மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 34

மேன்மக்கள்

சுவரொட்டிகள் இல்லை
தோரணங்கள் தேவையில்லை
இருக்கும் இடத்தில்
இருந்தபடியே இழுக்கும்

தோன்றியதை அறிவிக்க
முரசடித்ததில்லை
நிகழ்வதே தெரியாதபடி
நிசப்தத்தில் சுரக்கும்

வாசத்தை மட்டுமே
விலாசமாய்க் கொண்டு
தன் இருப்பை
விசாலமாக்கிக் கொள்ளும்

கொள்வார்களைப் பற்றிய
கவலைகளற்று
காற்றோடு கைகோர்த்து
காதல் கொள்ளும்

வண்டு வரும் காலம்
பிரிவை எண்ணாமல்
ராணியைப் போல்
ஏறி அமர்ந்து
வானில் பறந்து செல்லும்

எங்கோ ஒரு மூலையில்
எவருக்கும் தெரியாமல்
எளிதாக எட்டாமல்
தேனடையாய் தனித்திருந்தாலும்
தேடித் தேடி வருகிறார்கள்

பூவின் மடியோ
பாறையின் இடுக்கோ
புழுதித் தரையோ
பிடிபடா உயரமோ

எதுவாகிலும் நிர்ணயித்திடுமோ
என்றும் மாறாத
தேனின் குணத்தை?

Exit mobile version