மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 10

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வந்தேறிகள்….

ஆயிரம் வருட ஆலமரத்தடியில்
இளைப்பாற வந்த
இரு மனிதர்களின் சம்பாஷனை….

அவனை இவன் வந்தேறி என்றான்
இவனை அவன் வந்தேறி என்றான்

வெறுப்பிற்குத்தான்
எத்தனை ஆயுதங்கள் !
எத்தனை அவதாரங்கள் !

சொற்களை அம்புகளாக்கி
மொழியை வில்லாக்கி
ஏகலைவனாய் போர் புரிந்தார்கள்

இவன் சாதியைச் சொல்லி அடக்க நினைத்தான்
அவனோ அதையே கேடயமாக்கித் திருப்பி அடித்தான்

இவன் நிறத்தைச் சொல்லிப் பிரிக்க முயல
அவனோ மதத்தை நுழைத்து இழுத்தான்

வேடிக்கை பார்த்தவர்களோ கைதட்ட
இருபுறமும் கோஷ்டி சேர
உற்சாக மிகுதியில் உக்கிரமானது போர்..

யார் வந்தேறிகள்? யார் சாதி வெறியன்?
யார் மதவாதி? யார் இனவாதி?
என்று ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ல
சிறுதுளிகளாய் சேர்ந்த விஷம்
பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது..

வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
வாளேந்தி நின்றது மானுடம்…
பாய்ந்தோடும் குருதியாற்றின் ஓரம்
கூழாங்கற்களாய் தலைகளின் குவியல்

தோற்றவர்கள் இறந்துவிட
வென்றவர்கள் வெறுமையானார்கள்..

மீண்டும் இளைப்பாறல்
மீண்டும் சம்பாஷனை
குறைகளும் பிரிவுகளும் மட்டுமே
மீண்டும் கண்களில் தென்பட
ஆரம்பமானது அடுத்த வார்த்தைப் போர்…

இவனை அவன் வந்தேறி என்றான்
அவனை இவன் வந்தேறி என்றான்

இளைப்பாற வந்தேறிய மானுட சமூகத்தின்
இறுமாப்பை நினைத்து
இன்றும் எள்ளி நகையாடுகிறதாம்
இயற்கையின் மெளன சாட்சியான
ஆயிரம் வருட கால ஆலமரம்

Exit mobile version