மின்கிறுக்கல்

எழுத்தும் வாசிப்பும் ஒரு சுகானுபவம்

தற்போது திருச்சியில் வசிக்கும் ஐ.கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். டிப்ளமோவில் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பட்டயம் பெற்றவர். குடும்பத் தலைவி. கடந்த இருபது வருடங்களாகக் கதைகள் எழுதி வருகிறார்.  உப்புச்சுமை, நாய்சார், திமிரி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

நீங்கள் எழுத ஆரம்பித்தபோது ஏதாவது நோக்கமிருந்ததா? ஆரம்ப எழுத்து பற்றிச் சொல்லுங்களேன்?

விளையாட்டாக எழுத வந்தேன். அப்போது நினைத்துக்கொண்டேன், நம்மைப் பற்றி அறியாத ஒரு நூறு பேருக்காவது நாம் அறிமுகமாகவேண்டுமென்று.

குழந்தை மண்டி போடும், தவழும், மெல்ல எழுந்து நிற்கும், நடக்கும், பின்பே ஓட ஆரம்பிக்கும். என்னுடைய எழுத்தும் அப்படித்தான் வளர்ச்சியடைந்தது. இன்னும் செல்ல வேண்டியது வெகு தூரமுள்ளது.

ஆரம்பத்தில் எழுதும்போது எந்தமாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டீர்கள்?

எழுத ஆரம்பித்த புதிதில் இலங்கை வானொலியில், இசையும், கதையும்  என்றொரு நிகழ்ச்சியில்  என் சிறுகதையை வாசித்தார்கள். அதன் இறுதியில் எழுதியவருடைய முகவரியை கூறுவார்கள். கதைக்கு நிறைய பாராட்டு கடிதங்கள் வந்தன. ஒரு கடிதம் மட்டும் உருகி, உருகி எழுதப்பட்டிருந்தது. அதாவது திருமணம் செய்து கொள்ளலலாம் என்கிற ரீதியில். அப்போது எனக்கு 20 வயதுதான். மிகவும் பயந்து போனேன்.  அப்புறம் ஏதோ சொல்லி சமாளித்தோம்.  அதன்பிறகு அப்படிப்பட்ட அனுபவம் ஏதும் வாய்க்கவில்லை.

இன்னும் கொஞ்சம் விரிவாகச்சொல்லுங்கள். இலங்கை வானொலிக்கு எப்படி உங்களுடைய கதைகள் தேர்வானது, இலங்கை வானொலி அடிக்கடி கேட்பீர்களா?

இலங்கை வானொலியில் இசையும், கதையும் என்றொரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். கதைக்கு நடுவே அதற்குப் பொருத்தமான திரையிசைப் பாடல்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். கதை வாசிப்புக்கு நடுவே பாடல்கள் ஒலிபரப்பாகும். வாரம் ஒருமுறை அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். அதில் தான் என்னுடைய சிறுகதையும் வாசிக்கப்பட்டது.

அப்பொழுதெல்லாம் விவித பாரதியும், இலங்கை வானொலியும் தான் பொழுதுபோக்கு. கதை எழுதுவது, புத்தகம் வாசிப்பது, வானொலி கேட்பது எனக்குப் பிடித்தமானது.

கடிதங்கள் இலங்கைத் தமிழர்களிடமிருந்து வந்ததா ?            

இல்லை. இலங்கைத் தமிழர்களிடமிருந்து கடிதம் வரவில்லை. தமிழகத்திலிருந்துதான்  கடிதங்கள் வந்தன.

எழுதுவதற்கு எந்தமாதிரியான சூழல் உங்களுக்குத் தேவைப்படுகிறது?

சூழல் என்பதை விட மனம் வசப்படுதல் மிக முக்கியம். கதைக்குள் என்னைப் புகுத்திக் கட்டுண்டு கிடப்பதற்கு அமைதி தேவை. மற்றபடி நாய்சார் சிறுகதைத் தொகுப்பில், என்னுரையில், கூடத்தில், தாழ்வாரத்தில், திண்ணையில்( தற்போது பால்கனியில்) விளைந்தவை என் கதைகள் என்று குறிப்பிட்டுள்ளேன் ?

எழுதுவதற்கு எந்தமாதிரியான சூழல் உங்களுக்குத் தேவைப்படுகிறது?

சூழல் என்பதை விட மனம் வசப்படுதல் மிக முக்கியம். கதைக்குள் என்னைப் புகுத்திக் கட்டுண்டு கிடப்பதற்கு அமைதி தேவை. மற்றபடி நாய்சார் சிறுகதைத் தொகுப்பில், என்னுரையில், கூடத்தில், தாழ்வாரத்தில், திண்ணையில்( தற்போது பால்கனியில்) விளைந்தவை என் கதைகள் என்று குறிப்பிட்டுள்ளேன் ?

