மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 14

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

காத்திருக்கும் கிரீடம்….

மலைகளின் மேலே ஓர்
கவலைகளற்ற அரண்மனை..

ராஜ்ஜியங்கள் யாவும் – அங்கே
ராஜாக்கள் மட்டுமே வாசம்..

மண்ணில் இருப்பவர்கள்
கண்ணில் படாத ஓர் அற்புதம் – ஆனால்
யாரும் அங்கே சென்று
தானும் ராஜாவாகலாம்…

கேள்விப்பட்டவர்கள் மிகச் சிலரே – அதையும்
கேள்விகளற்று நம்புபவரோ
கோடியில் ஒருவராம்…

ஆயினும் அனைவரும் மலைமீது ஏறுகிறார்கள்…
ஆரவாரத்தால் பாதியில் திசைதிரும்புகிறார்கள்..

தன்வழிதான் சிறந்ததென்று
தவழ்ந்து செல்லும் மக்கள்
தர்க்கத்தால் வாதம் செய்கின்றனர்

செங்குத்துப் பாறைகள் மேற்செல்ல
சீரான கயிறே தேவையென்றும்
சீக்கிரம் அடைவதற்கும் அதுதான்
சாலையென்றும் பிரதிவாதம் செய்கிறது
சாய்ந்து நகரும் பிரிவு

அழகான மரங்களின் நிழல் தங்கி
அறுசுவை பழங்களைப் புசித்துச் செல்ல
சோலைவழி ஒன்று உண்டென்றும்
சோர்வில்லாப் பயணமென்றும்
சேதிசொல்லி நகர்கிறது ஒரு கோஷ்டி

இதுதான் என்று முடிவெடுத்து
இயன்றவரை அடிகள் எடுத்து
இலக்கை அடையும் முன்னர்

மனம் இரண்டாகப் பிரிந்ததில்
மேல் நோக்கிய பயணம் – பலருக்கும்
மறந்தேதான் போனதாம்

பிறர் செல்லும் வழிக்குறைகளில்
பிரதான கவனம் செல்லச் செல்ல
தன் வழிப் பாதை இருண்டேதான் போனதாம்

தங்கிச் செல்லும் தற்காலிக இடங்களை
தனதென்று எண்ணிக் கூடாரம் அமைக்கிறார்கள்
வேலிகள் இடுகிறார்கள்
வேற்றுமைகள் வளர்க்கிறார்கள்

வேடிக்கையும் கேளிக்கையுமே
வாழ்க்கையாகிப் போனதால்
புதர்கள் மண்டிப் போனதாம்
பாதைகள் மூடிப் போனதாம்

வந்த வேலை மறந்து
மந்த புத்தியுடன் மாந்தர்
சிந்திய குருதியெல்லாம்
சிறிய மனதினாலன்றோ..?

இவன் சரி.. இது சரி..
அவன் தவறு.. அது பிழையென்று
அடுத்தவருக்கு சான்றிதழ்
அச்சடிக்கும் நேரமெல்லாம்
அற்பமான கோரமாம்
ஆயுள்நீள விரயமாம்

பொன்னான காலமெல்லாம்
பொல பொலத்து உதிர்வதற்குள்
போகும் திசை நடந்தால்
விண்ணாளும் ஒரு நாள்
விரைவினில் கைகூடுமாம்…

Exit mobile version