உலகத்திற்கான பொது அறம் மட்டுமில்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறம் இருக்கிறது. அப்படி ஒரு எழுத்தாளன், ஒரு வியாபாரி மற்றும் அந்த வியாபாரியின் மனைவி, இவர்களின் அறம் பற்றி பேசுகிறது ஜெயமோகனின் அறம்.
படிக்க ஆரம்பிக்கும் போதே இது ஒரு உண்மைக்கதை என்பதை புரிந்துகொள்ள முடியும். பாதிக்கபட்டவரே கதை சொல்ல தொடங்குகிறார். என்னதான் புகழ்பெற்ற எழுத்தாளர்களாக இருந்தாலும் சிலரைத் தவிர மற்ற அனைவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளனர். இவரும் இப்படி பின்தங்கிய நிலையில் உள்ள ஒருவர் தான்.
தன் குடும்ப சூழலை முன்னிட்டு ஐயாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஒரே வருடத்தில் நூறு புத்தகங்களை எழுதி முடிக்கும் சவாலான காரியத்தை ஒப்புக்கொள்கிறார். ஒப்புக்கொண்டதை செய்தும் முடிக்கிறார்.
அவர் புத்தகங்களும் அடுத்தடுத்து பல பதிப்புகள் கண்டு அமோக விற்பனையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு சம்பளமாக அப்பப்போ எழுத்தாளர் குடும்பத்தின் பசியை போக்க நூறு இருநூறு மட்டுமே கொடுத்துகொண்டிருந்த பதிப்பக உரிமையாளர் மொத்த தொகையையும் கொடுத்து முடிக்கவில்லை.
எழுத்தாளரும் எவ்வளவு பணம் தன்னிடம் வந்தாலும் தன் வறுமைக்கு அது இரையாகிவிடும் என்ற அச்சத்தில் பாக்கி மூவாயிரம் ரூபாயை பதிப்பக உரிமையாளரிடமே விட்டு வைத்துள்ளார்.
ஒருநாள் எழுத்தாளரின் மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. தன் பணத்தை பெற பதிப்பாளரிடம் ஓடி வந்தவருக்கு ஏகவசனமும் ஏமாற்றமும் மட்டுமே கிடைத்தது. கத்திப்பார்த்தார் கெஞ்சிப்பார்த்தார் காலிலும் விழுந்தார் ஒரு பலனும் இல்லை. ஓரிரவு முழுவதும் கடை வாசலில் காத்துக்கிடந்தார் மறுநாள் மீண்டும் காலில் விழுந்து கதறிப்பார்த்தார் அப்போதும் எந்த பலனும் இல்லை.
கொதித்தெழுந்தார் கோபத்துடன் பதிப்பாளரின் வீட்டுக்கு சென்றார். பதிபாளரின் மனைவியிடம் நடந்ததைக் கூறினார். கோபத்தின் உச்சமாக உங்கள் குலத்திற்க்கே சரஸ்வதி கடாட்ச்சம் இல்லாமல் போகட்டும் என்று சபித்தார். சாபத்தின் உச்சமாக “அறம் வெண்பா” ஒன்றை அந்த இடத்திலேயே ஒரு துண்டு காகித்தில் எழுதி பதிப்பாளர் வீட்டுக் கதவில் ஒட்டிச் சென்றுவிட்டார்.
இலக்கியம், வெண்பா பற்றியெல்லாம் எதுவும் தெரியவில்லை என்றாலும் தன் கனவன் செய்தது மாபெரும் தவறு என்பதை உணர்ந்துகொண்ட பதிப்பாளரின் மனைவி. தன் கனவன் கடைக்கெதிரில் தார் சாலையில் கொதிக்கும் வெயிலில் தர்ணா போராட்டத்தில் இறங்குகிறார்.
பின் பதிப்பாளர் பணத்தைக் கொடுத்தாரா? எழுத்தாளரின் மகள் திருமணம் நடந்ததா? இதெல்லாம் மீதிக்கதை.
எழுத்தாளர் என்றாலே சினிமா வசனங்கள் எழுதி பல லட்சங்கள் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள் என எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு. அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கே அல்லோலப்படும் படைப்பாளிகள் இருந்தார்கள் இருக்கிறார்கள் என அழுத்தமாக சொல்கிறது இந்த அறம்.
“அங்கே இங்கே என கடன் வாங்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒரு வியாபாரியிடம், திடீரென மூவாயிரம் கொடு” என்று கேட்டது தன்னுடைய தவறு என எழுத்தாளர் உணரும் போது வியாபாரியின் அறத்தை நமக்கும் உணர்த்தி விடுகிறார்.
ஆனாலும் தலையில் கனமெறிய வியாபாரி தன் ஏச்சாலும் பேச்சாலும் விரட்டியடிக்கும் போது எழுத்தாளர் எதிர்வினையாக தன் அறத்தை சாப வெண்பாவாக வெளிப்படுத்துகிறார்.
இறுதியில் இன்னோருவர் துன்பம் போக்க அறவழியில் கொதிக்கும் வெயிலில் தார் சாலையில் சென்று அமர்ந்தாளே அந்தப் பெண் அவளின் அறமே சிறந்தது என கதையை முடிக்கிறார்.
உண்மைக் கதையின் உண்மைத் தன்மைக்காக எழுத்தாளரின் ஏழ்மையை விளக்க சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருப்பது மட்டுமே எனக்கு நெருடலாகப் பட்டது. மற்றபடி அறம் அழுத்தமாக பல அறங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
சிங்கபூர் எழுத்தாளர் கழகம் மாதாந்திரம் நடத்தும் கதைக்களப் போட்டியில் முதல் பரிசு பெற்ற விமர்சனம்.