தொட்டுவிடும் தூரம்
சூரியன் தள்ளிச் சென்றால்
சுட்டு விரல் மறைக்கும்
நட்சத்திரமாகிறது
தீக்குச்சி அருகினில் வந்தால்
தீண்டித் தின்று
கரியாக்குகிறது
புதையுண்ட விதைக்கு
புயலால் ஏது ஆபத்து ?
துரத்தும் புலியின் மீது பயம்
கனவென்றறியாத வரைதானே
தூங்கும் நேரம் தூற்றப்பட்டால்
எதிர்வினைக்கு ஏது அவசியம் ?
தொட்டுவிடும் தூரத்தில் தான்
தொங்கிக்கொண்டிருக்கிறது
இன்பமும் துன்பமும்
குன்றின் மேல் அமர்ந்தவனின்
கால்களை நனைக்கத்தான் முடியுமோ
பெருவெள்ளம் பாய்ந்தாலும் ?
பேரழிவென்றாலும் பெருமகிழ்ச்சியென்றாலும்
பார்வையாளனாய் இருப்பவனுக்கு
பார்க்கும் நேர காட்சிகளே
யாரோ ஒருவரின் கண்ணீர்
எங்கோ ஒருவரின் இறப்பு
எவருக்கோ கிடைத்த வெற்றி
எந்தச் சலனமும் தருவதில்லை
நடப்பவைகளின் வீரியமல்ல
நடக்கும் தூரமே முடிவு செய்கிறது
நம் பாதிப்பின் அளவை
இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்