இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுடன் கூறிக்கொண்டு வருகிறேன். சென்ற பகுதியுடன் ஊழி அதிகாரத்தை நிறைவு செய்து, இன்று முதல் உண்டி அதிகாரத்தை தொடங்குகிறேன். உண்டி அல்லது உணவு என்று கூறினால், மனதில் உங்களுக்கு பிடித்தமான அறுசுவை உணவுகள் தோன்றலாம். நான் இங்கே கூறப்போகும் உணவு அது மட்டுமல்ல. இந்த அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு உணவு தேவைப்படுகிறது. அதில் மனிதர்கள் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். சூரியனுக்கு ஹைட்ரஜன் எனும் உணவு கிடைப்பதால் தான் அது தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சூரியனுடைய பிரகாசத்தால் தான் உங்கள் மொத்த உலகமும் இயங்குகிறது என்பதால் உங்கள் உலகத்தின் முதல் உணவு சூரிய ஒளி மட்டும் தான். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் எது உணவு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அப்படி சொல்லிக் கொண்டிருந்தால், ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டே இருக்கும். அதனால் நான் இங்கு உணவின் அடிப்படை கோட்பாட்டையும் எடுத்துக்காட்டாக சில விஷயங்களை மட்டும் உங்களுக்கு கூற போகிறேன். உண்டி அதிகாரத்தை ஆரம்பிக்கலாமா?
உணவு என்றால் என்ன?
அண்டத்தில் எந்த ஒரு செயலுமே தன்னிச்சையாக நடப்பதில்லை. இங்கே நடக்கும் அனைத்து செயல்களையும் உள்ளீடு(Input) -> செயல்பாடு(Process) -> வெளியீடு(Output) எனும் கோட்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம். இந்த கோட்பாட்டில், உள்ளீடாக செயல்படும் அனேக விஷயங்களை உணவு என்றும் கூறலாம். ஒரு மனிதனுக்கு சாப்பிடும் சாப்பாடு மட்டும்தான் உணவா? இல்லவே இல்லை. நீங்கள் சாப்பிடும் சாப்பாடு உங்கள் மூச்சுக்காற்றில் இருக்கும் ஆக்சிஜனின் துணையால் தான் சக்தியாக உடம்பில் போய் சேர்கிறது. ஆகவே மூச்சுக்காற்று கூட உங்களுக்கு உணவு தான். அது மட்டுமல்ல, நீங்கள் நுகரும் வாசனை, கேட்கும் ஒலிகள், பார்க்கும் பார்வை இவை அனைத்துமே ஒரு உணவாக தான் இருக்கிறது. மனிதன், சூரியன் போன்றவை பார்ப்பதற்கு இயங்கிக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. அதனால், அவை அனைத்துக்கும் உணவு தேவைப்படும் என்று வைத்துக் கொள்ளலாம். இயங்காத ஜடப்பபொருட்களுக்கும் உணவு தேவையா?
பூமியில் பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய உயிரினங்களான செடி கொடிகள், கடல் பாசி மற்றும் உயிரினங்கள் கடல்கோள் சீற்றத்தால் மடிந்து பூமியின் பல கிலோ மீட்டர் ஆழத்தில் புதைந்து போய்விட்டது. பூமியின் அடியில் இருக்கும் அதிக அழுத்தத்தால் அது காற்றுக் கூட புக முடியாத அளவிற்கு ஒரு சிறிய இடத்தில் அடைபட்டது. இங்கே எந்த ஒரு உயிரினத்திற்கும் சுவாசிப்பதற்குக் கூட முடியாது. வேறு எதுவும் உணவாக கிடைக்காததால், அங்கே கிடைக்கும் அழுத்தத்தை மட்டுமே உணவாகக் கொண்டு அந்த உயிரிழந்த உயிரினங்கள் ஒரு புதுவிதமான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டன. இதற்கு நீங்கள் வைத்த பெயர் காற்றில்லா சுவாசம் (Anaerobic respiration). காற்று இல்லையென்றாலும், இறந்த உயிரணுக்களில் உள்ள பொருட்களை வைத்துக்கொண்டே சுவாசிக்கும் முறை தான் இது. இந்த செயல் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இறுதியில் உருமாற்றம் அடைந்து, இறந்த உயிரினங்கள் உருமாறும் பொருளுக்கு பெயர்தான் கச்சாஎண்ணெய் (Crude oil). கச்சா எண்ணெயிலிருந்து தான் நீங்கள் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், மெழுகு போன்ற பொருட்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள். இப்போது புரிகிறதா உணவு என்பது உயிரினங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் மட்டும் பொதுவானது அல்ல. இங்கே உள்ள அனைத்து விதமான பொருட்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உணவு தேவைப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
