மின்கிறுக்கல்

இசையில் தொலைதல்

இசையில் தொலைதல்

பூவரச இலையில்
பிதிலி செய்து ஊதினேன்.

சுரங்களின் மிழற்றல்
அலை அலையாய்…
பெருக்கெடுக்கிறது.

மண்வாசம் மிகுந்த
மழையின் வசீகரம்..

இலையுதிர் காலத்தின்
சோகத்தை
ஆன்மாவிலிருந்து
துடைத்துவிடுகிறது.

கசிந்து எழும்
பனி மூட்டத்தில்
மலைத்தொடர்கள்
கிறங்கியபடி.

பிரியம் ததும்பிட
பூக்களின் சந்தோஷம்
தென்றலாய்
ஊற்றெடுக்கிறது.

பறத்தலை மறந்தே
மரங்களெங்கும்
பறவைகளுக்கு.

இரை மறந்தே
சிலையாய் நிற்கும்
மிருகங்கள்.

பொங்கி வரும் புதுவெள்ளம்…!
பூமியின் இதயத்தை
குளிர வைக்க…
வானமே
பல் வண்ணத் திரையாக…
மிளிர்ந்திடுகிறது.

அன்பானவர்களோடு
கைகோர்த்துச் செல்வது போல
கனிந்த கனிகளின் மணம்
காற்றில் மிதந்து உடன் வர
இசையின் பயணம்
மெல்ல…
மெல்ல…
தொடருகிறது.

??????????????????????????

பசி

தெரு முழுக்க
நாயொன்று
அலைகிறது…
விழிகளில்
பரிதவிப்பு வழிய.

வயிற்றின் உதைப்பில்
ஓய்வு ஒழிச்சலின்றி
அந்நியரின் குரூரத்தில்
வலி பட்டு குமைகிறது.

கொதிக்கும் வெயிலில்
அடைக்கலம்..
மழையில் நனைந்து..
உயிர்க்கும்
அவஸ்தையில் ஆழ்கிறது.

கனாக்கள் நடமாடும்
நடுநிசியில்..
அதன் பெருமூச்சு
ஊளையிடலாக…
உரத்தொலிக்கையில்
உலகம் நடுங்குகிறது
மரண முன் அறிவிப்பென.

??????????????????????????

புத்தரின் தியானக் குறிப்பேடு

நதிக் கரையில் புத்தர்
அக்கரையைப் பார்த்தபடி
கசப்பும் வலி நிரம்பிய தொன்மையும்
இரு கண்களில் பீறிட.

வறண்டு நீரற்று
சாவின் விளிம்பில் உழலும்
முதிய மரத்தைப் போல
அந் நதி விசனமாய்.

யாரும் கடக்கலாம் எளிதாக
ஆனால் அவரோ
தீராத யோசனையோடு
கவலையும் வேதனையும்
கொப்பளிக்கும் முகத்துடன்.

கடந்து போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்
வந்தவர்கள்
திரும்பி போகிறார்கள்.

பயணம் தொடருகிறது…

காற்று வீசுகிறது மழை பெய்கிறது
சூரியன் வெளியேறி நிலா வருகிறது
இரவு கரைந்து பகல் வருகிறது
இருளும் ஒளியும் மாறி மாறி.

நீர் வரக்கூடிய அறிகுறிகள் இல்லை
கொதிக்கும் மணலாய்
வாழ்வுள் பெருகுவதைத் தவிர
வாழ்வதின் சூழல் குளிர்வதாயில்லை.

நிலைகுத்திய பார்வையோடு
அக்கரையை நோக்கி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறார்
புத்தரும் சூனியத்தின் மீது.

மனிதர்கள்
காலத்தைத் தாண்டி
இச்சை போனபடியே
போய்க் கொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version