மின்கிறுக்கல்

ஆடை கலைதல்

ஆடை கலைதல்

யாசிப்பவன்  கவலையற்றுத்
திரிகிறான்

பசியை  வென்ற  திமிர்  

புகார்  இல்லையென்று  
புறந்தள்ள  முடியாது
அகத்துள்  தீச்சுடர்
தேநீரில்  கழிகிறது நொடிகள்
கனவுகள்  நீர்க்குமிழியாய்  உடைகிறது
நதியாய்  நான்  போகிறேன்
வேதனை  தான்  மிச்சம்
பாடுகள்  வீணானது
கூடு  விட்டுப்  போனால்  தீருமா  ?
நினைவுகளைக்  கொல்லணும்
நிம்மதியாகிப் போய் விடும் 
நிதானமா நடந்து போகலாம்
பூக்கள்  நிரம்பித்  தள்ளாடுகிறது
வாசம்  ததும்பி  ததும்பி  ஓடுகிறது
கண்கள்  இரண்டு  பாதைகளை  தவித்துத்  துளாவுகிறது
மலர்கள்  மகிழ்ச்சியாய்  சிரிக்கின்றன
மேகங்களோடு  உரையாடுகின்றன
காற்றிலாடி  வண்ணத்துப்  பூச்சிகளைக்  காதலிக்கின்றன
இருளுக்குள்  விதையாய்  வாழ்ந்தேன்
வெளிச்சத்திற்கு  இளஞ்செடியாய்  வந்தேன்
மரமாய்  ஒளியில்  திளைத்தாடுகிறேன்
போதி  மரத்தைத்  தேடினேன்
புத்தனைத்  தேடவில்லை
நானும்  புத்தனாக  மாறணும்
புதைந்து கிடந்த    
விதையோ  வீறு  கொண்டெழுந்து  விருட்சமானது
நதியில்  குளித்தெழுந்தேன்
நதியில்  குளித்தெழுகிறேன்
நதியில்  குளித்தெழுந்து  கொண்டிருப்பேன்

மெளனத்தின் பயாஸ்கோப்

சிரிப்பு  வருகையில்  சிரியுங்கள்
அழுகை  வருகையில்  அழுங்கள்
இயல்பாய்  இருப்பதில் 
அழகு  துளிர்க்கும்
நீங்கள்  அழகானவர்  சந்தோஷப்படுகிறீர்கள்
நீங்கள்  அசிங்கமானவர்  துக்கப்படுகிறீர்கள்
நீங்கள்   மற்றவர்  அபிப்பிராயத்தில்  வாழ்கிறீர்கள்
தேடிக்  கொண்டேயிருக்கிறான்
கிடைத்தும்  தேடல்  முடிவதாயில்லை
தேடுவதே  அவன்  தேவையாயிருக்கிறது
இயற்கையை  வெல்ல  வேண்டாம்
இயற்கையோடு  இயைந்திட  வேண்டும்
இயற்கை  இசைவோடு  நெருங்கி  வரும்
நான்  யார்  நான்  அறியவில்லை
நான்  யாரென்று  நான்  அறிமுகப்படுத்தப்  போகிறேன்
நான்  அறிந்த  நான்  வாழ்வை  நேசிப்பேன்
சரீரம்  என்பது  சர்ப்பம்
சரஸமாடும்  கூத்தாடும்
சங்கடமில்லாமல்  தின்னும்  காலம்
எப்போதாவது  சந்தோஷம்
எப்போதாவது  துக்கம்
எப்படியோ  கழியுது  வாழ்க்கை
நாணற்பூவால்  மெல்ல  வருடுகிறேன்
பூனைக்குட்டி  போல  மல்லாந்து  மேனி  சிலிர்க்கிறாள்
மவுனத்தில்  காதலின்  சித்திரங்கள்  உயிர்  பெறுகின்றன.

அழியாத் தடங்கள்

பறத்தலில்  பறவை
பார்த்தலில்  நான்
காலத்துள்  நான்  மற்றும்  பறவை
நேயா  உன்  தொடுதல்கள் 
சொஸ்தப்படுத்தின
நரகக்கனல்  தணிந்து  போனது
பூவின்  ஸ்பரிசத்தில்
அமைதியுறுகிறேன்
மியாவ்  சத்தம்
இரவு  நடுங்குகிறது
எனக்கு  ஏன்   வேர்த்துக்  கொட்டுகிறது  ?
கனவுகளின்  பெருவெளி
மரணத்தின்  உடலெங்கும்  படர்கிறது
கசிந்து  உருகும்  உயிரின்  நிழலாக 
அசைந்தாடுகிறது
ஜன்னலை  மூடி  விட்டாய்
கண்கள்  தவிக்கின்றன
பற்றி  எரிவதற்குள்  திறந்துவிடு
சப்பளிஞ்சு  கிடக்கிறது
வெளிநாட்டுக்கார்
உள்ளே  இரத்தக்  கறை
சாவு  விட்டுச்  சென்ற  தடயம்.

Exit mobile version