சுப்ரமணியின் தோளில் சாய்ந்திருந்த ஜெயந்தி அழுது கொண்டிருந்தாள். அவளுடைய கண்ணீரைக் கௌரவிக்கும் பொருட்டு வானமும் அவளுடன் சேர்ந்து அழுது கொண்டிருந்தது.
மழைக்காலம் என்பதால் அவ்வபோது விட்டுவிட்டு கொஞ்ச நாட்களாகவே தொடர்ந்து மழைபெய்து கொண்டிருந்தது. ஆனாலும் சுப்ரமணியும் ஜெயந்தியும் பிறக்கப் போகும் தங்களின் குழந்தையின் பொருட்டு கடவுள் தங்களுக்கென்று மழையை பிரத்யேகமாக அனுப்பி ஆசீர்வதிப்பதற்காக நினைத்துக் கொண்டு சந்தோஷமாக அவர்களும் மழையுடன் சேர்ந்து அழுதார்கள்.
அவர்களுக்கான குழந்தையை பிரசவிப்பதற்காக சரோஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். அழுது கொண்டிருந்த ஜெயந்தியின் முகத்தை நிமிர்த்தி, “ஏய், என்னடா இது, அசடாட்டம்? சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல அழுதுகிட்டு…..”என்றவனின் குரலும் உடைந்து வந்து தான் விழுந்தது.
”எனக்குத் தாங்கலைப்பா; என்னைச்சுத்தி இருந்த எல்லோரும் எப்படிப் பேசுனாங்க தெரியுமா? எனக்குக் குழந்தை பொறக்கலைன்னா அதுக்கு நான் என்னப்பா பண்றது? உறவுக்காரங்க எல்லோரும் எப்படி யெல்லாம் அவமானப் படுத்துனாங்க….” என்றவள் தாங்க முடியாமல் வெடித்து அழுதாள்.
அவள் அழுது முடிக்கக் காத்திருந்த சுப்ரமணி, “சரி, விடும்மா; அதான் இப்ப அந்தப் பிரச்னையெல்லாம் தீரப் போகுதே. நமக்குத் தான் குழந்தை வரப் பொகுதே…! செல்லக்குட்டி சிரி பார்க்கலாம்….”என்று அவளின் கன்னத்தை நிமிண்டி சீண்டினான்.
”போடா…..” என்று செல்லமாய் சிணுங்கியவள் மறுபடியும் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். “சரோஜா குழந்தையப் பெத்து நம்ம கைல கொடுத்ததும் நாம இந்த ஊரைவிட்டே போயிடலாம்ப்பா….”
”அய்யய்யோ; எங்க போறது? பழகுன ஊரை விட்டுட்டு….”
”எங்காவது கண்காணாத தூரத்துக்குப் போயிடலாம். மனுஷ சஞ்சாரமே இல்லாத இடமா இருந்தால் கூட நல்லது தான்….” என்று சொன்னவள் சிரித்தாள். ”சீரியசாத்தான் சொல்றியாம்மா…?”
”ஆமாம்ப்பா; அதுதான் நமக்கும் நம்ம குழந்தைக்கும் நல்லது. இல்லைன்னா குழந்தைகிட்டயே யாராவது நம்மள அதோட அம்மா அப்பா இல்லைன்ற உணமையைச் சொல்லீடுவாங்க. குழந்தையோட மனசு ரொம்பவும் கஷ்டப்படும். நம்மாலயும் தாங்க முடியாது. அதோட என்னோட மலடிங்கிற பட்டத்தைத் துறக்கனும்னா அதைத்தவிர வேற வழியே இல்லை. ஒரு குழந்தை பெத்துக்க முடியலைங்குற அவமானத்துலயே பாதி வாழ்நாள பாழாக்கியாச்சு. இனிமேத் தான் முழுசா திருப்தியா கிடைக்கப் போற குழந்தையோட புசுசா ஒரு வாழ்க்கைய வாழத் தொடங்கனும். சரியா…?”
