மின்கிறுக்கல்

சூர்யப்பாவை – 21

காற்சிலம்புகள் சலசலக்கையில்
கிணுகிணுக்கும் மொழியினில்
கடத்தப்படுபவை முதன்மையாய்க்
காதற்செய்திகள்தாம்.
காலோடு உராய்ந்து
காற்றோடு கலந்து
காதோடு சேர்ந்திடும் சிலம்பொலி
கதைத்திடும் காதல் மறைமொழி
காவியம் நிகர்த்த மொழி..

காதணியின் தொங்கலிலும்
காற்சிலம்பின் கிங்கிணியிலும்
கைவளை குலுங்கலிலும்
எழுதப்படுகின்றது காதலின்
நாட்டுப்பண்.
சினத்திலும் பிணக்கிலும்
நடுவமாய்நின்று
முரண்பாடுகளை உடைத்து
உடன்பாடுகளை ஒட்டுகிறது
சிலம்புகளின் சிணுங்கலொலி.
சிலம்புகளின் மொழிபுரிந்தால்
சீர்மைபெறும் காதலதிகாரம்.

அணிகலன்களில் அடங்குவதா
காதல்? – அல்ல அல்ல..
அணிகலன்களையும்
ஆளச்செய்வதே காதல்.
எல்லாவற்றிலும் தன்னுருவைப்
படியச் செய்துவிடுகின்றது.
காற்சிலம்புகளின் முத்துகளில்
காதற்படிமங்கள்.
காற்சிலம்புகளின் வடிவத்தில்
காதற்தொன்மங்கள்.
நாள்பட்ட தேனைப்போல காதல்
அடர்ந்து அடர்ந்து தனக்குள் மதிப்பேற்றுகிறது.
அத்தேன்காதலை இருசிலம்புக்குள்
அடைக்கத் தெரிந்தவனே
பெருங்காதற்சுவைஞன்..

சிலம்புகளை உன் செல்லப்பரிசாக வாங்கித்தந்தாய்.
ஒவ்வோர் அடிக்கும் உன்
சிரிப்பினை மொழிகின்றன அவை.
உன்சார்பில் என்னோடு
உரையாடிக்கொண்டேயிருக்கும்
சிலம்புகளுக்கு உன்தேகச்சாயல்.
காதற்சிலம்பன் நீ சூர்யா..
சிணுங்கொலியில் என்னைச்
சீராட்டுகிறாய் நாளும் ….!

Exit mobile version