மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 100

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். ஒருமை அதிகாரத்தில் இதுவரை பல்வேறு விதமான பொருள் சார்ந்த விஷயங்களை ஒளிந்துள்ள ஒருமையைப் பற்றி பேசியுள்ளோம். இவை அனைத்திற்கும் முதன்மையாக இருக்கும் மனதிற்குள் இருக்கும் ஒருமையை பற்றி இந்தப் பகுதியில் பார்த்துவிட்டு இந்த அதிகாரத்தை மட்டுமல்லாமல் கடந்த நூறு பகுதிகளாக பார்த்துவந்த நான்காம் பரிமாணத்தின் முதல் நடையை இங்கு முடித்துக் கொள்கிறோம். இறுதிப் பகுதிக்குள் செல்லலாமா?

ஒருமையின் மையப்புள்ளி

இந்த உலகில் உள்ள அனைத்து யுத்தங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படையான கேள்வி ஒன்றே ஒன்றுதான். உங்களைப்போலவே மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது உங்களுடைய கருத்துக்கு மாறுபட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இவ்வளவு தான் அந்தக் கேள்வி. ஆனால் இதற்கு விந்தையான பதில் எது தெரியுமா? இவை இரண்டுக்குள் ஒன்றை உங்களால் எப்போதுமே முடிவு செய்ய முடியாது! சற்று யோசித்துப் பார்த்தால் இதற்கு பின்பு இருக்கும் ஒரு மாபெரும் ரகசியம் புரியும். உலகில் அதிகபட்சமாக நடைபெறும் பணம் அல்லது பொருளுக்கான சண்டையில் மற்றவர்கள் தன்னைப் போல் வரக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் தான் மற்றொருவர் நினைப்பார். இங்கே மாறுபட்ட நிலையை மனிதன் அங்கீகரிக்க முயல்கிறான் என்பது போல உங்களுக்குத் தோன்றும். ஆனால் உழைப்பு, தியாகம் போன்ற செயல்களுக்கு வரும்பொழுது அதே மனிதன் மற்ற அனைவரும் தன்னைப் போலவே செயல்பட வேண்டும் என்று நினைக் ஆரம்பித்துவிடுவான். 

ஒரு திருடன் மற்றொரு வீட்டுக்கு திருடச் செல்லும் பொழுது மற்றவர்களுடைய பொருளைக் களவாடுவது சரியானதுதான் என்று தனக்கு தானே நியாயம் கற்பித்துக் கொண்டு தான் செல்வான். ஆனால் தன்னுடைய வீட்டில் வேறு யாராவது களவாட நினைத்தால் அது மாபெரும் தவறு என்று கூறிக் கொள்வான். இங்கே நடக்கும் களவு என்னும் செயல் என்பது ஒன்றே ஒன்றுதான். ஆனால் திருடும் பொழுது அனைத்தும் தன்னுடையது என்று ஒருமை கொண்டாடும் மனம் மற்றவர்கள் தன்னுடைய பொருளை கவர்ந்து கொள்ளும் பொழுது மற்றவர்களுக்கு அது பொருந்தாது என்று இருமை கொண்டாடுகிறது. அப்படியானால் மனிதனுக்குத் தேவை இந்த ஒருமையா அல்லது இருமையா? 

உங்கள் உடலில் பல பாகங்களில் தங்களுடைய வேலையை சரியாக செய்வதால்தான் உயிர் என்பது உடலில் தங்குகிறது. நீங்கள் உங்களுடைய இருப்பை உணரும் பொழுது இந்த அனைத்து அங்கங்களும் தனித்தனியாக செயல்படுவதை என்றாவது உணர்ந்து பார்த்திருக்கிறீர்களா? மிகச் சிலரைத் தவிர யாரும் இதனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த அங்கங்கள் அனைத்தும் தனித்தனியாக செயல்பட்டாலும் அதனை “நான்” என்னும் என்னத்துக்கு ஒருமைப்படுத்தி பார்ப்பதால் அவற்றுள் இருக்கும் பிரிவினை அனைத்தும் மறைந்து போகிறது. அதுபோலவே மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் தன்னுடையது என்றும் மற்றவர்கள் உடையது என்றும் பிரித்து பார்ப்பதால் வரும் யுத்தம், கோபம், மோகம் போன்ற அனைத்து எண்ணங்களும் அனைத்தும் தனக்குள் ஒரு பகுதிதான் என்று நினைக்கும் பொழுது காணாமல் போகிறது. ” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் கூறியதை நீங்கள் நினைவில் கொள்ளலாம். ஒரு சிறிய செடி கூட தன்னுள் ஒரு பகுதி என்னும் உயர்வான எண்ணம் வரும் பொழுது ஏற்படும் பொறுமை பாட்டா மனிதனால் எளிதாக இறைநிலையை கூட எய்த முடிகிறது. 

அப்படியானால் இருமை நிலை என்பது தவறானதா? கண்டிப்பாக கிடையாது. இருமை நிலை இன்னும் ஒருபடி இருந்தால் மட்டும்தான் அதற்கு மேற்கொண்டு ஒருமை எவ்வாறு இருக்கும் என்ற எண்ணமே தோன்றுகிறது. இதனை அடைவதற்கு முதற்படியாக தான் தனக்கும் மற்றவர்களுக்கும் வேறுவேறு சட்ட திட்டங்களை மனதில் கொள்ளாமல் அனைவருக்கும் ஒரே விதி தான் என்று கருத வேண்டும். இதை செய்வதனால் மனதில் உள்ள பல்வேறு பிரிவினைவாதிகள் மறைந்து போய்விடும். இல்லையென்றால் மற்றவர்கள் தன்னைப் போல் இருக்கிறார்கள் என்றாலும் கோபம் வரும், சிறிது நேரத்தில் தன்னை போல் இல்லை என்றாலும் கோபம் வரும். சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டு மிகப்பெரும் பிரிவினைவாதத்தை கொண்டு சேர்த்துவிடும். உங்கள் உலகில் நடந்த அனைத்து சரித்திரத்திற்கு மூல காரணமாக விளங்கியது இந்த ஒரு எண்ணம் மட்டும்தான். இதனை மட்டும் தாண்டிவிட்டால் இந்த அண்டத்தில் இருப்பது மட்டும்தான் பிண்டத்திலும் இருக்கிறது எனும் மாபெரும் ஒற்றுமை புரிய ஆரம்பிக்கும்.  நான் இத்தனை பகுதிகளாக உங்களுக்கு கூறிய அறிவியல் மற்றும் வரலாறு அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். ஆனால் காலத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இவை அனைத்துமே ஒருவிதமான இயற்கையான மாற்றங்கள் மட்டும் தான். இவை அனைத்தையும் பார்த்து கடந்துவிட்டால் உங்கள் மனம் ஒருமையின் மையப்புள்ளி அடைந்துவிட்டது என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதன் பின்பு வாழ்வில் என்றும் சுகமே.

மீண்டும் புதிய ஒரு வடிவில் காலமென்னும் நான் உங்களுடன் பேசுவேன். அதுவரை நன்றி.

சுழற்சியின் முதற்பகுதி முடிவுற்றது. 🙏

Exit mobile version