உங்களுடைய முதல் தொகுப்பு பற்றி கூறுங்கள், எத்தகைய வரவேற்பு இருந்தது?

என்னுடைய முதல் தொகுப்பு உப்புச்சுமை தேநீர் பதிப்பகம் வெளியிட்டது. திருமதி திலகவதி ஐபிஎஸ் அவர்கள் அணிந்துரை வழங்கினார்கள். ஏற்கனவே பிரசுரமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய 14ஆம் ஆண்டு நூலுக்கான போட்டியில் சிறுகதைத்தொகுப்பு முதல் பரிசு வென்றது.

நீங்கள் வாசித்த கதைகளின் பாதிப்பில் எழுதியதுண்டா ?

அப்படி வாசித்த கதைகளின் பாதிப்பில் கதை எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை.

நினைத்த எல்லாவற்றையும் எழுதிட முடிகிறதா?

ஆரம்பத்தில் நினைத்ததை எழுதுவதற்குத் தயக்கம் இருந்தது.  எனது சமீபத்திய கதைகளை வாசித்திருந்தால் அந்த தயக்கத்திலிருந்து விடுபட்டு வந்துவிட்டேன் என்பது புரியும்.

பார்த்த அனுபவப்பட்ட விசயங்களை எழுதுகிறார்களா?  கற்பனையான ஒன்றா?

முழுக்க, முழுக்க கற்பனையாக எழுதுவதைக் காட்டிலும் பார்த்த அல்லது அனுபவப்பட்ட விஷயங்களோடு கொஞ்சம் கற்பனை கலந்து எழுதும் பொழுது அப்புனைவை மனதுக்கு நெருக்கமானதாக உணரமுடியும்.

வாசிக்கும்போது படைப்பு உங்களுக்குத் தந்தது என்ன ?

மேலும் மேலும் வாசிக்க வேண்டுமென்ற தாகத்தை….. நெடுநாள்  பசியால்  வாடியவனுக்கு  உணவு  கிடைத்தால்  பரபரத்து  உண்ணுவானே  அதைப்போல  பரபரத்து  வாசிப்பேன். குமுதத்தையும், ஆனந்த  விகடனையும்  பரஸ்பரம்  மாற்றிக்கொள்ள  பக்கத்துவீட்டு  அக்காவை  எதிர்பார்த்து  வாசலில்  காத்துக் கிடப்பேன்.  அந்தளவுக்கு புத்தகப்புழு  நான்.

யாருடைய கதைகளைப் படித்து எழுதவேண்டும் என்று நினைத்தீர்கள்?

சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் உள்ளது. சிறுவர் மலர், கோகுலம் தொடங்கி ஆனந்தவிகடன், கல்கி குமுதம் வரை ஒன்றுவிடாமல் வாசிப்பேன். இன்னாருடைய கதைகள் என்றில்லாமல் அனைவரது கதைகளையும் படிக்கப் பிடிக்கும். கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு திடீரென எழுத வேண்டுமென்ற எண்ணம் வந்தது. விளையாட்டாக எழுத வந்ததுதான்.

எழுதுவது என்பது உங்களை ஒன்றிலிருந்து விடுவித்துக்கொள்வதா?

நிச்சயமாக. என்னால் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்துக்குள் ஆழப்புகுந்து கொள்வதன் மூலமாக நிகழ் உலகிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன்.  அது ஒரு சுகானுபவம்.

உங்களுடைய கதைகளில் பெரும்பாலும் பெண்களே முதன்மை பாத்திரங்கள், அவர்களுடைய உலகத்தை எழுதுவது பற்றி  ?

பெண் என்பதால் பெண்ணுலகம் அணுக்கமானதாயிருக்கிறது. பெண்ணின் காமம், கோபம், வெட்கம், வேட்கை, ஆத்திரம், சந்தோஷம், துக்கம் முதலான அத்தனை உணர்வுகளையும் அறிந்தவள் நான். அவ்வுணர்வுகளை சாயமேற்றாமல் கதைகளாக  புனைவது எளிதாக உள்ளது

உங்களின் பல கதைகளில் அம்மா அதிகமாக இருக்கிறார்களே ?

அம்மா கதாபாத்திரத்தைக் கதைகளில் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு எழுதுவதில்லை.  அது இயல்பாக கதையில் பொருந்தி விடுகிறது. பட்டில் இழையோடும் சரிகை போல அம்மா கதையில் ஊடாடுகிறாள். உறவுகளோடு இழைந்து கிடப்பவள்தானே அம்மா. மஞ்சள் கிழங்காய் தன்னை இழைத்துக் கொள்பவளும் அவளே.

