மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 24

தனித்தலையும் சொற்களையெலாம்
தரங்கூர்ந்து தேர்ந்தெடுத்துத்
தக்க இணையுடன் சேர்த்துச்
செதுக்கிச் சீராக்கிச் செம்மாந்த
சொற்கட்டுமானம் செய்து
செந்தமிழ்க்கவிதை ஆக்கல்
சிந்தை நடத்திடும் வேள்வியாம்.
சொற்கள் தின்று சொற்கள் தின்று
சோதியெனச் சொற்றொடர் மேலெழும்ப
ஏதமில்லா அரும்பாட்டு ஆங்கே
எழுஞாயிறாய்த் தோன்றெழில் தரும்.

வரிகள்யாவும் விரிகதிராய்
வெம்மையிற் பன்னிலைகாட்டிக்
கவிநயச்சுடர் ஏற்றி விளக்கும்.
கதிரொளியில் சிறிது பகுத்துக்
கடனாய்க் கனிவுடன் ஈந்தளித்துப்
பிறமொழி நிலவினை ஒளிர்த்திடும்.
தன்னைத்தான் பேணிச்சிறக்கும்
தனித்ததொரு தலைமையாம்
தமிழ்ப்பெருமாட்டி போன்றதொரு
தன்னேரிலாக் காதல் செய்ய
உன்னோடு என்னையும்
உடனிருக்க அழைக்கிறாய்..

கவிதை தனக்கான சொற்களைக்
கடப்பாட்டுடன் தேர்ந்தெடுத்தலன்ன
காதல் நம்மிருவரையும்
களிப்புடன் தேர்ந்தெடுத்திருக்கிறது.
காதற்கட்டுமானம் வலுப்பெற
அன்புச்சாந்து கட்டாயமாகிறது.
குழைந்து நெகிழும் உள்ளமே
இறுகியிறுகி வலுப்பெறும்
உறுகாதலாய் உருப்பெறும்.

உன்னால் நான் குழைகிறேன்
உடனின்று நீயும் நெகிழ்கிறாய்.
நெகிழ்வும் குழைவும் நிறைந்த
பீங்கான்கூழாய் உள்ளம் மாற
அருட்பெருஞ்சோதியாய் நின்று
உள்ளத்தை வார்த்தெடுக்கும்
உயர்ந்த காதலை அளிக்கிறாய்.
பேரருள் கசிந்துருகும் தனிப்பெருங்
காதல் வடிவமைப்பாளன் நீ சூர்யா…!

Exit mobile version