இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். மாசு அதிகாரத்தில் பலவிதமான தூசுகளைப் பற்றியும் இதுவரை பார்த்துக்கொண்டு வந்தோம். இந்த தூசுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மாசு பட்டவுடன் ஒரு உயிர் எவ்வாறு உண்டாகிறது என்பதை இந்த பகுதியில் காணப்போகிறோம்.
உயிரின் தொடக்கம்
ஒரு உயிர் உருவாவதற்கு முதலில் அதற்கு தகுந்த ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும். உங்கள் உலகம் உருவாகுவதற்கு முன்னால் சூரியனிலிருந்து வெளிப்பட்ட ஒருதுளி நெருப்புக் குழம்பாக தான் இருந்தது. அதன் மேற்பரப்பை குளிர்வித்து மிதமான வெப்பநிலை உடைய ஒரு இடமாக மாற்றுவதற்கு முதல் தேவை தொடர்ச்சியான மழை தான். ஆனால் மழை உருவாவதற்கு முதலில் மேகங்கள் தேவைப்படும். அந்த மேகங்கள் எவ்வாறு உருவானது தெரியுமா? பூமியின் தொடக்கத்தில் இருந்த ஏகப்பட்ட எரிமலைகள் வெடித்து சிதறும் போது அதிலிருந்து எரிமலை சாம்பல் தொடர்ச்சியாக வெளிப்பட்டது. இந்த எரிமலை சாம்பல் புகை மண்டலமாக மொத்த உலகத்தையே சுற்றி கொண்டவுடன் சூரிய ஒளி பூமிக்குள் போகாமல் அதனால் பூமி மேற்கொண்டு வெப்பம் அடையாமல் இருந்தது. இந்த நிலைமையில் காற்றிலிருந்த நீராவி குளிர்ச்சியடைந்து எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை மண்டலத்துடன் ஒட்டிக்கொண்டு சிறிது சிறிதாக மழைமேகம் ஆக மாறியது. மழை மேகங்களில் ஈரப்பதம் மிகவும் அதிகமாக கூடிய உடன் பூமி முழுவதும் ஒரு அபரிமிதமான மழை கொட்டத் தொடங்கியது. இந்த நிகழ்வால் பூமியின் மேற்பரப்பு குளிர்ந்து உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதியாக மாறியது. ஒருவேளை எரிமலைகளில் இருந்து புகை மண்டலமும் தூசியும் வெளியாகவில்லை என்றால் மேகங்களும் மழையும் உலகில் உருவாகி இருக்கவே முடியாது. அதன் விளைவாக பூமி உயிர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற ஒரு இடமாக கூட மாறியிருக்கலாம்!
சரி. தூசியினால் ஏற்பட்ட மேகங்கள் மழையினை உண்டாக்கி மேற்பரப்பை குளிர்விக்கலாம். ஆனால் குளிர்ந்த மேற்பரப்பில் உயிர்கள் உருவாவதற்கு தேவையான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வேண்டும். அதற்கு என்ன வழி? அதற்கும் தூசுகள் தான் உதவும். எரிமலைக் குழம்புகளில் இருந்து வரும் புகை மண்டலத்தில் அபரிமிதமான தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் அது வெடிக்கும் இடத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு எரிமலை வெடித்து அதிலிருந்து புகை கிளம்பும் பொழுது சில நாட்களிலேயே அந்த புகை உலகம் முழுவதும் தாதுப்பொருட்களை தூசாக மாற்றி சிதற விட்டுவிடும். இதனை சமீபகாலமாகத்தான் உங்கள் விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டினார்கள். பூமியின் சுழற்சியால் ஒரு இடத்தில் கிளம்பும் தூசு சிலநாட்களிலேயே உலகம் முழுவதும் பரவி விடுகிறது. இதில் உயிர் உருவாவதற்கு முக்கியமான கரி, கந்தகம், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் முதலிய தாதுக்கள் அனைத்தும் வெளிவருகிறது.
மிகவும் கனமான மழையினால் குளிர்ந்த பூமியின் மேற்பரப்பு அதற்கடுத்த தூசு புயலால் முழுவதும் செழிப்பு அடைகிறது. நான் மேற்கூறிய இரண்டும் உண்டான உடன் தூசுக்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து ஒரு குழுவாக மாறுகிறது. இப்படிப்பட்ட குழுவுக்கு ஆரம்பத்தில் உயிர் இல்லை என்றாலும் உயிர் தொடங்குவதற்கு இதுதான் கருவானது. உங்கள் வீட்டில் கொழுக்கட்டை போன்ற பலகாரங்கள் செய்வதற்கு அச்சு பயன்படுத்துவார்கள் அல்லவா? அந்த ஆட்சிக்குள் மாவை செலுத்தி பின்பு வெளியே எடுத்தால் அதன் உருவம் அதுபோலவே மாறி இருக்கும். அதுபோலவே உலகில் நிறைந்துள்ள தாதுக்கள் நிரம்பிய தூசியை வேறு ஒரு பொருளாக அச்சில் ஏற்றும் அமிலம் உண்டு உருவாகியது. அந்த அமிலத்தின் பெயர்தான் ரிபோ நியூக்ளிக் ஆசிட். இதனை RNA என்று கூறுவார்கள். வெறும் தாதுக்கள் மற்றும் நிரம்பிய உலகில் முதல் மாசாக இந்த அமிலம் தோன்றியவுடன் உங்கள் உலகில் பல்வேறு புதிய பொருட்கள் உருவாகின. இந்தப் பொருட்கள் யாவும் தன்னை சுற்றியுள்ள தாதுக்களை உள்வாங்கிக்கொண்டு தன்னைப்போலவே புதிய அச்சுக்களை உருவாக்க ஆரம்பித்தன. இந்தச் அச்சுக்களுக்கு நீங்கள் வைத்த பெயர்தான் உயிர்! முதலில் RNA எனப்படும் அமிலத்தின் மூலமாக உருவாக்கிய உயிர்கள் பின்பு பரிணாம வளர்ச்சியில் DNA எனப்படும் மேம்பட்ட புதிய அமிலத்தின் துணைகொண்டு மனிதர்கள் போன்ற முதுகெலும்புள்ள மேம்பட்ட உயிரினங்களை கூட உருவாக்க ஆரம்பித்தன! ஒரு மாசு தூசி இன் துணைகொண்டு உருவாக்கும் பொருட்கள் தான் நீங்கள் அனைவரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாசுபாடு இவ்வளவு நன்மைகளை கொடுக்கக் கூடியது என்றால் கூட இதனால் ஏற்படும் விபரீதங்கள் ஏராளம். இதனை அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.