இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்
சகிக்க முடியாத முகங்கள்……
முகங்களைக் காட்டும் கண்ணாடி ஒருநாள்
முகமூடிகளைக் கழற்ற
முடிவு செய்தது…
அதிர்ச்சியான மனிதர்கள்
அவரவர் முகம் பார்த்து
அருவருப்படைந்தார்கள்
உத்தமன் என்று நம்பியவர்கள்கூட
தன்னிலை மறந்து வெம்பினார்கள்
துணியால் மறைத்தார்கள் – அதன் மேல்
சேற்றை வாரி இறைத்தார்கள்
கண்ணாடிகளுக்கு எதிராய்
கண்டனக் குரல்கள் எழ ஆரம்பிக்க…
மெத்தப் படித்தவர்கள்கூட இது
மேட்டுக்குடிகளின் சதி என்றார்கள்
சாமானியனின் முகத்தை அழிக்கும்
சாம்ராஜ்ஜியங்களின் முயற்சி என்றார்கள்
வீதியெங்கும் போராட்டங்கள்
விதவிதமான ஆர்பாட்டங்கள்
ஆங்காங்கே கண்ணாடிக் கோபுரங்கள்
அடித்து நொருங்கிய சில்லுகளாய்ச் சிதற
ஆயிரம் ஆயிரம் முகமூடிகளாய் – தெருவெங்கும்
பல்லாயிரம் கோடி விகாரங்கள்
கண்களை மூடித் திரும்பிக்கொண்டது
காணச் சகியாத மானுடச் சமூகம்
அறிஞர்களும் ஆன்றோர்களும் மட்டும்
அமைதி காக்கச் சொன்னார்கள்
ஆயினும் யாருக்கும் – தன்
முகம் பார்க்கும் துணிவில்லை
பார்த்த அகோர முகங்களைப் பற்றி
பகிர்ந்து கூறவும் மனமில்லை – மனிதன்
கூட்டமாய் இருந்தும் தன்னில்
கூறுகளாய்ப் பிளந்து நின்றான்
உலகத் தலைவர்கள் சிலருக்கு
உபாயம் ஒன்று தோன்றியது
கண்ணிவெடிகளுக்குப் பதிலாய் எல்லையில்
கண்ணாடிகளை நிறுவினார்கள் – தன்
எதிரிகளை பின்வாங்கச் செய்யும்
எளிதான ஆயுதம் கண்டார்கள்
அப்பட்டமான நிஜத்தின் முன் – பயங்காட்டும்
அணுகுண்டுகள்கூட மண்டியிட்டதால்
கண்ணாடிகள் கருவிகள் ஆனது…
போர்கள் ஓய்ந்து போனது…
பாமரர்கள் சபித்தபடி புறக்கணித்து மறந்தார்கள்
பழி அத்தனையும் சுமந்தபடி
பாதரசம் மங்கியபடி
உண்மையைச் சொன்ன யாரையும்
உலகம் விரும்பாது என்றுணர்ந்து
தான் மட்டும் விதிவிலக்கா என்று
கத்திச் சிரித்ததாம் காலத்தின் கண்ணாடி…