அம்மா நம் மனதில் ஆழமாக பதிந்து போன உறவு. உணர்வுகளின் பிம்பம். எந்த ஒரு கதையிலும் அம்மா இயல்பாக வந்துவிடுகிறாள். அவளை வலிந்து திணிப்பதில்லை. தென்றல் போல மென்வருடலாக அவள் வருகை என் கதைகளில் அமைந்து விடுவது இயல்பான ஒன்று.  மேலும் நானும் ஒரு அம்மாவாக இருக்கிறேன்

2022- இல் பெண்ணுடைய உலகம் எப்படியிருக்கிறது? நீங்கள் உணர்ந்த மாற்றங்களைச் சொல்லுங்கள்?

நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட இன்றைய பொழுதில் திருமதி. அம்பை அவர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இது மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கக் கூடியதாக உள்ளது. பெண்கள் தனித்தன்மை மிக்கவர்கள். சகல துறைகளிலும் அவர்கள் ஜொலிக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக நான் பெருமிதம் கொள்கிறேன். எங்களாலும் சாதிக்க முடியும் என்று கூறுவதே எனக்கு உடன்பாடில்லாத ஒன்று. நாங்கள் குறைந்தவர்களில்லையே. இனிவரும் காலங்களிலும் உயர, உயர செல்வாள் பெண்

உங்களுடைய சில கதைகளில் இயேசுநாதர் இருகைகளையும் விரித்து ஆசிர்வதிப்பது பற்றிச் சொல்லுங்களேன்?

ஒரே ஒரு கதையில் மட்டுமே அப்படி எழுதியுள்ளேன்.

வட்டிக்கு பணம் கொடுப்பவர் வண்டியில் அடிபட்டு இறப்பார் அந்தக்கதை….

ஆமாம். ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் அது எதேச்சையாக அமைந்தது தான்

கதைகளில் சவாலான குழந்தைகளைப் பற்றி எழுதியிருப்பதை பற்றிச் சொல்லுங்களேன் ?

அப்படிப்பட்ட குழந்தைகளை அருகிலிருந்து பார்த்த அனுபவமுண்டு. அவர்ளது நடவடிக்கைகள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதை கதைகளில் கொண்டு வந்திருக்கிறேன்.

பரவலாக கவனத்தை பெற்ற கதையாக உங்களின் எந்தக் கதையைச் சொல்வீர்கள் ?

கற்றாழை, கூடடைதல்.

எதார்த்தமான கதைகள் உங்களுடையது, கனவுகள் வருமா? கனவுகளை எழுத்தாக்கியிருக்கிறீர்களா?

கனவுகள் வராத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்……  ஆனால் நான் கனவுகளை  கதைகளாக இதுவரை எழுதியதில்லை. என் மன உணர்வுகளையும், பார்த்த பழகிய மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களையும்  கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுகிறேன்.

ஒரு கதைக்காக காத்திருப்பீர்களா? அல்லது ஒரு பணியைப்போல தினமும் ஏதாவது எழுதுவீர்களா ?

இரண்டுமே உண்டு. உட்கார்ந்து யோசித்து எழுதியதும் உண்டு. அம்மாதிரி கதைகளுக்கு முடிவை யோசித்துக்கொண்டு எழுத ஆரம்பிக்க மாட்டேன்.  எழுத எழுத திரை விலகும். முடிவு கிடைக்கும். சிலசமயம் கதைகளுக்காக காத்துக் கிடப்பதும் உண்டு.  இப்போதும் அப்படிதான் காத்து கிடக்கிறேன். பாதியிலேயே கைவிட்ட கதைகளும் உண்டு.

எழுதுவதற்கு முன்பு அந்தக் கதைகளைப்பற்றி உங்களுக்குள் உரையாடுவீர்களா ?

எனக்குள் திரைப்படம் போல விரிந்த கதைகளையெல்லாம் கதைகள் ஆக்கியிருக்கிறேன். மனதுக்குள் சம்பவம் போல காட்சிகள் அரங்கேற்றம் ஆகும். அது ஒரு தனி உலகம். அவ்வுலகில் கதாபாத்திரங்களை உலவ விடுவது ஒரு சுகானுபவம்.

உங்களை தூங்கவிடமால் எழுதசெய்த கதையெதுவும் இருக்கிறதா?

அப்படி தூங்க விடாமல் எழுதச் செய்த கதைகளென்று எதுவுமிருப்பதாக ஞாபகமில்லை. ஆனால் முழு மூச்சாக எழுதி முடித்த குறுநாவல் ஒன்றுக்கு கலைமகள் நடத்திய அமரர் ராமரத்தினம் நினைவுக் குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது.

நீங்கள் எழுதிய நாவல்கள் பற்றிச்சொல்லுங்கள்?