”அம்மாவோட விருப்பம் அதுதான்னா, அப்புறம் அப்பீல் ஏது? எனக்கும் டபுள் ஓ.கே….”
பக்கத்து போர்ஷனுக்கு சரோஜாவும் மாரிமுத்துவும் குடிவந்த நாளிலும் மழை பெய்த்து. அவர்களைப் பார்க்க ஜெயந்திக்கு ரொம்பவும் பொறாமையாகவும் பரிதாபமாகவும் இருந்தது.
பொறாமைக்குக் காரணம் சரோஜாவின் அழகழகான இரண்டு குழந்தைகள். ஆறு வயதில் விம்மி என்கிற விமலா. முதல் வருடம் முடிய சில மாதங்களே இருந்த சதீஷ்.
பரிதாபத்திற்குக் காரணம். இவ்வளவு சின்ன வயதிலேயே – சரோஜாவிற்கு 23 அல்லது 24 வயது தான் இருக்கும் – இரண்டு பிள்ளைகளுடன் அல்லாடும் அவளின் அவலம்.
ஜெயந்திக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல்தான் திருமணமே ஆயிற்று. ஆனால் சரோஜாவிற்கு அந்த வயதிற்குள் இரண்டு பிள்ளைகள். பாவம் தான் என்று நினைத்துக் கொண்டாள் ஜெயந்தி.
மாரிமுத்துவிற்கு வீட்டிலிருந்து 3கி.மீ. தொலைவிலிருக்கும் ரப்பர் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக உத்தியோகம். தினசரி கம்பெனிக்கு சைக்கிளில் போய்வந்து கொண்டிருந்தான். ஷிப்டில் வேலை என்பதால் இரவும் பகலும் என்று மாறிமாறி வேலை இருக்கும் அவனுக்கு.
ஒரு நடுநிசியில் தூக்கத்தைக் கலைத்த காலிங்பெல்லை சபித்தபடி சுப்ரமணி கதவைத் திறக்க சரோஜா படபடப்பும் அழுகையுமாக நடுங்கியபடி நின்று கொண்டிருந்தாள்.
”என்னங்க விஷயம்?”சுப்ரமணியின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் சரோஜா அழத்தொடங்கவும் பதறிப்போய் ஜெயந்தியை அழைத்து வந்தான் அவன்.
சுப்ரமணியும் ஜெயந்தியும் சரோஜாவின் வீட்டிற்குள் போய்ப் பார்த்தால் விம்மிக்கு ஜுரம் கொதித்துக் கொண்டிருந்தது. மாரிமுத்து இரவு ஷிப்ட் வேலைக்குப் போயிருந்தான்.
ஜெயந்தி குழந்தையை அள்ளிக் கொள்ள சுப்ரமணி ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு டவுனுக்குப் போய் திறந்திருந்த 24மணிநேர மருத்துவமனை ஒன்றில் விம்மியை சேர்த்தார்கள்.
சிகிச்சை முடிந்து விம்மிக்கு ஜுரம் இறங்கி இயல்பிற்கு திரும்பியவுடன் அதிகாலை தான் வீட்டிற்கு வர முடிந்தது. தோளில் தூங்கிக் கொண்டிருந்த விம்மியை இறக்கி பாயில் படுக்க வைத்துவிட்டு பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்த சரோஜாவை உலுக்கி விம்மிக்கான மருந்து மாத்திரைகளைக் கொடுக்க அவள் கதறி அழுது விட்டாள். இருவரும் சரோஜாவைத் தேற்றி அவளையும் தூங்கச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போனார்கள்.
அன்றிலிருந்து இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கம் அதிகமாகி நேசமும் சுடர்விடத் தொடங்கியது. விம்மியும் சதீஷும் பெரும்பாலான நேரங்களில் ஜெயந்தியின் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினார்கள். ஜெயந்திக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் அப்படி ஒரு பிணைப்பும் அன்யோன்யமும் ஏற்பட்டு விட்டது.
