கடலைப் பார்த்த கவின்
தொட வரும் அலைக்கு
எனது கால்களையும்
தூக்கிக்கொண்டு ஓடினாள்.
????????????
கரை தொடும் அலையைக்
கவின் அடித்தாள்
கவினிடம் அடிபடவே
மற்றொரு அலை
கரையைத்தொட்டது.
????????????
வானத்தில் பறந்த
லகுடுவைப் பார்த்தாள் கவின்
கடற்கரையில்
360 டிகிரிக்கு தலையைச்சுற்றிய
லகுடுவை நான் பார்த்தேன்.
????????????
மகியைப் பின்தொடர்ந்த
கவின்
ஒவ்வொன்றாக
விளையாடிப்பார்க்க
மகி
முதலில் விளையாடிய
இடத்திற்கு
வந்துவிட்டாள்.
????????????
கடல்தொடப் பறந்த பறவை
மீனொன்றைக்கவ்வ
இரண்டு கைகளை விரித்தாள்
கவின்
மீனைத் தூக்கிக்கொண்ட
மாமாப் பறவை
கடல்தொட்ட பறவையைப்
பின்தொடர
ஓடத்தொடங்கியிருந்தது.
????????????
தொட்டிமீன் கவினைக்
கடற்கரையில் தவழவிட்டார்
அப்பா
அலையைத் தொட்டுப்பார்க்க
ஓட ஆரம்பித்த மீனோடு
வீடுதிரும்பினார்
தொட்டிக்குள்
கடல்மணல்துகளைத் தட்டிவிட்டு
துள்ளிக்குதித்தோடியது
கடல்மீனா!
????????????
கவின்
ஓடிப்பிடித்து விளையாட
கடற்கரை
நீளாமாகிக்கொண்டிருந்தது.
????????????
அவ்வப்போது
சன்னல், கதவுச் சட்டங்களில் துள்ளியும்
இரண்டு சோபாக்களின் நடுவே
நுழைத்துக்கொண்டோடும்
தொட்டிமீன் கவினோடு
நீந்தத்தொடங்கின
அப்பா மீனும் அம்மா மீனும்.
????????????
மகியும் கவினும்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
மரக்குதிரையாய்ப்
பின்தொடர்ந்த நானும்
ஆட்டத்தில்
யானையாக மாறியிருந்தேன்.
????????????
பிரச்சினையோடு வந்தமர்ந்தேன்
பூனையைப்போல வந்த கவின்
கர்ர்வ் என்றாள்
பயந்துபோய் ஒடுங்கிக்கொண்டேன்
பிரச்சினையிலிருந்து விடுபட்ட
மரக்குதிரையொன்று
ஆடிக்கொண்டிருந்தது.
????????????
கவினைத்
தூக்கிக்கொண்டு ஓடினேன்
இல்லை
என்னைத் தூக்கிக்கொண்ட
கவின் ஓடினாள்.
????????????
கவின் முத்தம் கொடுக்க
குட்டிப்பெண்ணாகிவிட்ட
பிரபா அத்தை
இன்னொரு முத்தம் கேட்டாள்
அஸ்க்கு புஸ்க்கு என்று
கொடுத்த முத்தத்தை
பிய்த்துக்கொண்டோடினாள் கவின்.
????????????