உடலின் உணவு
உணவு என்றால் உங்களுக்கு முதலில் தோன்றக்கூடியது, நீங்கள் சாப்பிடக் கூடிய உணவு வகைகள் தான். புரிந்து கொள்ள எளிமையாக இருப்பதால் இங்கிருந்தே தொடங்கி நம் உணவை பற்றிய பயணத்தை மேற்கொள்வோம். நீங்கள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உணவின் மூலமாக உங்கள் இயக்கத்திற்கான அனைத்து சக்தியும் கிடைக்கிறது. நீங்கள் சாப்பிடும் உணவு உங்களுடைய இயக்க சக்தியாக எப்படி மாறுகிறது என்கிற பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு காய்ந்த விறகு நெருப்பு பற்ற வைத்தால் உடனடியாக எப்படி வெப்பத்தையும் நெருப்பையும் உண்டாக்குமோ, உங்கள் உடம்பும் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு செயல் முறையைத்தான் பின்பற்றுகிறது. காய்ந்த விறகு எரியும் பொழுது அதன் உள்ளே இருக்கும் கார்பன் அணுக்களை காற்றில் உள்ள ஆக்சிஜன் அணுக்களுடன் சேர்ப்பதற்கு முயற்சி செய்கிறது. இந்த சேர்க்கையினால் உருவாகும் வெப்பம் தான் நீங்கள் பார்க்கும் நெருப்பு. உங்கள் உடலிலும் இதேபோல் சுவாசிக்கும் பொழுது ஆக்ஸிஜன் உள்ளே சென்று நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கார்பன் அணுக்களுடன் கலந்து கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறது. அப்போது உருவாகும் ஆற்றல்தான் உங்களை இயக்குகிறது.
அப்படியானால் மாவுச்சத்து(Carbohydrates), புரதச்சத்து(Proteins), கொழுப்புச்சத்து(Fat), உயிர்ச்சத்து(Vitamins) போன்ற பல்வேறு தேவைகள் உணவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்களே? உண்மைதான். ஒரு சாதாரண நான்கு சக்கர வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வாகனத்தின் உணவாக(எரிபொருள்) பெட்ரோல், டீசல் அல்லது மண்ணெண்ணை போன்ற ஒரே ஒரு பொருள் பத்தாதா? ஆனால் பெட்ரோல், இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில் போன்ற பல்வேறு எண்ணெய்களும் ஒரே சமயத்தில் தேவைப்படுகிறது. இந்த எண்ணெய்கள் அனைத்துமே கார்பன் மூலக்கூறுகளால் செய்யப்பட்டால் கூட ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பண்புகள் உள்ளன. பெட்ரோல் போன்ற எண்ணெய் உடனடியாக எரிந்து சக்தியாக மாறும். ஆனால் இஞ்சின் ஆயில் மிகவும் மெதுவாக எரிந்து வாகனத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. உங்கள் உடல் கூட கிட்டத்தட்ட இதே போல தான். பல்வேறு சத்துக்கள் இருந்தாலும் அவை அனைத்திற்கும் மூலம் கார்பன் அணுக்கள் மட்டும்தான். கார்பன் அணுக்கள், வெவ்வேறு பொருட்களுடன் ஒன்று சேர்வது மூலமாக அவற்றின் பண்புகள் மிகவும் மாறுபடும். நீங்கள் வாழ்வின் உயிர்சக்தி என்று கூறிக்கொள்ளும் குளுக்கோஸ் ஆனது கார்பன் மூலக்கூறுகளுடன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களின் சேர்க்கை உள்ள ஒரு பொருள். அதேசமயம் சயனைடு எனப்படும் கொடிய விஷமானது கார்பனுடன் நைட்ரஜன் சேர்ந்த ஒரு கலவையாகும். இப்படி வெவ்வேறு குணங்கள் உள்ள கார்பன் மூலக்கூறுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதுதான் விதவிதமான சத்துக்கள் எனப்படுகிறது.
உடலுக்குத் தேவையான மேற்கூறிய சத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு மாத்திரை வடிவில் கூட கிடைக்கிறது. அப்படியானால் எவ்வளவு தேவையோ அவ்வளவு மாத்திரைகளை மட்டும் தினமும் விழுங்கிவிட்டால் உங்கள் உணவுப் பிரச்சனை தீர்ந்து விடுமா? கண்டிப்பாகத் தீராது. உடல், உணவை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பது புரிந்தால் தான் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும். உடலோடு உணவுக்கு இருக்கும் வரலாற்றுடன் பல்வேறு ரகசியங்களையும் உங்களுக்கு அடுத்த பகுதியில் கூறப்போகிறேன். காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.