காலையில் ஏழு ஏழரைக்கு வீட்டைவிட்டுக் கிளம்புகிற சுப்ரமணி வீட்டிற்குத் திரும்ப இரவு எட்டு சமயங்களில் ஒன்பது மணிக்கு மேலும் கூட ஆகிவிடும். அவன் தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் உயரதிகாரியாக இருந்தான்.
ஜெயந்தியைத் தனிமை தின்று கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு குழந்தைகளின் வருகையால் வெறுமை நிரம்பி வழிந்த அவளுடைய பொழுதுகள் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணரத் தொடங்கினாள். இரண்டு குழந்தைகளின் விளையாட்டும் செல்லச் சண்டைகளும் சுகமாயும் சுவாரஸ்யமுமாகி அவர்களின் சின்ன உலகத்திற்குள் ஜெயந்தியும் போய் ஐக்கியமாகத் தொடங்கினாள்.
சதீஷ் அனேகமாக பேசிப்பழகிய முதல் வார்த்தை ஆண்ட்டி ஆகத்தான் இருக்கும். அதற்கப்புறம் தான் அம்மா, அப்பா எல்லாம் அவனுடைய மழலை நாக்கிலிருந்து புரண்டு வந்தது. அவனுடைய அம்மாவிடம் சாப்பிட முரண்டு பிடிக்கிற சதீஷ் ஜெயந்தியிடம் சமர்த்தாக கதை கேட்டபடி சாப்பிட்டான். தூங்குவதற்கு தூளிகூட வேண்டி இருக்கவில்லை. ஜெயந்தி தட்டிக் கொடுத்தால் தோளிலேயே தூங்கினான்.
பள்ளி ஆண்டு விழாவில் பரதநாட்டியம் ஆடப்போவதாய் சொல்லி பெயர் கொடுத்து, ஒத்திகை எல்லாம் முடிந்து, ஆண்டுவிழா நெருங்குகிற சமயத்தில் பள்ளியிலிருந்து வந்த விம்மி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சின்னக் குழந்தைகள் கலகலப்பாய் இல்லையென்றால் பார்க்கிற யாருக்கும் உறுத்தும். ஜெயந்திக்கு நெஞ்சில் முள் தைத்தது போல் வலித்தது.
விம்மியை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டு, “என்னாச்சுடா செல்லம்; ரொம்ப டல்லா இருக்குற இன்னைக்கு…?” என்றாள் ஜெயந்தி.
”அதெல்லாம் ஒன்னுமில்ல ஆண்ட்டி…..” குழந்தை இயல்பாய் இல்லை என்பதை நேருக்கு நேர் பார்க்காமல் தரையைப் பார்த்து பேசியதிலிருந்தே புரிந்தது ஜெயந்திக்கு.
”பெரிய மனுஷியாட்டமெல்லாம் பேசாத. அது உன் மூஞ்சிக்கு செட் ஆகல. என்ன பிரச்னைன்னு சொல்லீடு…..” தலையைக் கோதியபடி ஜெயந்தி கேட்கவும் குழந்தை குரலுடைந்து அழத் தொடங்கி விட்டது.
”ஆண்டு விழா புரோகிராம்ல அப்பா என்ன சேரக் கூடாதுன்னு சொல்லீட்டார் ஆண்ட்டி….”
”அப்பா சொன்னால், அதுல ஏதாவது அர்த்தம் இருக்கும். இதுக்காகப் போயி யாராச்சும் அழுவாங்களா? ஸேம்; ஸேம்….”விம்மியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் ஜெயந்தி.
சரோஜாவிடம் விசாரித்தபோது பணம் தான் பிரச்னை என்பது புரிந்தது. மேடையில் பரதநாட்டியம் ஆட ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் என்று பள்ளி நிர்வாகம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பட்டியலிட்டு அனுப்பி வைக்க அதைக்கேட்ட மாரிமுத்து, “புரோகிராம்ல சேரட்டுமான்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்குறதில்ல; என்கிட்ட சல்லிக்காசு கூட கிடையாது. நீ ஒன்னும் பரதநாட்டியம் ஆடிக் கிழிக்க வேண்டாம்…” என்று கோபமாய் கத்திவிட்டு மாரிமுத்து வேலைக்குக் கிளம்பிப் போய்விட்டான்.
