும் தங்கையின் காதலுக்காக மெனக்கெடும் அண்ணனை பார்க்கும் பொழுது பல தங்கைகளுக்கு வயிற்று எரிச்சல் ஏற்படலாம். பேயுடன் ஒளிந்து பிடித்து விளையாடுவது, பீர் குடிப்பது, ஆன்லைன் ஷாப்பிங் செய்வது என்று பல கலகலப்பான காட்சிகளை கதையோடு ஒன்றி வருமாறு அழகாக அமைத்துள்ளனர். Logic இல்லாத ஒரு பேய் கதையாக இருந்தாலும் தனக்கென எடுத்துக் கொண்ட ஒரு வட்டத்தில் கதை தொய்வின்றி பயணிக்கிறது. படத்தில் தேவையற்ற காட்சிகள் என்பதே எதுவும் இல்லை.   ஆனாலும் இறுதியில் ஒரு சராசரி இந்திய படத்தில் வருவது போன்ற குணச்சித்திர காட்சிகள் வருவது ஒரு சிறு குறை என்று கூறலாம். 

இதற்குமேல் கூறினால் படம் பார்க்கும் பொழுது வரும் அனுபவத்தை அது கெடுத்து விடும் என்பதால் இந்த விமர்சனத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் பாருங்கள்.

ஹாப்பி ஜர்னி – சுவாரஸ்யமான ஒரு பயணம்

(அடுத்த விமர்சனத்தில் சந்திப்போம்)

Exit mobile version