முன்பெல்லாம் கண்மணி மற்றும் பெண்மணி போன்ற வணிக பத்திரிக்கைகளில் நாவல்கள் எழுதி இருக்கிறேன். வணிகப் பத்திரிகைகளுக்கு தகுந்தாற்போல் எழுதும் ஆர்வம் இப்போது போய்விட்டது.

ஏன் ஆர்வம் போய்விட்டது. இதற்கான வாசகப்பரப்பு பெரியது அல்லவா ?

ஆமாம். நிச்சயமாக வாசகப் பரப்பு பெரியதுதான். ஆனால் திடீரென திகட்டி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அதனால் நிறுத்திக்கொண்டேன்.

அப்படியென்றால் இப்போது யாருக்காக எழுதுகிறீர்கள்?

இப்போது எழுதிய கதைகளை வாசித்தபிறகே நீங்கள் கேள்விகள் கேட்கிறீர்கள். ஆக, இந்த வாசகப்பரப்பும் பெரியதுதான். தவிரவும் இப்போது எழுதும் கதைகளின் கதாபாத்திரங்களாக  நான், என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் உணர்கிறேன். இது மனதுக்கு நெருக்கமாக என்னை உணரச் செய்கிறது.

வணிகப்பத்திரிக்கைகளில் கதைக்கென்று பணம் கிடைக்கும், இலக்கியப்பத்திரிக்கைகளில் அப்படிக்கிடைக்காதல்லவா? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முற்றிலும் உண்மை. வணிகப் பத்திரிகைகளில் சன்மானம் கிடைக்கும். இலக்கியப் பத்திரிகைகளில் அது கிடைப்பதில்லை . ஆனாலும் மனம் என்னவோ இலக்கியப் பத்திரிகைகளில் சிறுகதை வெளிவருவதையே மிகவும் விரும்புகிறது.  எனக்கு விருப்பமான இடமாக அதையே நினைக்கிறேன்.

வணிக, இலக்கியப் பத்திரிக்கைகள் உங்களிடம் படைப்புகள் கேட்டு அணுகுவார்களா ? நீங்களே அனுப்புவீர்களா ?

முன்பெல்லாம் அப்படி கேட்டு வாங்கிப் பிரசுரித்ததில்லை.  இப்பொழுதெல்லாம் கேட்கிறார்கள்.

கவிதைகளை வாசிப்பதுண்டா? எழுதியதுண்டா ?

கவிதைகளை விட கதைகள் வாசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று, சும்மா எழுதி பார்த்ததுண்டு. அது எளிதில் கைவரப் பெறவில்லை

தற்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள், எழுத்தாளர்களை குறிப்பிடுங்களேன்?

வண்ணதாசன் அவர்களுடைய ஒரு சிறு இசை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதைய இளம்  எழுத்தாளர்களின் தொகுப்புகளைத் தேடித்தேடி வாங்கி வாசித்திருக்கிறேன். விஜய ராவணனின் நிழற்காடு,  நரனின் கேசம், உமா மகேஸ்வரி அவர்களின் வயலட் ஜன்னல், காரல் மார்க்ஸ் கணபதியின் வருவதற்கு முன்பிருந்த வெயில், சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகள், ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல், கே. என். செந்திலின் அகாலம், பா. சேதுமாதவன் அவர்களின் சிறகிருந்த  காலம் ஆகியவை கடந்த இரண்டு வருடங்களில் நான் வாசித்த சிறுகதைத் தொகுப்புகள். இவற்றினிடையே சுந்தர ராமசாமி அவர்களின் ஒரு புளியமரத்தின் கதை, தி. ஜானகிராமன் அவர்களின் மரப்பசு, அம்மா வந்தாள், நளபாகம், சு. தமிழ்ச்செல்வி அவர்களின் கீதாரி, உமா மகேஸ்வரி அவர்களின் அஞ்சாங்கல் காலம்,  எஸ். ரா அவர்களின் சஞ்சாரம்  ஆகியவற்றையும் முடித்துவிட்டேன். ஒரு சிறு இசையை முடித்தபிறகு வண்ணநிலவன் அவர்களின் எஸ்தர் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கவிருக்கிறேன்.

நீங்கள் இதுவரையில் படித்த சிறுகதைத் தொகுப்புகளில் முக்கியமான தொகுப்புகளைப்பற்றிக் குறிப்பிடுங்களேன் ?

ராம்  தங்கத்தின் திருக்கார்த்தியல் சிறுகதைத்தொகுப்பு மிகவும் மனதை பாதித்தது. அடிமட்டத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்வை அது  உள்ளது உள்ளபடியே சித்தரித்திருந்தது. விஜய ராவணனின் நிழற்காடு  முழுவதும் ஒவ்வொரு விதமான கதைகள் மிகவும் மனதைக் கவர்ந்தது.