”நம்ம கஷ்டம் நம்மோளோட; அதைப் போய் குழந்தைகிட்ட காண்பிச்சுட்டுப் போயிட்டார்…..” என்று சொல்லி கண் கலங்கினாள் சரோஜா.
பள்ளி ஆண்டு விழாவிற்கு சரோஜாவும் மாரிமுத்துவும் போனபோது பரதநாட்டிய குழுவில் விம்மியும் ஆடுவதை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள் இருவரும். ஒரு சபையில் கண்ணைப் பறிக்கும் அற்புதமான உடையில் அழகில் ஜொலித்தபடி ஆடிய பெண்ணைப் பார்க்க பார்க்க பெருமையும் சந்தோஷமும் பொங்கியது இருவருக்கும். ஜெயந்தி தான் அவர்களுக்கே தெரியாமல் விம்மியிடம் பணம் கொடுத்து அனுப்பி யிருக்கிறாள் என்று தெரிந்ததும் இருவருமே நெகிழ்ந்து போனார்கள்.
வீட்டு வாடகையைக் கொடுத்து வருவதற்காக ஜெயந்தி மாடிக்குப் போனபோது, சரோஜா வீட்டுக்காரம்மாளிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் வாட்டம் தெரிந்தது.
”என்னாச்சு சரோ, ஏன் ஒருமாதிரி வடியா இருக்க…! வீட்டுக்கார்ரோட சண்டையா?” ஜெயந்தியின் கேள்விக்கு வீட்டுக்காரம்மாள் தான் பதில் சொன்னாள்.
”கடவுளோட விளையாட்டப் பாரும்மா; நீங்க குழந்தை வேணுமின்னு தவமா தவமிருக்கீங்க. உனக்கு கருவே தங்க மாட்டேங்குது. இவங்க குழந்தை வேண்டாம் வேண்டாங்குறாங்க. ஆனால் கடவுள் குடுத்துக்கிட்டே இருக்கிறார்…”
சரோஜாவிற்கு நாள் தள்ளிப் போயிருக்கிறது. சில சமயங்களில் இப்படி நாள் தள்ளிப் போவது அவளுக்கு சாதாரணம் தான் என்பதால் அவள் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஐம்பது நாட்களைக் கடந்தும் பீரியட் வராமல் போகவே மருத்துவரிடம் போயிருக்கிறாள்.
பரிசோதித்த மருத்துவர் கர்ப்பத்தை உறுதிப் படுத்திவிட்டு பையனுக்கு இன்னும் இரண்டு வருஷங்கள் கூட முடியவில்லை. அதற்குள் இன்னொரு குழந்தையா என்று சத்தம் போட்டிருக்கிறார்.
மாரிமுத்து தர்ம சங்கட்த்தில் நெளிய, சரோஜா தான் ’எப்படியோ தவறாகி விட்டது; கருவைக் கலைத்து விட்டு விடுங்கள்…..’ என்று சொல்லவும் மருத்துவரும் மாத்திரை கொடுத்து அனுப்பி இருக்கிறாள். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் மாத்திரை சாப்பிட்டும் கரு கலையாமல் இருக்கவும் மறுபடியும் மருத்துவரிடம் போய் முறையிட்டிருக்கிறாள் சரோஜா.
அவள் இனி டி அண்ட் சி பண்ணித்தான் கருவைக் கலைக்க முடியும் என்றும் இரண்டொரு நாளில் வந்து பண்ணிக் கொள்ளும் படியும் சொல்லி அனுப்பி இருக்கிறாள்.
