மின்கிறுக்கல்

அழுக்குக்கண்ணாடி – 4

Mind

னம் ஒரு கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்று பார்த்தோம். சாட்டையைக் கையில் எடுத்து சுழற்றாதவரை நாம் தான் அதற்கு அடிமையாக இருப்போம். இங்கே சாட்டை என்னும் கருவி சிங்கத்தை பயிற்றுவிக்க உதவியாக இருக்கிறது. அதுபோல் மனதைப் பயிற்றுவிக்கும் கருவி உண்மையில் இருக்கிறதா என்ன..? அது மட்டும் கிடைத்தால் உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக தீர்த்துவிடலாமே. அத்தகைய சாட்டை நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அந்தச் சாட்டையின் பெயர்தான் விழிப்புணர்வு. நாம் விழித்துக்கொண்டுதானே இருக்கிறோம் என்று நீங்கள் கருதலாம், ஆனால் நாம் அனைவருமே உண்மையில் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். அதுவும் சாதாரணத் தூக்கமல்ல எழ முடியாத அளவிற்கு மிக ஆழமான நீண்ட நித்திரையில் இருக்கிறோம். சில சமயம் கண்களை மூடியபடியும், பல சமயங்களில் கண்களை திறந்தபடியும் தூங்குகின்றோம். அதெப்படி?

இதைப் புரிந்துகொள்ள, முதலில் மனம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் பார்ப்போம். கடந்தகால நினைவுகளும், எதிர்காலக் கற்பனைகளும்தான் மனமே தவிர அதற்கு நிகழ்காலத்தில் எந்த வேலையும் இல்லை. இதனால்தான் நாம் எடுக்கும் நிறைய முடிவுகள் கடந்தகால அனுபவத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. ஆனால் எதிர்காலமோ நம் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. இறந்தகால அனுபவங்கள் கைகொடுக்காத போது, எதிர்காலக் கற்பனைகள் அந்த இடத்தை இட்டு நிரப்புகின்றன. ஆனால் இரண்டிற்கும் நடுவே இருக்கும் நிகழ்காலத்தில் மட்டும்தான் வாழ்க்கை இருக்கிறது. அந்த நிகழ்காலத்தில் நிற்க முடியாமல், மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த இரு துருவங்களையும் தொட்டபடி ஊசலாடிக்- கொண்டேயிருக்கிறான். அந்த ஊசலாட்டத்திற்குப் பெயர்தான் “எண்ணங்கள்”.

மனம் என்பதே இந்த எண்ணங்களின் கூட்டம்தான். நிகழ்காலத்தில் “நாம்” இல்லாமல் போனால் “எண்ணங்களே” ஆட்சி செய்யும். இங்கே “நாம்” என்று குறிப்பிட்டது நமது விழிப்புணர்வை. முடிந்துபோன முதல் செமஸ்டர் புத்தகத்தை வைத்து அடுத்த செமஸ்டர் தேர்வுக்குத் தயாரானால் அல்லது முழுக்க முழுக்க கற்பனைகளாலான ஒரு புத்தகத்தின் அடிப்படையில் தேர்வை எழுதினால் அதன் முடிவு எவ்வாறாக இருக்கும்?  கேள்விகள் புத்தம் புதியதாக நிகழ்காலத்தில் கேட்கப்பட்டுக்கொண்டேயிருக்க, நாமும் விடாமல் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ, நமக்கு முன்பே தெரிந்ததையும், கற்பனையில் தோன்றுவதையும் பலவந்தமாக எழுதுகிறோம். முதலில் கேள்விகளைப் புரிந்துகொள்ள நிகழ்காலத்தில் நிற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. நிகழ்காலத்தில் இருப்பதும், விழிப்புணர்வோடு இருப்பதும் வேறு வேறல்ல.

இதை கனவுகளோடு பொருத்திப் பார்த்தால் மிகத் துல்லியமாக புரிந்துகொள்ளலாம். நாம் தூக்கத்தில் கனவு காண்கிறோம். தொடர்ச்சியாக இயங்கும் மனம் எண்ணங்களின் மூலம் கனவுகளாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. அந்தக் கனவில் ஒரு சிறிய வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். அந்தக் கனவு இனியதாக இருந்தாலும், மிகக் கொடுமையாக இருந்தாலும், எழுந்த பிறகே புரிகிறது இவையெல்லாம் கனவுதானென்று. ஆனால் கனவு காணும் அந்த நேரமெல்லாம் அது மிகவும் உண்மையென்று நினைத்து, சிரித்து, அழுது, சண்டையிட்டு, இப்படி பலவகையான காரியங்களைச் செய்கிறோம்.

இதே கனவை, இது கனவுதான் உண்மையில்லை என்கிற உள்ளுணர்வோடு நாம் பார்க்க நேர்ந்தால் என்னாகும்? கனவில் நடக்கும் ஆபத்தும் நம்மை பயமுறுத்தாது, அங்கு ஏற்படும் லாபமும் சந்தோஷமும் நம்மை குதூகலப்படுத்தாது. அது வெறும் கனவுதான் என்ற உணர்வோடு திரையில் ஓடும் படங்களைப் போல்தான் பார்ப்போம் அல்லவா? அதேபோல்தான் நாம் விழித்திருக்கும் போதும் நம் மனத்திரையில் எப்போதும் “எண்ணங்கள்” என்கிற அந்த நீண்ட திரைப்படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இடைவேளையே இல்லாத அந்தத் திரைப்படம் தான் நமக்கு நிறையப் பிரச்சனைகளை, இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இல்லாத பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. நிகழ்காலத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கிறது. தூங்கும்போது எப்படி கனவுகளை நிஜமென்று நம்பி அதற்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறோமோ, விழித்திருக்கும்போதும் நாம் அதையேதானே செய்கிறோம்.

இப்போது சொல்லுங்கள் நாம் நிஜத்தில் விழித்துக்கொண்டுதான் இருக்கிறோமா என்ன? கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு, வேலைகள் செய்துகொண்டு, சந்தோஷத்தையோ துக்கத்தையோ அடைந்துகொண்டு வாழ்க்கையைக் கடத்தி கடைசிவரை உள்ளே ஓடும் திரைப்படத்தை கண்டுகொள்ளாமலே ஒரு நாள் கரைந்தும் போகிறோம். ஒரு நல்ல திரைப்படத்திற்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம். வளவளவென்று நிறுத்தாமல் சென்றுகொண்டே இருந்தால் யார்தான் ரசிப்பார்கள். நாம் நம் வாழ்க்கையை ரசிக்கமுடியாமல் போவதற்குக் காரணமே இந்த கத்தரி போடப்படாத திரைப்படம்தான். விழிப்புணர்வு என்கிற கத்தியை எடுத்து எடிட் செய்ய ஆரம்பிப்போம்… காத்திருங்கள்… 

-தொடரும்.

Exit mobile version