உங்களுடைய எழுத்தைப் பற்றி உங்களுடன் உரையாடிய எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிடுங்களேன் ?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதுவரை என்னுடைய எழுத்தைப் பற்றி  எந்த எழுத்தாளரும் உரையாடியதில்லை. எழுத்தாளர் திரு. எஸ்.  சங்கர நாராயணன் அவர்கள் அலைபேசியில் கூப்பிட்டு என்னைப்  பாராட்டியுள்ளார். தமிழினியில் வெளிவந்த கற்றாழை சிறுகதைக்கு  நிறைய எழுத்தாளர்கள் முகநூல் பக்கத்தில் பாராட்டி இருந்தார்கள். திரு. போகன் சங்கர், திரு.ப.தெய்வீகன், திரு.லோகேஷ் ரகுராம், திரு. மயிலன் ஜி. சின்னப்பன்,  திரு.பாவெல்சக்தி ஆகியோர் முகநூல் வழியாக பாராட்டினார்கள். திரு உஷா தீபன்,  திரு செந்தில் ஜெகன்னாதன் ஆகியோர் மெசஞ்சரில் பாராட்டி வாழ்த்துக் கூறினார்கள்.

கற்றாழை சிறுகதைக் குறித்து சமீபத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் எழுத்தாளர் திருமதி லதா அருணாச்சலம் அவர்கள், எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் மற்றும் கவிஞர் மஞ்சுளாதேவி அவர்கள் ஆகியோர் பாராட்டி பேசினர்.

உங்களுடைய கதைகளை முதலில் அங்கீகரித்தவர்கள் யார்? அப்போதைய உங்களின் மனநிலை பற்றிச் சொல்லமுடியுமா?

வணிகப் பத்திரிகைகளுக்கு மட்டுமே முதலில் கதைகளை அனுப்பி வந்தேன் அதனால் அந்த பத்திரிக்கைகளில் மட்டுமே சிறுகதைகள் வெளிவந்தன . பத்திரிகையில் சிறுகதை வெளிவந்ததும் அதன் ஒரு பிரதியை தபாலில் அனுப்புவார்கள். தபால்காரர் பத்திரிக்கையைக் கையில்  கொடுக்கும் பொழுதே சிறுகதை வெளிவந்தது குறித்து அறிந்து கொண்டு மகிழ்ச்சியில் மனம் ஆர்ப்பரிக்கும். அந்த உணர்வை எப்படி கூறுவது என்று புரியவில்லை.  அன்றைய தினம் முழுக்க மனமகிழ்வுடன் சுற்றித் திரிவேன்.

பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் உங்களின் கதைகளை அப்படியே வெளியிடுவார்களா? அல்லது மாற்றங்கள் செய்யச்சொல்லி கேட்பதுண்டா?

பொதுவாக கதைகளைச் சுருக்கவும்,  திருத்தவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று பத்திரிக்கைகளில் குறிப்பிட்டிருப்பார்கள். நிறைய நேரங்களில் சிறுகதைகளையும் சுருக்கி இருப்பார்கள் அல்லது தலைப்பை கூட மாற்றி இருப்பார்கள்.  ஓரிரு தடவைகள் மட்டுமே  எனக்கு அனுப்பி திருத்த சொன்னார்கள்.

உங்களை பொது இடங்களில் எழுத்தாளராக அடையாளம்கண்டு யாராவது உரையாடியிருக்கிறார்களா ?

இதுவரை அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை.

கல்லூரி காலத்தில் பொதுவாக நம்முடைய தனித்திறமைகளை வெளிப்படுத்ததோன்றும். அப்படி கவிதை, கதை என்று எழுதினீர்களா, அல்லது வேறு ஈடுபாடு இருந்ததுண்டா?

பள்ளியிலும், கல்லூரியிலும்  நான்  அமைதியான  பெண்(ஆசிரியர்கள்  மத்தியில்  மட்டும். தோழிகளிடம்  நன்றாக  அரட்டையடிப்பேன்). கலை  அல்லது  விளையாட்டு  சார்ந்த  எதிலும்   நான்  கலந்து  கொண்டது  கிடையாது. படிப்பதில்  மட்டுமே  கவனமிருந்தது. வேறெதிலும்  ஈடுபாடு  கிடையாது.

நீங்கள் படித்த பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் உங்களுடைய புத்தகங்களை ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தியதுண்டா ?

இதுவரை இல்லை.

நீங்கள் படித்த ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு நீங்கள் எழுதுவது தெரியுமல்லவா ?

