மின்கிறுக்கல்

உயிர் மீள்தல்

உயிர் மீள்தல்

பெரும்பெயலென என்னை நனைத்தது
உன் சாரல் பார்வைகள்!!
கூதல் காற்று நீல நிறத்தில் இளக்குகிறது மனதை!

அனலியின் வெப்பம் பரவ வேண்டிய நொடியில்
உரைதுளி ஆகின்றது உள்ளம் உன் நினைவுகளில்!

கல்கண்டை உருட்டி உருட்டி
எடுத்துச் செல்லும் எறும்பாய்
என் இதயத்தினை உருட்டிச் செல்கிறாய்!

அந்தியின் மஞ்சளை உன் மேனியில் கொண்டு
மந்தியாக்கி விட்டுச் செல்கிறாய் என்னை!!

இப்படியாக பல கவித் திவலைகளை தெளித்து விட்டு
என் பார்வைகளில் மரித்து, மரித்து உயிர் மீள்கிறேன் என்கிறாய்!

உடல் மரத்தவளுக்கு உணர்வுகளால் மீள்பவன் பாக்கியமே என்றேன்!
கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டு கலைந்தது கனவு!
வாசலில் அடுத்த வாடிக்கையாளன்!!!!

??????????????????????????

ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன்

வெய்யோனின் வெண்கதிர்கள் பட்டதில்லை!
அதிகாலைப் பனிக்காற்றில் முகம் மோதியதில்லை!
சில்லென்ற மழைத்தூரலில் நனைந்ததுமில்லை!
ஆனாலும் ஆனந்தத்திற்கு அளவில்லை!

மாட மாளிகைகளைக் கண்டதில்லை!
பஞ்சு மெத்தைகளில் புரண்டதில்லை!
மின்விசிறியைக் கண்டதுமில்லை!
ஆனாலும் சந்தோஷத்திற்கு குறைவில்லை!

வேளா வேளை உணவிற்கு பங்கமில்லை!
உறக்கத்திற்குப் பஞ்சமேயில்லை!
உடலுழைப்பிற்குத் தேவையில்லை!
மனதில் எந்த வஞ்சகமுமில்லை!

என் துயரெல்லாம் இது நெடுநேரம்
நீடிக்கப் போவதில்லை!
இனி இந்த இடத்தை வாழ்வில் மறுமுறை
நான் காணப் போவதுமில்லை!

என் தாயின் கருவறைக் கதகதப்பை
விட்டு வெளி வரப்போகிறேன்!
கலப்படமில்லா தாயன்பு மட்டும் உள்ள இவ்வுலகில் கடைசியாக
ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன்!

Exit mobile version