மின்கிறுக்கல்

கடுகு வாங்கி வந்தவள்

கன்னட மூலம் : பி. வி. பாரதி
தமிழில் : கே. நல்லதம்பி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வாழ்கையின் மீதான நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள உந்தும் புத்தகங்கள் என்றுமே எனக்கு உவப்பானவைதான். அந்த வகையில் புற்று நோயிலிருந்து மீண்டு வந்த பி.வி. பாரதியின் அனுபவக் கதையான ‘ கடுகு வாங்கி வந்தவள் ‘, வாழ்கையின் துன்பப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் எவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய மிகச் சிறந்த படைப்பு.

பல நாட்களுக்கு முன்னரே வாங்கி வைத்த புத்தகம் என்றாலும் சில மனத் தடைகள் காரணமாக படிக்காமல் வைத்திருந்தேன். திரு. சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் குழுவில் எழுதியிருந்த இந்நூல் குறித்த அறிமுக உரை வாசித்த பின்னர் நூலைப் படிக்கும் ஆர்வம் அதிகரிக்க, சமீபத்தில் வாசித்தேன். இத்தனை நாட்கள் தள்ளிப் போட்டதற்காக வருத்தப்பட வேண்டியதாகிற்று.

பெங்களூரில் வாழும் பி. வி. பாரதி கவிதைகள், கதை, கட்டுரைகள் எழுதுபவர். ‘ சாசுவே தந்தவளு ‘ என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கையில் தொடராக எழுதிய அவரின் அனுபவக் கதையை கே. நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த படைப்பு ‘ கடுகு வாங்கி வந்தவள் ‘. இறப்பே இல்லாத வீட்டில், புத்தர் கடுகு வாங்கி வரச் சொன்ன கதையின் அடிப்படையில் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாரதியின் நோய் குறித்தான பயங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே பார்க்கிறேன் முக்கியமாக பெண்களுக்கு. எந்த நோய் பற்றி படித்தாலும் அது நமக்கும் இருக்குமோ என்று எண்ணி கலங்குவதை பலரிடம் கண்டிருக்கிறேன். ஆகையால் அவர் சொல்லும்போது நமக்கும் ‘ ஆமாம் ‘ போடத் தோன்றுகிறது. ஆனால் பாரதி அதிலும் சற்று அதிகப்படியாக சென்று சின்ன தலைசுற்றலுக்கும் பல சோதனைகள் செய்பவராக இருந்துள்ளார். தொடர்ச்சியாக இப்படியே செய்து பல வருடங்களை மன அழுத்தத்தில் தொலைத்தவர், ஒரு முடிவு செய்து இனி ALL IS WELL என்று கவலையில்லாமல் வாழத் தொடங்கிய நேரம், கேன்சர் கதவு தட்டியிருக்கிறது.

உண்மையில் தன்னை மிகவும் திடம் வாய்ந்தவராக நினைத்துக் கொள்ளும் பலரும், சிறு பிரச்சினையின் போது கலங்கி நிற்பதையும், எதற்கும் பயந்தவர் எனப் பெயர் எடுத்தவர் பெரிய சவால்களை மிகுந்த மனத் திடத்துடன் எதிர்கொள்வதையும் பார்த்திருப்போம். பாரதியின் விஷயத்திலும் அப்படியே நடக்கிறது.

உடல் மற்றும் மனத்தில் நோய் உண்டாக்கும் பலவீனத்தை தனக்கே உண்டான நிறை குறைகளுடன் வெற்றிகரமாகத் தாண்டி வருகிறார்.

நோயின் அதிர்ச்சியில் இருந்து மீளாத ஒருவரை மேலும் பலவீனமாக்கும் சில மருத்துவர்களின் உணர்ச்சியற்ற போக்கையும் பாரதி இங்கே சுட்டுகிறார். இது நோயாளிகளின் வேதனையையும் போராட்டத்தையையும் இரட்டிப்பாக்கி விடுகிறது.
கேன்சர் கட்டியைத் தொட்டுப் பார்க்க டாக்டர் வற்புறுத்துகையில் வேண்டாம் என அலறிய அந்தப் பெண்தான், நோயிலிருந்து அத்தனை துணிச்சலுடன் மீண்டார் என்பது வியப் பளிக்கும் விஷயம்.

தன்னை melodramatic என பாரதி வெளிப்படுத்திக் கொண்டாலும் அவரது எழுத்தில் அழுது வடிதல் எங்குமே இல்லை. மிகவும் சிரமமான சூழலிலும் தன்னையே பகடி செய்து கொள்ளும் sportive ஆன ஆளாகவே தெரிகிறார். சில வேளைகளில் அவர் காட்டும் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

கீமோ சிகிச்சையின் போது முடி இழப்பு ஏற்படும் என்பது தெரிந்திருந்தாலும் அந்த அனுபவத்தை பாரதி ஒவ்வொரு படியாக சொல்லும்போது ஒரு பெண்ணாக அந்த வலியை நினைத்து நெஞ்சம் பதைபதைக்கிறது.

எல்லாப் பெண்களும் நினைப்பதைப் போல ஒரு குடும்பத்திற்கு தான் indespensable என்று கருதியிருக்க, எப்படி insignificant ஆக மாறிவிட்டடோம் என்ற வேதனையையும் நேர்மையாக பதிவு செய்துள்ளார்.
நோயின் தாக்கத்தால் பல சமயங்களில் மனம் துவண்டு போனாலும் அதிலிருந்து மீண்டு வர அவர் எடுக்கும் முயற்சிகள் படிக்கும் எவருக்கும் ஊக்கமளிப்பவை.

// தயவு செய்து எச்சரிக்கையுடன் எங்களை கையாளுங்கள். நாங்கள் மென்மையானவர்கள்.// என்று அவர் கூறுகையில் நோயின் பிடியில் சிக்கியிருக்கும் நம் நெருங்கியவர்கள் நோக்கிய நமது பார்வையை மாற்றிப் போடுகின்றன.
மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே மெல்லிய கோடு தான் உள்ளது என்னும் எண்ணத்தை நம்மில் ஆழப் பதிக்கிறது இந்தப் புத்தகம்.

யு.ஆர். அனந்தமூர்த்தி, ‘ அனைத்து மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்க வேண்டும் ‘ எனக் கூறியுள்ளார். அவசியம் அனைவராலும் வாசிக்க பட வேண்டிய புத்தகம். நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நிச்சயம் உணரச் செய்யும்.

Exit mobile version