மின்கிறுக்கல்

மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்

ஆசிரியர் : ஹரன் பிரசன்னா

சிறு வயதில் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி போன்ற கதைகள் அதிகம் கேட்டிருப்போம். பாட்டி, தாத்தா, பக்கத்து வீட்டு அக்கா என யாராவது ஒருவர் ரூபத்தில் கதைசொல்லிகள் குழந்தைகளுக்கு கிடைத்து விடுவார்கள். ஆனால் இன்றைக்கு அத்தகைய கதைசொல்லிகள் அருகி விட்டார்கள்.பிள்ளைகளுக்கு கதைகள் சொல்ல ஆர்வமுள்ள பெற்றோரும்,   பெரும்பாலும் கதைப் புத்தகங்களையே துணைக்கு அழைக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் சுதா மூர்த்தி எழுதிய ” Grandma’s bag of stories ” படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நாள்களுக்குப் பிறகு குழந்தைப் பருவ உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஆனால் இதே போல் தமிழில் நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த விதமான கதைகள் நம் பிள்ளைகளுக்குச் சொல்லக் கிடைப்பதில்லையே என்கிற ஏக்கமும் கூடவேத் தோன்றியது.

அப்போது தான் அதிர்ஷ்டவசமாக ஹரன் பிரசன்னா வின் இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது. தலைப்பே என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

முன்னுரையில் ஹரன் குறிப்பிடுவது போல இன்று மூட நம்பிக்கைகள் களைகிறோம் என்று practical life  பேசும் மேற்கத்திய சிந்தனைகளை அதிகம் சிறுவர் கதைகளுக்குள் புகுத்தி விட்டோம். இந்திய மரபில் காலம்காலமாக வந்த மாயாஜால கதைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, மிகத் தெளிவான கட்டமைப்பு கொண்ட கதைகளை சிறுவர்களுக்கு கூறுகிறோம். இது அவர்களின் கற்பனை விரிவாக்கத்திற்கு சிறிதும் உதவாது.

அப்படியே மாயாஜால கதைகள் கூறினாலும் அவையும் ஆங்கில fairy tales வகையாக மட்டுமே உள்ளன. நமக்கு பல காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகளைப் பிற்போக்குத்தனமானவை எனக் கூறி ஒதுக்கப்பட்டுவிட்டன.

மந்திர தந்திரங்கள் மாய உலகங்கள் நிறந்த கதைகளை இங்கே மூத்தாப்பாட்டி சொல்கிறாள். ஒரு ஊரே அவள் கதைகளைக் கேட்க தினமும் திரள்கிறது.

நூறு பாம்புக் குட்டிகளுக்கு அண்ணனாகும் நாகண்ணன், தவளையான பின்னும் தன் நடனத்தை நிறுத்தாத நர்த்தகி, நிழலைத் தொலைத்து விட்டு தேடும் விச்சாயன், தாமரை மலர் எறிந்து ஒரு நதியையே வற்ற வைத்து விடும் தாயம்மா என ஒவ்வொரு கதையிலும் குழந்தைகளை உற்சாகமூட்டும் ஸ்வாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

கதைகளின் முடிவில் மூத்தாபாட்டி சொல்வது போல்” கதைக்கு கால் இல்லை ” வகைக் கதைகள் தான் அனைத்துமே. அவை ஒவ்வொன்றும் பிள்ளைகளின் கற்பனைச் சிறகை விரியச் செய்வதற்காக மட்டுமே. எந்தவொரு நீதியையும் போதிப்பவை அல்ல.

கதைகளே குழந்தைகளை வளர்த்தெடுப்பவை. கதை கேட்டு வளரும் ஒவ்வொரு குழந்தையும் அதிர்ஷடசாலிகள். இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் குழந்தைகள் நிச்சயம் விரும்பவர். பெரியவர்கள் படித்து சுவையுறக் கூறினால், அவர்களின் கற்பனைத் திறனுக்கு நல்ல தீனியாக அமையும்.

இந்தப் புத்தகம் கிண்டிலில் வாசிக்கக் கிடைக்கிறது.

Exit mobile version