மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 28

ரசவாதம்

சுட்டெரிக்கும் வெயிலில்
சுவடின்றி ஆவியாகி
மேலெழும்பி மேகமாய்
மாயத் தோற்றம் கொண்டது

புலம்புவதும் குறைசொல்வதுமாய்
புலம் பெயர்ந்த நீர்க்கூட்டம்
புகலிடம் தேடி வானில் அலைந்தது

அனைத்தையும் சாகசமாய்க் கொண்டு
அன்பை மட்டுமே பதிலாய்த் தந்து
அலுக்காத துளியொன்று
அமைதியாய்ப் பயணித்தது

காற்றின் விசைக்கேற்ப
கப்பாரின்றி அலைக்கழிந்து
கதறும் கூட்டத்தின் நடுவே
கலங்காத ஓர் துளியாம் அது

எதிரே மற்றொரு மேகம்
எதிர்த்து வந்து மோதுகையில்
எனது உனதென்று
எவ்வளவோ வன்முறை

இரைச்சலும் இடியுமாய்
இடைவிடாத சண்டையிலும்
இனிய முகம் மாறாமல்
இருப்பதையே ஏற்கிறது

பிறந்த இடம் எங்கோ?
புலம் பெயர்ந்த இடம் எங்கோ?
அகதிகளாய் அலைந்து
அடைக்கலமின்றி அல்லல் பட்டு
கடைசியாய் எங்கோ ஓர்
கடலில் வீழ்கிறது

கதறியதெல்லாம் கரைந்து போக
குமுறியதெல்லாம் மறைந்து போக
அனைத்திலும் அமைதி காத்து
அன்பையே தந்த துளி மட்டும்

சிப்பியின் வாயில் வீழ்ந்ததாம்
முத்தாய் மாறி வாழ்ந்ததாம்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Exit mobile version