மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 15

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் உண்டி அதிகாரத்தில் தொடர்ச்சியாக உணவைப் பற்றிய பல்வேறு விஷயங்களை கூறிக்கொண்டு வருகிறேன். உயிரினங்களுக்கும் உயிரில்லாப் பொருட்களுக்கும் கூட உணவு எவ்வாறு தேவைப்படுகிறது என்பதை சென்ற பகுதிகளில் கூறியுள்ளேன். உடலுக்கு எவ்வாறு உணவு தேவைப்படுகிறதோ அதுபோலவே மனதுக்கும் உணவு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் நீங்கள் சாப்பிடும் திட உணவைப்ப் போன்று மனதின் உணவை எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை. இங்கே அதைப்  பற்றி கூறிவிட்டு இந்த அதிகாரத்தை  முடித்துக்கொள்கிறேன்.

போதையின் தேவை 

உலகில் உள்ள சில பொருட்களை நீங்கள் போதைப் பொருட்கள் என்று கூறுகிறீர்கள் அல்லவா? போதைப்பொருள் என்று நீங்கள் கூறும் எந்த ஒரு பொருளும் உங்களுக்கு நேரடியாக போதை மயக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அப்படியானால் போதை எவ்வாறு ஏற்படுகிறது? அதற்கும் மனதுக்கும் என்ன தொடர்பு என்பதை தெரிந்து கொண்டால் மனதின் உணவைப் பற்றி நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியுமா? கூறுகிறேன் கேளுங்கள்.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விலங்கினங்களுக்கும் மூளை என்னும் உறுப்பு உடலில் உள்ளது. அந்த மூளையில் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் நியோகார்ட்டெக்ஸ் (NeoCortex) எனும் பகுதியை ஒட்டியுள்ள அதிகப்படியான ஒரு சிறு அங்கம் மட்டும்தான். இதனால் தான் மனிதனுக்கு ஆறறிவு என்றும் மிருகங்களுக்கு ஐந்தறிவு என்றும் கூறுகிறீர்கள். உங்கள் மனதில் ஏற்படும் ஒவ்வொரு விதமான உணர்வையும் மூளையில் உள்ள ஏதோ ஒரு ரசாயனம் தான் தூண்டுகிறது. அந்த ரசாயனத்தை உருவாக்குவதும் மூளையில் உள்ள சுரப்பிகள் தான்.  உதாரணமாக, சந்தோஷம் எனும் உணர்வை டோபமைன்(Dopamine) எனும் ரசாயனம் உருவாக்குகிறது. அன்பு, பயம், கோபம் போன்ற பல்வேறு குணாதிசயங்களையும் இதுபோன்ற சுரப்பிகள் உருவாக்குகின்றன. இந்த சுரப்பிகள் தான் உங்கள் மனதின் உணவை தயாரித்து வழங்குகிறது. இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்த சுரப்பியை அவ்வளவு எளிதாக உங்களால் கட்டுப்படுத்த முடியாது. வாயில் சுரக்கும் உமிழ்நீரை சுரக்கும் சுரப்பி யை உங்களால் எளிதாக கட்டுபடுத்த முடியும். ஆனால் இந்த உணர்வு சுரப்பிகளை கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு நேரடி சக்தி கிடையாது. அதனால் உணவின் வழியாக இந்த சுரப்பியை கட்டுப்படுத்தும் முறையை அறிந்து கொண்டீர்கள். 

உடலுக்கு சக்தி தரும் எந்த உணவை சாப்பிட்டாலும் டோபமைன் சுரப்பி சிறிதளவு உங்கள் மூளையில் சுரக்கும். நீங்கள் சாப்பிடும் உணவையே சற்று அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் ஒரு மந்தகாச உணர்வுக்கு இதுதான் காரணம். அப்படியானால் விறகு போன்று மெதுவாக எரியும் உணவான அரிசி, கோதுமையை சாப்பிட்டால் மெதுவாகத்தான் உங்களுக்கு அந்த சுரப்பி சுரக்கும். அதேசமயம், பெட்ரோல் மண்ணெண்ணெய் போன்ற குணமுடைய மதுபானத்தை அருந்தினால் உடலில் உடனடியாக எரிந்து சக்தி உச்சத்தை அடையும். அதனால் கட்டுக்கடங்காமல் டோபமைன் சுரந்து உங்களுக்கு ஒரு சந்தோஷமான உணர்வை கொடுக்கலாம். இதற்குப் பெயர்தான் போதை. இந்த போதையை கொடுப்பதற்கு இன்னொரு வழியும் உள்ளது. மூளையில் உள்ள சுரப்பி உருவாக்கும் ரசாயனத்தை செயற்கையாக தயாரித்து உட்கொண்டால் அதற்கும் பலன் கிடைக்கும் அல்லவா? புகையிலை தொடங்கி பல்வேறு விதமான லாகிரி வஸ்துக்களும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இதனை சாப்பிடும் அளவு மட்டும் தான். மூளையில் மிகவும் குறைவாக சுரக்கும் அமிலங்களை அபரிமிதமாக உருவாக்குவதற்கு உண்டான பொருட்களை உட்கொள்வதால் தீவிரமான பக்கவிளைவுகளும் உண்டாகும்.

