மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 39

ஆழப் பதிந்த தடம்

பற்றுக்களை தேர்வு செய்வதில்
பல்லாயிரம் வகை மனங்கள்

எதைப் பற்றுவதால்
வேறெதையும் பற்றாமல் போவோமோ
அதைத் தவிர அத்தனையும்
அட்டவணையில் இடம்பெறும்

எதையும் பற்றாமல்
எவ்வாறு மேலேற முடியும்?
சிகரத்தை தொட முடியும்?

கண நேரப் பற்றுதல் மட்டுமே
கடந்து செல்ல வைக்குமே அன்றி
காலத்திற்கும் பிடித்திருத்தல்
கரை சேரா ஊசலாட்டமே

இறுகப் பிடித்ததை விட மறந்தால்
பிடித்தது பிடித்துக்கொள்ளும்
இருந்த இடத்திலேயே தேங்கி
இடைநிலையே இலக்காகிவிடும்

இன்பமாய் தோன்றும் இடைநிலைகள்
இறுதிவரை இனிப்பதில்லை
இவையறியா மனம்
இருப்பதின் மீதே தன்
இரும்புப் பிடியை இறுக்கும்

தித்திக்கும் தேன் சுவையோ
தேள் கடியின் கொடுவிஷமோ
தாண்டும் லாவகம் தெரிந்தால்
இரண்டுமே ஒன்றாவதை உணரும்

சிறைபிடித்த சங்கிலியில்
தங்கமென்ன தகரமென்ன
அடைபட்ட மனம்
அன்பால் நொறுங்காதவரை

வருடக் கணக்கில் வேர் விட்டாலும்
வானை நோக்கி எத்துணை வளர்ந்தாலும்
கரையான் வந்தபின் காணாமல் போகும்
கடினமானவையும் அன்பால் கரையும்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version