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எவருக்கும் நான் எழுதுவது தெரியாது. யாருமே இப்போது தொடர்பிலில்லை.   வணிகப் பத்திரிகைகளில் இன்னும் மும்முரமாக எழுதியிருந்தால் தெரிந்திருக்குமோ என்னவோ. இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுவதால் மிக சொற்பமான அளவு நட்புகளுக்கு மட்டுமே நான் எழுதுவது தெரியும்.

குறும்படம், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பதுண்டா ?

குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கச் செல்வோம். நாடகங்கள் பார்ப்பதில்லை.

உங்களுடைய கதைகள் நாடகம் அல்லது குறும்படமாகப்பட்டுள்ளதா ?

இல்லை, அப்படி இதுவரை யோசித்ததில்லை. ஆமாம். சமீபத்தில் தமிழினியில் வெளிவந்த கற்றாழை சிறுகதை வாசித்துவிட்டு ஒருவர் குறும்படம் எடுக்க அருமையான கதை என்று கூறினார்.

உங்களுடைய பயணங்களைப்பற்றிச் சொல்லுங்கள்,  பயணப்படுவதுண்டா ?

நான் home bird. வீட்டை விட்டு வெளியில் செல்ல அதிகம் விரும்பியதில்லை. ஆனாலும் கேரளா, மும்பை, ஹைதரபாத் சென்றிருக்கிறேன்.

பிறருடைய கதைகளை விமர்சன ரீதியாக அணுகியதுண்டா ?

அனுபவித்து வாசித்திருக்கிறேன். பொதுவெளியில் விமர்சித்ததில்லை.

உங்களுடைய கதைகளுக்கு வெளியிடப்பட்ட ஓவியங்கள் குறித்து தோன்றியதைப் பகிருங்களேன் ?

ஓவியங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைவதாகவே எனக்குத் தோன்றுகிறது.  தற்போது சிறுகதைகள் வெளிவரும் இணைய இதழ்களில் நவீன ஓவியங்கள் இடம்பெற்று வருகின்றன. அவை கதைகளுக்குத் தொடர்புள்ளவை போல எனக்குத் தோன்றவில்லை அல்லது எனக்குதான் அவை பற்றிய புரிதலில்லையோ தெரியவில்லை.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களின் கதைகளை வாசிப்பதுண்டா? அப்படி வாசித்தவர்கள் என்ன சொன்னார்கள்?

என் அம்மா, அப்பா,  சகோதரி மற்றும் உறவினர்களில் நிறைய பேர் என் கதைகளை வாசிக்கிறார்கள். தோழிகளும் கூட. எதார்த்தத்தை எழுதும்பொழுது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமிருந்தது. உறவுகளும், நட்புகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் தான் . ஆனால் அவர்களோ அந்தச் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் தங்களோடு அச்சுஅசலாக பொருந்திப் போவதை சொல்லி மகிழ்ந்தபோது    நான் இலகுவானேன்

எழுத்தாளர் ஐ.கிருத்திகா

பரவலாக உங்களுடைய கதைகள் பரிசுகள் பெற்றுள்ளது, அதைப்பற்றிச் சொல்லுங்களேன்?

முன்பெல்லாம் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருப்பேன். போட்டிகளில் கலந்து கொள்ள ஆவல் மிகுதியாயிருக்கும். அதே சமயம் பரிசு கிடைக்காத போது மிகுந்த மன வருத்தத்திற்குள்ளாவேன். பரிசு கிடைத்தால் அவ்வளவு ஆனந்தமாயிருக்கும். வரவர போட்டிகளில் பங்குபெறும் ஆர்வம் குறைந்துவிட்டது.

உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் தற்போது வாசிப்பு பழக்கம் இருக்கிறதா ?

எனது குடும்பத்தில் நிறைய பேர் வாசிப்பவர்கள் உள்ளார்கள். அவர்களே எனது பலம். அதேபோல் தோழிகளும் வாசித்துவிட்டு கருத்து சொல்வார்கள்.

பெண் எளிதாக எழுதிவிடமுடிகிறதா? குடும்ப பொறுப்புகளை ஆண்களை விட பெண்கள்கள்தான் பெரிதும் செய்கின்றனர்… ?

இப்போது நிறைய பெண் எழுத்தாளர்கள் அருமையாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில்  நானும் ஒருத்தி. பெண்ணால் குடும்பப் பொறுப்புகளை சரிவர செய்து, எழுத்திலும் கவனம் செலுத்த   முடியும். இதை நான் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எவ்வளவு சோர்வு ஏற்பட்டாலும் ஒரு கதை எழுதும் பொழுது அவ்வளவையும் தூக்கிப்போட்டு விட்டு இன்னொரு உலகத்தில் புகுந்து கொள்வது புத்துணர்வை அளிக்கிறது.

