மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 29

சிருஷ்டி

சிறு புள்ளிகள் இன்றி
சிகரங்கள் இல்லை

பல கோடிப் புள்ளிகள்
பலவிதமாய் ஒன்றுகூடி
பார்வைக்கு சிகரமாய்
பரிமளிக்கிறதென்றால்

காணும் இவ்வுலகமும்
காணமுடியாப் புள்ளிகளே

விலையில்லா வீசும் காற்று
புவியீர்ப்பின் கருணையால்
நடமாடும் வாய்ப்பு
குளிர்காய நெருப்பு
அனலுக்கு நிழல்
கண்டு பேசி உண்டு உறங்கி
கேட்டு மகிழ்ந்து
காலம் கரைந்து வீழும்வரை
உணர்வதேயில்லை
கணக்கிட முடியாத புள்ளிகளை

ஒளிபடும் இடத்தைப் பார்ப்பவன்
ஒளியின் மூலத்தை அறிவதில்லை

கண்கள் இருந்தால் காண முடியுமென்றால்
இறந்தவன் கண் எதைக் காண்கிறது?

கொட்டும் மழையில் நனைந்தாலும்
குவளை நீருக்கு சண்டையிடுகிறான்

சூரியனை மறந்துவிட்டு
மின்மினிகளைப் பிடிக்க ஓடுகிறான்

புள்ளிகளுக்கு நன்றி சொல்ல மறந்தவன்
பூமிக்கு பாரமாகிறான்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version