மின்கிறுக்கல்

உதிரிப்பூக்கள்

உதிரிப்பூக்கள்

பிறை நிலவாய் நீ
கும்மிருட்டாய் நான்
கரைகிறது இரவு
சிரித்தாய் மகிழ்ந்தேன்
அழுதாய் கசிந்தேன்
நீ என் முன் கண்ணாடி
நெருப்பைத் தின்கிறேன்
மாசு காற்றைக் குடிக்கிறேன்
இந்திய தேசத்தில்
வாழ்ந்து வருகிறேன்
ஆகாயத்தைப் பூமி பார்க்கிறது
நான் பூமியைப் பார்க்கிறேன்
நீ என்னைப் பார்க்கிறாய்
படபடத்துக் கொண்டிருக்கிறது
முள்ளில் சிக்கியிருக்கும் அந்தக் காகிதம்
விடுபடுமாவென்று தெரியவில்லை
பிச்சைப் பாத்திரங்கள் வீடு வீடாக அலைகின்றன
பிக்குகள் விஹார் செல்ல தவிக்கின்றனர்
தலைமைத் துறவி பட்னியாய் கிடக்கிறார்
வாழ்பவர்க்கு உம்மை தானமிடுங்கள்
ஆன்மாவிற்குத் தான் தெரியும் உம் வலி வேதனை அவமானம் அனைத்தும்
உடல் உதிரிக் கருவிகளின் பெட்டி
கண்ணீரில் புகைப்படங்களை கழுவுகிறேன்
உன் நினைவுகளாகவே தெரிகின்றன
கண்மூடி கனவுக்குள் ஆழ்கிறேன்
புறக்கணிக்கப்பட்ட குவளை
வெறுமை
நிரம்பும் வழியற்று
மீன்களைப் போல் சுட்டுத் தின்கிறது காலம் இரக்கமின்றி
துயரத்தின் நறுமணம் வீச
குளம் போல் வேடிக்கை பார்க்கிறது
வகையற்ற வாழ்க்கை
தொண்டையில் முள் குத்தியது போல்
தீராத வலியோடு நகர்ந்தபடி
பரிதவிக்கும் அந் நொடி.

??????????????????????????

சித்திரவதை முகாமிலிருந்து தப்பிப்பதல்ல… நிர்மூலமாக்குவதே விடுதலை என்பது.

அழுகையின் பின்னே
ஓடிக்கொண்டிருக்கிறது
என் கவிதை
உன் மெளனம் எனக்கு விஷமூட்டுகிறது
உன் அமைதி எனக்குள் தீ வைக்கிறது
உன் புறக்கணிப்பு என் உயிரை பிய்த்து பிய்த்து தின்கிறது
கனவு காணாதீர்கள்
காணாமல் போய் விடுவீர்கள்
கண்மூடும் நேரத்தில் நீங்கள்
பறிக்கப்பட்டது உங்கள் கோவணம்
பேசாமலிருந்தீர்கள்
பறிக்கப்பட போவது இனி உங்கள் உயிர் ?
ஏமாந்தவர்கள் கொள்ளட்டும் விரக்தி
ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள்
கோபம் கொள்வோம்
கொடுமைகள சுட்டெரிப்போம்
விருப்பம் மனங் கொல்லி
நேசம் உடல் கொல்லி
பாசம் உயிர் கொல்லி
ஆசாபாசம்
வாழ்வை வடிவமைக்கும்
புத்தகம் இருக்கிறது
எழுதியவன் இல்லை
இருக்கும் போது நினைக்காத உலகம் இறந்த பிறகு
நினைக்குமா ?
எதையோ தொலைத்து விட்டான்
எதையோ தேடுகிறான்
எதுவும் இதுவரை சிக்கவில்லை
மரணம் ஒரு தப்பித்தல் என்றால்
வாழ்வு சிறையா ?
வாழ்வதே எதிர்காலத்தை உருவாக்கவே
இதில் இறந்த காலமே
நிகழை செப்பனிடும்
போராட்டம் இன்றி வாழ்வில்லை
வாழ்வின்றி நாம் இல்லை
நுகம் தகரும்..
விடுதலைக் காலங்களை
வரும் சந்ததிக்கு பரிசளித்து……
சக உயிர்கள் கோடி நமக்கும் கீழ்.

??????????????????????????

அப்பாலும் இருள்வதினூடாக ஒளி

உலகம் இருக்கும் ஆனால் அப்படியேவா…இருக்கும் ?
மனிதன் இழக்க இழக்க…
இழந்தது திரும்புமா ?
அதே பொருட் செறிவில்?
இழப்பில் உலகம்
அப்படியே இருப்பதில்லை
மனிதம் தான் கவித்வம்
நேசம் தான் வாழ்வின் திறவுகோல்
எளிய வாழ்க்கையா இது ?
கனக்கும் சுமையால் திணறுவது
பின் ஏன் ?
அவலமும் ஓலமும் சூழ்ந்த
இக்காலத்தில்
மண்ணில் தலை புதைக்கும்
நெருப்புக் கோழியாய்
கனவுகளுக்குள் எப்படி
மயங்கிக் கிடப்பது ?
இன்று பார்ப்பதை
நாளை பார்க்க முடியுமா ?
மானுடத்தின்
போதாமைகளையும்
அபத்தங்களையும்
மகத்துவங்களையும்
லெளகீகத் தன்மைகளையும்
விருப்பமும் அச்சமும் துக்கமும்
பகிர்ந்து கொண்டிருக்கின்றன
அணைந்து போனவைகள் தவிர்த்து
மிஞ்சியுள்ளவை யாவும்
அப்படியேவா இருக்கும் ?
பறவைகளின் மரஞ் செடிகொடிகளின்
வாழ்வினூடாக
மனிதனும் தன் இருப்பை
அறிவித்துக் கொள்ள
காலம் நிர்ப்பந்திக் கொண்டே இருக்கிறது
ஒளி இருள் பெளதீகம்
பயம் வலி வேதனை அரூபம்
யாவும் நிரந்தரம்
யாவும் தற்காலிகம்
மாற்றம் மாறாதது.

Exit mobile version