”டி அண்ட் சி பண்ணிக்கிறது ரொம்பவும் வேதணை தரக் கூடியதேம்மா. நான் ஒரேஒரு தடவை பண்ணியிருக்கேன்; பத்துப் பதினைஞ்சு நாளைக்கு படுத்தி எடுத்துடும். ரெண்டு குழந்தைகளையும் வச்சுக்கிட்டு எப்படி சமாளிப்ப? அந்த வேதணை அனுபவிக்கிறதுக்கு பேசாம நீ குழந்தையையே பெத்துக்கலாம்….”என்றாள் வீட்டுக்காரம்மாள்.
”கடவுள் எங்கள மாதிரி ஏழை பாழைங்களுக்கு எதுக்கு மாமி குழந்தை குடுத்து எங்களையும் கஷ்டப்படுத்தி அந்தக் குழந்தையையும் கஷ்டப்படுத்தனும். பரவாயில்ல மாமி. பத்துப் பதினைஞ்சு நாள் வேதணையோட போயிடட்டும்….! ஆனால் குழந்தையைப் பெத்தெடுத்தா வருஷமெல்லாம் வேதணைப் படனுமே! ரெண்டு குழந்தைகளை வளர்க்குறதுக்கே உயிர் போயிட்டு இருக்குது. இதுல இன்னொரு குழந்தையா, நெனச்சே பார்க்க முடியல மாமி…..” சொல்லிய சரோஜா பொங்கிவந்த அழுகையை விழுங்கினாள்.
ஜெயந்திக்கு அப்பொழுதுதான் மின்னலென அந்த யோசணை மனசுக்குள் ஓடி மறைந்தது. அதுபற்றி விவாதிப்பதற்காக இரவு சரோஜாவின் வீட்டிற்குப் போனபோது மாரிமுத்துவும் வீட்டிலிருந்தான்.
ஜெயந்தி சரோஜோவின் கைகளை ஆதுரமாகப் பிடித்துக் கொண்டு, “நாங்க ஒரு யோசணை சொல்றோம். அதை நீங்க மறுக்கக் கூடாது…..”என்று பீடிகை போட்டாள்.
அவர்கள் இருவரும் புரியாமல் பார்க்க, “சரோ இப்ப உன்னோட வயித்துல உருவாகி இருக்குற குழந்தையை அழிக்க வேணாம். பெத்துக்க. நல்லபடியா பெத்து எங்களுக்குக் கொடுத்திருங்க. நாங்க எங்க பிள்ளையா வளர்த்துக்குறோம்…..”என்று சொன்ன ஜெயந்தி யாசகம் கேட்பது போல் அவர்களைப் பார்த்தாள்.
திடீரென்று இவர்கள் இப்படி ஒரு தீர்மானத்தை முன் மொழியவும் மாரிமுத்துவும் சரோஜாவும் திணறித்தான் போனார்கள். அப்போது என்ன சொல்வது என்று கூட அவர்களுக்குப் புரியாமல் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
”இதுல யோசிக்கிறதுக்கு ஒன்னுமில்ல; உங்களுக்கு வேண்டாமின்னு அழிக்க விரும்பற கொழந்தைய எங்களுக்குக் குடுத்துடச் சொல்றோம். கடவுள் கொடுத்த உயிரை அழிக்கிறது பாவமில்லையா? தயவு செய்து முடியாதுன்னு மட்டும் சொல்லீடாதீங்க. இந்த நிமிஷத்துலருந்து சரோஜா குழந்தைய பெத்தெடுத்து நல்லபடியா வீட்டுக்குத் திரும்புற வரைக்குமான எல்லா செலவுகளையும் நாங்களே ஏத்துக்கிறோம்…..” கிட்டத்தட்ட கெஞ்சுகிற தொனியில் இறைஞ்சினான் சுப்ரமணியும்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் போது சரோஜா – மாரிமுத்துவின் மனசுகள் எம்மாத்திரம்? அவர்கள் இருவரும் சுப்ரமணி – ஜெயந்தியின் ஏற்பாட்டை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.
