மின்கிறுக்கல்

நட்சத்திரக் குழந்தைகள்

மணிக்கொடி பத்திரிக்கையின் ஆசிரியராக 1935 இல் இருந்து 1938 வரை பணியாற்றியவர் பி.எஸ்.இராமையா. அந்தக் காலகட்டத்தில் தான் புதுமைப்பித்தன், ந.பிச்சைமூர்த்தி, கு.ப.ரா, சி.சு.செல்லப்பா, லா.ச.ரா, தி.ஜ எனப் பலரும் மணிக்கொடியில் எழுதினார்கள். முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருந்தாலும் அதிகம் கவனிக்கப்படாதவாரகவே இருந்து வந்திருக்கிறார் இராமையா. அவருடைய கதைகளில் மிகச் சிறந்ததாக பலரும் குறிப்பிடுவது ‘நட்சத்திர குழந்தைகள்’ தான்.
தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்திடாத உலகில் தங்கள் பால்யத்தைக் கழித்த அனைவரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அவர்களுக்கு வானம் என்பது குனிந்து பார்க்கும் போது கைப்பேசியின் சிறிய திரைக்குள் சுருங்கிக் கிடப்பது அல்ல. அண்ணாந்து எவ்வளவு பருகியும் தீராமல் விரிந்து கண்களை நிறைப்பது. அப்படியான பாக்கியம் கிடைக்கப் பெற்றவள்தான் குழந்தை ரோஹிணி. அவளின் சின்னஞ்சிறு மனத்தில் இயற்கை விளைவிக்கும் உற்சாகத்தையும் வலியையும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் கதை தான் “நட்சத்திரக் குழந்தைகள்”.

குழந்தைகளின் அகவுலகம் என்றுமே நிர்மலமானது. அவ்வுலகில் முளைக்கும் எண்ணங்கள் நமது முதிர்ந்த மூளையினால் கணிக்க முடியாதவை. நம்மை ஒவ்வொரு முறையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பவை. இந்தக் கதையில் வரும் ரோஹிணிக்கும் நட்சத்திரங்களைப் பற்றி அடுக்கடுக்காய் கேள்விகள் உதிக்கின்றன. அவளது தகப்பனாரும் தன்னால் இயன்றளவு சுவாரஸ்யமாய்க் கற்பனை கலந்து அவளுக்குப் பதிலளிக்கிறார். இந்த இருவரின் உரையாடலை ஆசிரியர் வளர்த்தியிருக்கும் விதம் மிக ரம்யமானது. ஒரு மழலையின் உள்ளத்தை இன்னொரு மழலையாய் மாறி எழுதியிருக்கும் இடம் அது.

மிகக் குறைந்த கதாப்பாத்திரங்களைக் கொண்ட சிறிய கதை ஆயினும் கலைநயத்தோடு ஆசிரியர் அதனை நெய்திருக்கும் பாங்கினாலேயே தனித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு காட்சியையும் வண்ணங்கள் மிகுந்த ஓவியம் போல் தீட்டியிருக்கிறார். கதை நெடுக ஆசிரியர் கவித்துவமான மொழிநடையைக் கையாண்டிருக்கிறார். கதை மாந்தர்கள் உரையாடும் இடங்கள் தவிர்த்து கதாசிரியர் தரும் விவரணைகள் அனைத்திலும் கற்பனாவாதம் மிகுந்திருக்கிறது. ஒரு மோன நிலையிலிருந்தே அவர் கதையைப் படைத்திருக்கிறார். வாசிக்கத் தொடங்கிய உடனே நம்மையும் அதே நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறார்.

கதை முழுவதையுமே ஒரு சிறுமிக்கு உண்டான துள்ளல் நடையில் செல்கிறது. அந்த உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. இரவு ஏற ஏற ரோகிணி வானில் மினுங்கத் தொடங்கும் நட்சத்திரங்களைப் பார்த்து உற்சாகம் கொள்ளும் வேளையில் நமக்கும் அவள் கண் கொண்டு அவற்றை ரசிக்கும் ஆவல் மேலிடுகிறது. ஆங்காங்கே அழகாய் அளவாய்த் தூவப் பட்டிருக்கும் உவமைகளும் படிப்பவரின் ரசனைக்குத் தீனி போடுகின்றன. .

ஒவ்வொரு பொய்யின் போதும் ஒரு நட்சத்திரம் விழுந்து விடும் என்று ரோஹிணியின் தந்தை அவளுக்கு அளிக்கும் விளக்கம் நட்சத்திரங்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல நாம் சந்திக்கும் பிஞ்சுகளின் உள்ளமும் பொய்யினால் சுருங்கக் கூடியவைதாம்.

“அந்தப் பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இருதயம் இருதயத்தினோடு தனது சொந்த பாஷையில் உணர்த்த வேண்டிய புனிதமான தருணம்”

குழந்தைகளின் மெல்லிய உணர்வுகளை பல நேரங்களில் அலட்சியம் செய்து விடும் நமக்கு ஒரு பெரும் கண் திறப்பாய் அமைகின்றன இந்த வார்த்தைகள்.

கதை, படிக்கும் பொழுது அவரவர்க்கு நெருக்கமான ரோஹிணிகளை நிச்சயம் நினைவுகூறச் செய்யும். அந்தப் பிஞ்சுகளின் கள்ளமில்லா சிரிப்பை கண் முன் நிறுத்தி முகங்களில் புன்னகை அரும்பச் செய்யும். இளம் தளிர்களின் அகவுலகைச் சித்தரிக்கும் கதைகள் நிறைய வெளிவந்திருந்தாலும் தனது தனித்துவமான சித்தரிப்புகளால் அவற்றுக்கெல்லாம் முன்னோடியாய் வாசகர் நெஞ்கங்களில் நீங்கா இடம் பிடிக்கிறது இந்த “நட்சத்திரக் குழந்தைகள்”.

Exit mobile version