மின்கிறுக்கல்

சின்னக் கண்ணம்மா

அணிலும் ஆடும் ஓடிவந்து
சிதறிக்கிடக்கும் உயிர் எழுத்துக்களை
எடுத்துத் தந்தன.
மரத்தடியில் கட்டியிருந்த கன்று
தன் அம்மாவை அழைத்த வேளையில்
நீயும் திக்கித்திக்கி அம்மா என்றாய்
அவ்வளவொரு தித்திப்பாய்!

உன் மழலை மொழியை
இன்னும் இன்னும் இனிமையாக்க
காடு, மேடு, பள்ளம்கூட பாராமல்
வார்த்தைகளைக் கண்மூடித்தனமாய்த் தேடிக்கொண்டு
பெரும் சிரமத்தோடு ஏறிவிட்டேன்
மீப்பெரு மலையை!

மலையின் உச்சியிலிருந்து
இறங்குவதறியாமல் திகைத்து நிற்கையில்…
பத்தாம் அகவையிலிருந்து வெளியேறிய நீ
இசையின் சமவெளியிலமர்ந்து
பல்லவியில் தொடங்கி
அனுப்பல்லவியைக் கடந்து
இருவேறு சரணங்களையும் விழுங்கி
இதழ்வழி ஓடவிடுகிறாய்
பனி மிதக்குமொரு நதியை.
அப்பெரும் மலையேயுருகி
கண்ணிமைக்கும் நொடியில்
தன்னையே மறந்து மயங்கிக் கிடக்கிறேன்
இதோ உன் காலடியில்!

Exit mobile version