அன்றைக்கிலிருந்து சரோஜாவைப் பூப்போல தாங்கினாள் ஜெயந்தி. அவளை அதிகம் வேலை செய்ய விடுவதில்லை. கடற்கரைக்கு வாக்கிங் அழைத்துப் போனாள். சத்துள்ள ஆகாரங்களையும் திகட்டத் திகட்ட குங்குமப் பூவையும் வாங்கி தின்னக் கொடுத்தாள். சரோஜாவின் குடும்பம் மொத்தத்திற்கும் ஜெயந்தியே சமைத்துக் கொடுத்தாள்.
சரோஜாவிற்கு ஒன்பது மாதங்களாகி பிரசவ நாள் நெருங்க நெருங்க ஜெயந்தியே குழந்தையை பெற்றுக் கொள்ளப் போவது போல் பூரித்தாள். பரபரப்படைந்தாள். முழுநேரமும் அவளுடனேயே இருந்தாள். தலைப் பிரசவத்திற்கு தன் அம்மா வீட்டிற்குப் போனபோது கூட தனக்கு இப்படி ஒரு கரிசனமும் கவனிப்பும் கிடைக்கவில்லை என்று சரோஜாவும் நெகிழ்ந்து போனாள்.
பெண் குழந்தை பிறந்தது. செக்கச் செவேலென்று ரோஜாப்பூ மாதிரி அத்தணை அழகாய் இருந்தது. ”என் ஆயுசுக்கும் உனக்கும் உன்னோட குடும்பத்துக்கும் நான் கடமைப் பட்டிருப்பேன் சரோ…..” என்றாள் ஜெயந்தி குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி. சுப்ரமணியும் மாரிமுத்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச்சே வராமல் கண்களாலேயே நன்றி சொன்னான்.
ஆனால் குழந்தை பிறந்து இரண்டு நாட்களுக்கு அப்புறம் டாக்டர் சொன்ன சேதி எல்லோருடைய சந்தோஷத்தையும் சுக்குநூறாக உடைத்து விட்டது. குழந்தைக்கு பார்வை இல்லை. ஆரம்பத்தில் கருவைக் கலைக்க முயன்று சாப்பிட்ட மருந்தால் கருவிலிருந்த குழந்தை பாதிக்கப்பட்டு குறைபாட்டுடன் பிறந்து விட்டது. வாழ்நாள் முழுவதும் அது பார்வைக் குறைபாடுள்ள குழந்தையாகத் தான் கழிக்க வேண்டும்.
வீட்டிற்கு வந்த ஜெயந்தி வெறிபிடித்த்து போல் அழுது தீர்த்தாள். சுப்ரமணியும் அழட்டும் என்று விட்டுவிட்டான். “நாம யாருக்கு என்ன கெடுதல் பண்ணுனோம்? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார். இப்பக் குழந்தையை என்னப்பா பண்றது?”
”என்ன கேள்விம்மா இது? நமக்காகப் பெறப்பட்ட குழந்தையை நாமதான் வளர்க்கனும்…..”
”எப்படிப்பா முடியும்? நல்லாத் தெரிஞ்சிருந்தும் நமக்கே பொறக்காத ஒரு பார்வைக் குறைபாடுள்ள குழந்தையை நாம எப்படிப்பா வளர்க்க முடியும்? அய்யய்யோ இப்படி ஆயிடுச்சேன்னு அனுதாபப்படலாம். ஒருவாரம் பத்துநாள்ன்னு கூடவச்சு பராமரிக்கலாம். படிப்பு செலவுக்கு பணம் குடுக்கலாம். ஆனால் வாழ்க்கை முழுக்க அதை எப்படிப்பா நம்மால சுமக்க முடியும்? நமக்கு வேண்டாம்னு சொல்லீடலாம்…..”
