மின்கிறுக்கல்

பறவைகளின் சாலை

வானவில்லின் வண்ணங்கள் ஒருமித்திருந்தாலும் அதனதன் நிலையில் வேறுபட்டிருக்கின்றன
பிரபஞ்சத்தின் பிணைப்பில் வாழ்க்கை சிக்குண்டு திணறுகிறது என்கிறது
மெய் ஞானம்
கணக்கற்ற உலகங்கள் சுழல்கின்றன என்கிறது நுட்ப அறிவின் அனுமானம் அவற்றின் ரகசியங்கள்  இதுவரை எவர்க்கும் புலப்படாமல் 

புகைந்து போய்க் கொண்டிருக்கின்றன
ஜனனம்_ மரணம் என்னும் கரைகளுக்கு ஊடாக பெருக்கெடுத்தோடும் நதியின் துளிகளாய் கணம் தோறும்

உயிர் உள்ளவைகளும் , உயிரற்றவைகளும் பயணித்தபடியே இருக்கின்றன
இறுதியின் முகவரி எங்குள்ளது ?
தோற்றத்தின் துவக்கப்புள்ளி எப்பொழுது முகிழ்க்கிறது ?
காலத்தின் அணுக்களை வரையறுத்தது யார் ?
கடவுளின்_ சாத்தானின் படிமங்களின் உள்ளீடு என்ன ?
எத்தனையோ கேள்விகள் காற்றின் கூறுகளில் பருண்மையாய் திரண்டு உலவினாலும் மனிதனைத் தவிர்த்து வேறு எதனையும் அணுக்கமாய் அணுகிட முடியாது என்பது பேருண்மை
வாழ்வின் அசைவுகள் வெயிலின் தோற்றப்பிழையல்ல

நிழலின் உதிர்வில் உதித்தெழுபவை. தடயங்களையோ.. சுவடுகளையோ நிரந்தரமாக நினைவுகளில் வரலாறாய் விட்டுச் செல்பவை

 அப்போது ஏற்படும் வெற்றிடம் கனவின் அதிர்வுகளை காலவெளிகளில் உற்பவித்துக் கொண்டேயிருக்கும்.

Exit mobile version