மின்கிறுக்கல்

பாபாவும் நானும் – 8

சென்ற வாரம் என் மூத்த மகள் பிறந்த அந்த தினத்தின் திக்திக் நொடிகளையும் பாபாவின் அருளால் எல்லாம் நினைத்தப்படி முடிந்ததையும் கூறியிருந்தேன். பொதுவாக இரண்டாவது பிரசவம் எளிதாக இருக்கும். முதலில் சுகப்பிரசவம் என்றால் அடுத்ததும் அப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் விசயத்தில் இரண்டாவதும் சுகப்பிரசவம் தான் என்றாலும் முதல் பிரசவத்தை விட இரண்டு மடங்கு படபடப்பும் பயமும் இருந்தது.

முதலாவதற்கு ஒரு நாள் தான் மருத்துவமனையில் காத்திருந்தோம். இரண்டாவதற்கு இரண்டு நாள்கள். “தண்ணி குறையுது தண்ணி குறையுது” என்று ஒவ்வொரு முறை மருத்துவர்கள் கூறும்போதும் இதயம் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று அதன் வேகத்தைக் கூட்டிக்கொண்டே இருக்கும். நான் சில நேரங்களில் நினைப்பதுண்டு, மருத்துவமனைகளில் வைத்தியம் பார்ப்பதை விட அவர்கள் கொடுக்கும் பில்டப்களே நம்மை பாதி நோயாளியாக்கி விடும் என்று. அதிலும் 

“இது கொறைஞ்சுருச்சு இந்த டெஸ்ட் எடுங்க… அது கூடிருச்சு அந்த டெஸ்ட் எடுங்க…”

“பெரிய டாக்டர் வர்றாரு… பெரிய டாக்டர் வர்றாரு…” இதைச் சொல்லும்போதெல்லாம் அந்த தாதிகள் கொடுக்கும் பில்டப் இருக்கிறதே. பிரதம மந்திரியே வந்துவிட்டாரோ எனும் அளவுக்குத்தான் இருக்கும்.

மருத்துவர் வந்து எதுவும் சொல்ல மாட்டார். “எல்லாம் நார்மல்…” என்றுவிட்டு சென்றுவிடுவார். ஆனால் அதற்கு முன் இவர்கள் கொடுக்கும் பில்டப் தான் நம்மை அரற்றிவிடும். என்ன தான் சிறந்த சிகிழ்ச்சை அளித்தாலும் பொதுவாக மருத்துவமனைகளில் ஏன் யாருமே இயல்பாக இருக்க முடிவதில்லை? அவர்கள் சக மனிதனை நோயாளியாகப் பார்க்காமல் மனிதனாகப் பார்த்து சிகிழ்ச்சை அளித்தால் இன்னுமும் வேகமாக குணமடைவார்களோ? மருத்துவர் யாராவது இதனைப் படிக்க நேர்ந்தால் இதைக் கொஞ்சம் கருத்தில் கொள்ளலாம்.

சரி என் கதைக்கு வருகிறேன். பிரசவ அறைக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. திடீர் திடீரென ஓடிவரும் செவிலியர்களும் எதுவும் சொல்வதில்லை. இரண்டு மருத்துவர்கள் உள்ளே இருக்கிறார்கள். ஒருமுறை வெளியே வந்த சின்ன மருத்துவர் பொறுமையாக உள்ளே உள்ள சூழலை விளக்கினார். கூடுமானவரை முயற்சிக்கிறோம் அனேகமாக அறுவைசிகிச்சை செய்யவேண்டி இருக்கும் என்றார். நமக்கு இந்தச் சூழலில் பாபாவைத் தவிர வேறு யார் உதவ முடியும். “பாபா… பாபா…” என்று அவரை மட்டுமே அழைத்துக்கொண்டிருந்தேன். ஏதோ மருந்து வாங்கிவரச் சொன்னார்கள். கீழே ஓடினேன். ஒரு குவாலிஸ் கார் ரிவர்ஸில் வந்து மருத்துவமனை வாசலில் ஏறி நின்றது. அதன் பின் பாபா மூன்று விரல்களைக் காட்டியபடி சிரித்துக்கொண்டிருந்தார். மனதின் பாரம் பாதி குறைந்தது போலிருந்தது. பாபா வந்துவிட்டார் இனி அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினேன். நம்பினோர் கைவிடப்படார். எல்லாம் சுகமாக முடிந்தது. நான் பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்டேன். அந்த அறுவை சிகிழ்ச்சை அறையில் என் மனைவியின் தலைக்கு மேல் தக தகவென வெள்ளி நிறத்தில் மின்னிய படி ஒரு பாபாவின் படம் போட்ட நாள்காட்டி தொங்கிக்கொண்டிருந்தது. என்ன சொல்ல! உனக்காக உன்னோடு நான் எப்போதும் எங்கும் இருப்பேன் என்பதை இதைவிட வெளிப்படையாக பாபா எப்படிச் சொல்வார்?