”தப்பு ஜெயந்தி. நீ பேசுறது எதுவுமே சரியில்ல. குழந்தை வேணாமின்னு கருவிலேயே அழிக்கப் போனவங்கள நாமதான் கெஞ்சிக் கூத்தாடி நமக்கு பெத்துக் குடுக்கச் சொன்னோம். இப்ப பேச்சு மாறுறது சுத்த அயோக்கியத்தனம். இப்படிப்பட்ட குழந்தையை பராமரிக்க அவங்க குடும்ப நிலைமை தாங்காது. நம்மமேல உள்ள மரியாதையால நம்ம சொல்லுக்கு மதிப்பளிச்சு நமக்காகப் பெத்துக் கொடுத்த குழந்தை ஊனத்தோட பிறந்துட்ட ஒரே காரணத்துக்காக அவங்க தலையிலேயே கட்டுறது நியாயமும் இல்ல; தர்மமும் இல்ல….”
”அப்படின்னா ஏதாவது அனாதை விடுதியில நாமளே கொண்டுபோய் குடுத்துட்டு வந்துடலாமா?”
”ஏன் கழுத்தை நெரிச்சுக் கொன்னுடலாமான்னு சொல்லேன். அது இன்னும் சிறப்பா இருக்கும் . நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறன்னே தெரியலம்மா. ஆனாலும் நமக்கு இவ்வளவு சுயநலம் இருக்கக் கூடாதும்மா. கடவுளோட அனுக்கிரகம் நாமஒரு பார்வை இல்லாத குழந்தைய வளர்க்கனும்னு விதிச்சிருந்தா அதையும் சந்தோஷமா ஏத்துக்குவோம். ஜெயந்தி. ஒருவேளை நமக்கே இப்படி ஒரு குழந்தை பொறந்திருந்தா தூர எறிஞ்சிடுவமா என்ன….?”
சுப்ரமணி பேசப்பேச ஜெயந்திக்கு அவளுடைய தவறு புரிந்தது. அவள் இவ்வளவு குரூரமாக பேசியதற்காக மிகவும் வருந்தினாள். தாய்மை என்பதை வரம் என்பார்கள். தன்னுடைய இப்படிப்பட்ட மனநிலையினால் தான் தனக்கு தாய்மை அடையும் பேறு வாய்க்கவில்லையோ என்றும் வெட்கினாள்.
ஒரு நல்ல நாளில் குழந்தையைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்கிற ஏற்பாடுகளுடன் ஜெயந்தியும் சுப்ரமணியும் சரோஜாவின் வீட்டிற்குள் போனார்கள். ஆனால் சரோஜா குழந்தையைத் தரமறுத்து தன்னுடைய நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள்.
”என்னை தயவுபண்ணி மன்னிச்சிருங்க அக்கா. இது சாதாரண குழந்தையா இருந்தால் பேசுனபடி கண்டிப்பா உங்ககிட்டயே குடுத்திருப்பேன். ஆனால் இப்ப முடியாதுக்கா. இந்தக் குழந்தைக்கு நான் ரொம்ப ரொம்ப முக்கியம். இது வளர்ந்தப்புறம் ஒருவேளை இதோட அம்மா நானுன்னு தெரிஞ்சு, ‘நான் பார்வை இல்லாம பொறந்துட்டதால தான என்னை நீ வளர்க்காம யாருக்கோ தூக்கிக் கொடுத்துட்ட….’ன்னு கேட்டால் எனக்குத் தாங்காதுக்கா. எனக்கு சொல்லத் தெரியல…..
ஒரு தாயையும் குழந்தையையும் பிரிச்ச பாவம் உங்களுக்கு வேணாம்ங்க்கா. உங்களுக்கே உங்களுக்குன்னு உங்க வயித்துலயும் சீக்கிரம் ஒரு குழந்தை உருவாக நானும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். இந்தக் குழந்தையை நானே வளர்த்துக்கிறேன்க்கா…..”கண்ணீர் பொங்க கையெடுத்துக் கும்பிட்ட சரோஜாவை ஜெயந்தி ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
மாரிமுத்துவும் மனைவி சொன்னதை ஆதரிப்பவனாக பார்வையாலேயே உணர்த்தினான். அன்றைக்கும் மழை பெய்தது. ஆனால் அந்த மழை யாருக்கும் சந்தோஷம் தருவதாய் இல்லை.
முற்றும்