பலராலும் எழுதிவிடமுடியாது. நீங்க எழுதிட்டிங்க, எங்கோ யாரோ ஒருவர் அடுத்த நூற்றாண்டிலும் வாதித்துக்கொண்டிருக்கப்போகிறார்கள்? இதை எப்படி பார்க்குறிங்க?

அடுத்த நூற்றாண்டிலும் யாரோ ஒருவர் வாதித்துக் கொண்டிருக்கப்பார்கள் என்கிற ரீதியில்  யோசித்தெல்லாம் எழுதவில்லை. ஆரம்பத்தில் என்னைப்பற்றி தெரியாத 100 பேருக்காவது நான்  அறியப்பட வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தேன். அதுபற்றி  இப்போது எண்ணும்பொழுது சிரிப்பு வருகிறது. அது ஒரு குழந்தைத்தனமான நினைப்பு. எழுதுவது தவம் பண்ணுவது போல உள்ளது. அதை விடுத்து என்னால் உயிர் வாழ முடியும் என்று தோன்றவில்லை. எழுதினால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். தவிரவும் இப்பொழுதெல்லாம் பெண்கள் பிரச்சினைகள் பற்றி அதிகமாக எழுதுகிறேன். அது கூட மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.  இது போதுமே.

ஆண்களின் பிரச்சினைகளைப்பற்றி எழுதலாமே?

உண்மைதான். எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கதான் செய்கின்றன. நான்  ஒரு பெண் என்பதால் பெண்ணின் பிரச்சனைகள் குறித்து எழுதுவது எளிதான ஒன்றாயிருக்கிறது

ஆண்களுக்கான உணர்வுகளாக நீங்கள் பார்ப்பது பற்றிச் சொல்லுங்களேன்?

பொதுவாக என்றில்லாமல் நான் பார்த்த ஆண்கள் எதையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் இலகுவாக கடந்து செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய பலமென்றே அதனை நான் கருதுகிறேன்.

எழுதுவதென்பது ரொம்பப் பெரியவிசயமா?

என்னைப் பொறுத்தவரை அது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். என் எழுத்தை நான் நேசிக்கிறேன். என் எழுத்தின் முதல் ரசிகை நான். இதை அடிக்கடி நான் மனதுக்குள் கூறிக் கொள்வேன்.

இந்த ஆண்டில் இவ்வளவு கதைகள் எழுதிடவேண்டும் எனும் திட்டங்கள் இருக்கிறதா?

இல்லை. அந்த மாதிரி திட்டம் எதுவுமில்லை. எப்பொழுதுமே இவ்வளவு எழுத வேண்டுமென்று வருட ஆரம்பத்தில் எந்த ஒரு வரையறையும் வகுத்துக் கொள்வதில்லை.

2022 புத்தக கண்காட்சிக்கு உங்களின் புத்தகம் வெளிவருகிறதா?

இல்லை, ஆகஸ்டில் வெளிவந்தது. Zero degree publishing வெளியீடு.

உங்களுடைய அடுத்தச் சிறுகதை தொகுப்பை எப்போது கொண்டுவரப்போகிறீர்கள்?

இந்த வருடம் நிச்சயமாக ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரலாமென்று இருக்கிறேன்

இந்த வாழ்வில் எது உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது ?

நாளை என்றொரு நாள் இருக்கிறதாய் எண்ணும் அந்த எண்ணம் வாழ்வில் பிடிப்பினையும், நம்பிக்கையையும் தருகிறது.

வாழ்க்கையின் சிக்கல்களுக்கு எழுத்து தீர்வாக இருக்கிறதா?

ஆம் என்றோ இல்லை என்றோ சொல்வதற்கு பதிலாக எழுத்து ஆசுவாசம் தருகிறது என்று கூறலாம். எழுதுவதோ அல்லது வாசிப்பதோ மயிலிறகால் வருடுவது போன்ற ஒரு இதத்தைத் தருகின்றது.

வாசிக்க வாசிக்க நமது அகக்கண் விரிவடைகின்றது, ஞானம் பெருகுகின்றது. எழுத்து எனக்கு சிந்தனை கூர்மையையும், பேச்சில் தெளிவையும் அளித்துள்ளது.

உங்களின் துயரம், மகிழ்ச்சியை எளிதாக கடந்துவிடுவீர்களா?

ஒரு சாமான்யன் எப்படி கடப்பானோ அதைப் போல நானும் கடக்கிறேன்

உங்களுக்கு மன அழுத்தம்வருமா? வந்தால் எப்படி கடக்கிறீர்கள்?

நிச்சயமாக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறேன். இப்போது மூச்சுப் பயிற்சியும், சில முத்திரைகளும் செய்து என்னை நான் இலகுவாக்கிக் கொண்டேன்.