இந்தப் போதை தரும் உணவு பழக்கத்தை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு சந்தோஷம், கோபம் போன்ற அனைத்து உணர்வுகளும் ஏற்படுகிறதா என்ன? இல்லவே இல்லை. இயற்கையாகவே இதில் எந்த குணத்தையே வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தால் அந்த சுரப்பி தானாகவே சுரக்க ஆரம்பித்து விடும். அதற்கு அதிகமாக உழைக்கவேண்டும் என்ற காரணத்தினால் உணவு மூலம் நீங்கள் இந்த குறுக்கு வழியை கண்டுபிடித்தீர்கள். அப்படிப்பட்ட பொருட்களை தவறாக பயன்படுத்தினால் உடலின் வயது எப்படி அதிகமாகிக்கொண்டே போகும் என்பதை சென்ற அதிகாரத்திலேயே நான் கூறியிருந்தேன். உடலின் வயது அதிகரித்தால் கூட பரவாயில்லை என்று உள்ளத்தின் உணவை தவறான முறையில் எடுத்துக் கொள்ள முன்வருகிறீர்கள் என்பதிலிருந்தே உள்ளத்துக்கான உணவு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உள்ளத்தின் உணவு

உள்ளத்தின் உணவு என்ன என்பதையும் அது எவ்வளவு முக்கியம் என்பதையும் பார்த்தாகிவிட்டது. இந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளும் வழிமுறை என்ன? இதற்கான வழிமுறைகள் ஏராளம். தாயின் மடியில் தேவைப்படும் நேரத்தில் எவ்வாறு சரியாகப் பால் சுரக்கிறதோ அது போலவே உங்கள் உடலுக்கும் சரியான நேரத்தில் எந்த சுரப்பியை சுரக்க வைக்க வேண்டும் என்று கண்டிப்பாகத் தெரியும். அதனை மறக்கடிக்கும் அளவிற்கு உங்களாலேயே உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை சேற்றில் சிக்கிக் கொள்வதால் உங்கள் அறிவிலிருந்து அது மறைந்து போகிறது. 

ஆடு மாடு போன்ற விலங்கினங்களுக்கு மூளையில் இல்லாத நியோகார்டெக்ஸ் பகுதி மனிதனுக்கு பரிணாம வளர்ச்சியில் உண்டானதால் மனிதனால் அதிகமாக சிந்திக்க முடிகிறது. ஆனால் அந்த அதிக சிந்தனையே மனதை பாதிக்கும் பொழுது அந்த பரிணாம வளர்ச்சி அடிபட்டுப் போகிறது. இதை சரி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இரண்டு வகைப்படுகிறது. முதலாவதாக மனமென்னும் ஒன்றையே மறக்கடித்து விடுவது. உதாரணமாக, சிலருக்கு தொடர்ந்து வாகனத்தை ஓட்டிக் கொண்டே இருந்தால் அமைதியாக இருக்கும். காரணம், வாகனம் ஓட்டும் பொழுது மனம் ஒரு நிலைப்பட்டு அமைதியாக இருக்கிறது. பிரார்த்தனை, மூச்சுப்பயிற்சி, யோகம் போன்றவைகூட இதே வகையில் செயல்படும். பெரும்பாலானவர்கள் இந்த வழியைக் கொண்டு தான் மனதை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இரண்டாவதாக, மனதை ஒருமுகப்படுத்த தேவையில்லாமல் மனதை தேவையான சமயத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவியாக மாற்றி உணர்வுகளையும் அது சார்ந்த சுரப்பிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்பவர்கள். தீவிரமான மன பயிற்சியை மேற்கொள்பவர்களால் மட்டும்தான் இது முடியும். நீங்கள் சாப்பிடும் உணவு முறையில் எப்படி ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்து உங்களுக்கு தேவையான உடலை வளர்த்துக் கொள்கிறீர்களோ அதேபோல  மனதையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வந்து அதற்குத் தேவையான உணர்வுகளை மட்டும் வரவழைக்கும் முயற்சி செய்து சாதிக்க முடியும். உடலுக்கு தேவையான உணவை சரியான முறையில் எடுத்துக்கொள்பவர்களால் ஒரு வீரனாக முடியும். ஆனால் மனதிற்கு தேவையான உணவை எடுத்துக் கொள்பவர்கள் மகாத்மா ( மகா +  ஆத்மா = வலிமையான மனது) ஆகிறார்கள். இதற்கான தேடலும் முயற்சியும் உங்கள் கையில்தான் உள்ளது. முயற்சி செய்து பாருங்களேன். 

கடந்த ஐந்து பகுதிகளாக கூறிவந்த உண்டி அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version