வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
“வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்..
சாபமும் வரமும் சேர்ந்தே கல்லாக்கியதால்
எந்தக் காலடிக்கும் உயிர்ப்பதில்லை:
ஒன்றுமில்லாத ஒன்றின் பசி
பேரண்டமானதால்
தீராப்பசியாகி திசையெங்கும் அலைகிறது
அட்சய பாத்திரங்கள்
பண்டமாற்று முறைக்கு பணிக்கப்பட்டுவிட்டது
ஒன்றுதிரண்ட கோரப்பசி
கொக்கை மட்டும் விட்டுவிடுமா
தரணிக்கே உணவில்லாத போதும்
கலன்கள் காக்கப்படும்
அரண்கள் சிதைக்கப்படும் இங்கே
வயிற்றுக்குச் சோறிடவே
கடவுளிடமிருந்து விதைகள்
கையாடப்பட்டன:
புலம்பெயர்ந்த வாழ்வும்
நதிநோக்கி நகர்ந்தது..