எழுத்து எந்தவிதத்தில்லாவது மன அழுத்தத்திலிருந்து விடுவித்துள்ளதா?

ஆமாம். வாசிப்பதும் சரி, எழுதுவதும் சரி. என்னை வேறு உலகத்துக்கு கூட்டிச்சென்று நிகழ் உலகத்தை மறக்கச் செய்கின்றன . கற்பனையுலகில் சஞ்சரிக்கும்போது கவலைகள் மறந்து போகின்றன. நான் யார் என்பதைக் கூட மறந்து கதாபாத்திரங்களோடு ஐக்கியமாகும்பொழுது முன்பு சொன்னது போலவே அது ஒரு சுகானுபவமாக உள்ளது.  அப்புறம் மன அழுத்தமாவது ஒன்றாவது?

இறை நம்பிக்கையுண்டா?

நிச்சயமாக இருக்கிறது. நேர்மறை சக்தியின் வடிவமாக இறைவனைக் காண்கிறேன்.

நேர்மறை சக்தி – கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாமா?

நான் வணங்கும் கடவுளின் முன் கைகூப்பித் தொழும் பொழுதும், அவரைப்பற்றி எண்ணும் பொழுதும் எனக்குள் நேர்மறையான எண்ணங்கள் அலை, அலையாய் பரவுகின்றன. ஆகையால் அவரை நேர்மறை சக்தியின் உருவகமாக நான் வரித்துக் கொண்டேன்.

எது உங்களை அமைதிபடுத்துகிறது?

நேர்மறை சக்தி இருப்பதாக உறுதியாக எண்ணும் அந்த எண்ணம்தான் என்னை படபடப்பிலிருந்து விடுவிக்கிறது. பயத்தைப் போக்குகிறது, அமைதிப்படுத்துகிறது.

இறை நம்பிக்கை. பதட்டத்தை விலக்கி புத்தியை அங்கு (இறையிடத்தில்)  ஸ்திரப்படுத்துவதால் பதட்டம் தணிந்து அமைதி உண்டாகிறது. நேர்மறை சக்தியின் உருவகமாக இறைவனைக் காண்கிறேனென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் எதையெல்லாம் ரசீப்பீர்கள்?

கண்ணையும், கருத்தையும் கவர்வது எதையும் விட்டு வைப்பதில்லை. கொஞ்சம் ரசிக்கும் மனோபாவம் இருந்தால் போதும்,  எதையும் ரசிக்கலாம் . கதைகளை ரசித்து,  ரசித்து எழுதுவதால்தான் , அவை படிப்பவர்கள் மனதில் இடம் பிடிக்கின்றன என்று நான் எண்ணுகிறேன்

சினிமா பாடல்கள் கேட்பதுண்டா?

கதைகள் படிக்க எவ்வளவு பிடிக்குமோ அதே போல சினிமா பாடல்கள் கேட்கவும் பிடிக்கும். என் சமையல் அறையில் எப்பொழுதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பாடல் கேட்கும் போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது ?

கதை எழுதும் பொழுது எப்படி அந்த கதைக் உலகத்துக்குள் சஞ்சரித்துக் கொண்டிருப்பேனோ  அது போலவே பாடல் உலகிலும் என்னை நான் சஞ்சரித்துக் கொள்வேன். கூட சேர்ந்து பாடுவதும் பிடிக்கும். சுமாராக பாட வரும்

நீங்கள் யார் ?

மனைவி,  அம்மா, மகள், அத்தை, பெரியம்மா என்று  எனக்கு நிறைய முகங்களுண்டு. ஆனால் எழுத்தாளர் என்ற அந்த முகமே எனக்கு மிகவும் மகிழ்வைத் தருகிறது. அதுதான் நான்.

உங்களுடைய ஒரு நாளைப்பற்றிச் சொல்லுங்களேன் ?

தாராளமாக சொல்லலாம். காலையில் ஒரு குடும்பத் தலைவியாய் பொறுப்பாய் சமையல்  செய்வதிலும், பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்புவதிலும்  பரபரப்பாய்  கழியும். அதன்பிறகு மதியம் வரை கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எழுதுவேன், வாசிப்பேன்.  சிறிய மதிய உறக்கத்திற்கு பிறகு மீண்டும் வேலைகள் தொடரும். இரவு உணவுக்குப்பிறகு சிறிது நேரம் கிடைக்கும். அதிலும் எழுதுவோ, வாசிக்கவோ செய்வேன். அது மனநிலையைப் பொறுத்தது.

வாசித்தது, எழுதியது போதும் என்று நினைப்பதுண்டா ?

ஒருபோதும் எண்ணியதேயில்லை

Exit mobile version