உடனே எனக்கு பாபாவை முதல்முதலில் அறிமுகப்படுத்திய சுதர்சன் அண்ணனிடம் நடந்ததைக் கூறினேன். அவர் பெரிதாக ஆச்சரியப்பட்டது போல் எல்லாம் காட்டிக்கொள்ளவில்லை. 

“அதெல்லாம் அப்படித்தான் தம்பி… நான் தான் சொல்றேன்ல பாபா உன்கூட இருக்கார்னு” என்றார்.

இந்த சுதர்சன் அண்ணனை இன்றுவரை நான் நேரில் பார்த்தது கூடயில்லை. இந்தத் தொடரை நான் எழுத மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தவரும் அவரே. பாபா பற்றிய என் அனுபவத்தை எழுதும் எண்ணமும் ஆர்வமும் எனக்கு நெடுநாள்களாகவே இருந்தாலும் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். அதைப்பற்றி நான் யாரிடமும் விவாதித்தது கூடயில்லை. திடீரென்று ஒரு நாள் சுதர்சன் அண்ணன் அழைக்கிறார்.

“ஜெய் நீ தான் எழுதுவைல. உன்னோட அனுபவத்தை எழுதேன். யாருக்காவது பயன்படும்” என்றார். நான் மழுப்பலாகத் தான் பதில் சொல்லி நாள்களைக் கடத்திக்கொண்டே வந்தேன். ஆனால் அந்தத் தூண்டுகோல் தூண்டிக்கொண்டே இருந்தது. நானும் எழுதிவிட்டேன். 

இன்னும் சொன்னால் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். என் வாழ்வில் மிக முக்கியமான தருணங்களாக நான் நினைத்தவற்றை மட்டும் சொல்லியிருக்கிறேன். பாபாவோடு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத என்னிடம் சுதர்சன் அண்ணன் பாபாவை அழைத்துவந்து சேர்த்தார். அதே போல் இந்தத் தொடரின் மூலம் நானும் யாரோ ஒருவரிடம் பாபாவைச் சேர்த்திருந்தால் அதுவே எனக்கு பெரிய வெற்றி.

என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கைக்கும் தன்நம்பிக்கைக்கும் பெரிய வேறுபாடெல்லாம் கிடையாது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என்றே நான் கருதுகிறேன். என் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள ஆயிரம்பேர் இருக்கிறார்கள் ஆனால் துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள வெகு சிலர் தான். அந்த வெகு சிலரில் முக்கியமானவர் தான் கடவுள். தன்னம்பிக்கையோடு நான் முன்னேறிச் செல்லும்போது எனக்கு இன்னொரு கையாய் கடவுள் நம்பிக்கை கைக்கொடுக்கிறது. 

எந்த ஒன்றையும் நம்பு இல்லை நம்பாதே. இரண்டில் ஒன்று தான் இருக்க முடியும். நம்புவதை முழுமையாக நம்பு அது நிச்சயம் உன் வாழ்வில் ஒளியேற்றும்.

பாபா உங்கள் அனைவர் வாழ்விலும் ஒளியேற்றட்டும்…

ஓம் சாய்ராம்…

கடந்த எட்டு வாரங்களாக என்னோடு பாபாவைத் தரிசித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

Exit mobile version