மின்கிறுக்கல்

அப்பாவின் காதலி

மெயின்  ரோட்டில் 2 ஏக்கரில்  இருந்த தென்னந்தோப்பை அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன்மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட  கேட்க்காமல்   அடிமாட்டு விலைக்கு வித்துட்டான் , எவ்வளவு பெரிய சொத்து  தெரியுமா ?

35  வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது . இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு  உருத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிப்ள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறு வயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

துரைபிள்ளைக்கும் அலமேலு ஆச்சிக்கும் உள்ள கனெக்சன் கதைகள் பங்காளிகள் மட்டுமல்ல ஊர் வாயிலும்  அவ்வப்போது வந்துதான் போகிறது. ஆனால், வளவனுக்கு   இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை.  அப்பா, அம்மா மீது கொண்டிருந்த காதல் ஊரே வியந்த ஒன்று, விவரிக்க முடியாதது , அம்மாவின் கண்ணசைவு இல்லாமல்  தென்னந்தோப்பு  கிடக்கட்டும்    ஒரு  குண்டூசியைக்கூட  அப்பாவால் விற்க முடியாது.

எந்த ட்ரவுசர்  போடணும், எந்த பனியன் போடணும் என்று அம்மாவிடம் அனுமதி கேட்டு காத்து நிற்கும் அப்பா, அம்மா கிழித்த  கோட்டை வாழ்நாளில் தாண்டாத அப்பா,  எப்படி   அம்மாவுக்கு தெரியாமல் அலமேலு ஆச்சியிடம் போய் மயங்க முடியும்? மேலும் இப்போது இருப்பது போல் பாய் ப்ரண்ட், பெஸ்டி போன்ற காலச்சாரமும் அப்போது இல்லை.

அப்புறம்  அப்பாவை மயக்கும் அளவுக்கு அலமேலு ஆச்சிக்கு என்ன அவசியம், கோடிக்கணக்கில் சொத்து , அரசியலில் கோலோச்சும் கணவர் , படை பரிவாரம் என எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்த  அலமேலு ஆச்சிக்கு அப்பா போன்ற அப்பாவிக்கு  வலை விரிக்க வேண்டிய தேவையே இல்லை.

அதே சமயம்  இந்த தென்னந்தோப்பு கைமாறிய விதமும் உறுத்துகிறது.வளவன்  இதை எப்போது யோசித்தாலும் முடிவில் குழப்பம்தான் மிஞ்சுகிறது.

வளவன் பத்தாவது பாஸ் செய்த போது அப்பா மூன்று தெரு தள்ளியிருக்கும்  அலமேலு ஆச்சி வீட்டுக்கு மிட்டாய் கொடுக்க  அழைத்து போயிருந்தார், பிரமாண்டமான வீடு, மேஜை நாற்காலிகள் அலமேலு ஆச்சியின் கணவர் சிவநேசன் கடா மீசையுடன்   MGR க்கு வீரவாள் பரிசளிக்கும் ஆளுயர போட்டோ என வளவனுக்கு மிரட்சியாக இருந்தது.  தலையயை தடவி திருநீர் பூசிவிட்ட அலமேலு ஆச்சி மட்டும்  இந்த  பிரம்மாண்டத்திற்கு ஒவ்வாத, எளிமையானா  பெண்ணாக  தெரிந்தாள்.  அப்போது போனதுதான்  அதன் பின் அவர்கள்  வீட்டை ஒட்டியிருக்கும் தென்னந்தோப்பு கைமாறியது அதனால் ஏற்பட்ட குடும்பச் சண்டை என அலமேலு ஆச்சியின் வீடு அவனுக்கு ‘எனிமி’ வீடாகி போனது .

பல வருடங்கள் கழித்து  வளவனின் அப்பா இறந்தபோது அலமேலு ஆச்சியும் அவர் கணவரும் பெரிய மாலையுடன் வந்தார்கள் , ஆச்சி அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு ரொம்ப நேரம் அமர்ந்திருந்தது துக்கத்திற்கு வந்த எல்லோர் பார்வையும் அவர்கள் பக்கமே இருந்தது, அப்பாவின் காதலி என்ற  பங்காளிகளின் முணுமுணுப்பு மரண வீட்டிலும் ஒலித்தது.

காலம் சுழன்று கொண்டே இருந்தது ,அலமேலு ஆச்சி கணவர் கட்சி தனக்கு சீட் தரவில்லையென சுயேச்சையாக நின்று  தென்னத்தோப்பை  தவிர எல்லாவற்றையும் ஏன் குடியிருந்த அந்த பிரமாண்ட வீட்டையும் விற்று சிலவு செய்து 11 ஓட்டுகளில் தோற்று போய், உடல் நலம் குன்றி ஒரு நாள் இறந்து போனார் . 

வளவனால்  துக்கத்திற்கு  கூட போக முடியவில்லை. ஆச்சியின் இரண்டு பிள்ளைகளும் அந்த தென்னந்தோப்பின் முன் பகுதியில் ஒரு வீடு கட்டி அதில் அலமேலு ஆச்சியை  தனியாக விட்டுவிட்டு சென்னையில் செட்டில் ஆகி விட்டார்கள்.

வளவனின்  அம்மாவுக்கும் உடல் நலம் குன்றியது, பங்காளிகள் விடுவதாக இல்லை ஆச்சியின் வீடிருக்கும் முன்பகுதியை தவிர்த்து மீதம் உள்ள இடத்தை கேட்டு வாங்க சொன்னார்கள். விற்றது விற்றதுதான் அந்த பேச்சை எடுக்காதிங்க , அப்பா மேல சாத்தியமா யாரும் அங்க போய் நிக்க கூடாது, வளவா நீதான் பொறுப்பு என வளவனின்  அம்மா திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். 

வளவனின் அம்மா இறந்த பின் அப்பாவின் காதலியும் தென்னந்தோப்பு கதையும்  மீண்டும் உயிர் பெற்று விட்டது. ஆச்சி குடியிருக்கும் பாகத்தை தவிர்த்து மீதியிடத்தை விலைக்கு கேட்க சொன்னார்கள்

 பங்காளிகளின் வற்புறுத்தல் தாளாமல் , வளவனுக்கு  ஒரு முறை போய் அலமேலு ஆச்சியை பார்த்துவிட்டு வரலாம் என  தோன்றியது .

35 வருடம் கழித்து ஆச்சி வீட்டுக்கு வளவன் போனான்.  வளவனுக்கு எதோ தன் காதலியயை பார்க்க போகும் பரவசம்.

ஆச்சி டிவி  பார்த்துக்கொண்டிருந்தாள் , வளவனை  எளிதில் அடையாளம் காண முடியவில்லை

ஆச்சி நான் துரை  மகன் வளவன் வந்திருக்கிறேன்.  என்று குரல் கொடுத்தான் வியந்த படி கதவை திறந்து கட்டி பிடித்துகொண்டாள், விசும்பினாள், நரைத்து, நடை தளர்ந்து என்பது வயதை நெருங்கும் ஆச்சிக்கு  அந்த முக பிரகாசம் மட்டும் குறைய வில்லை.

வளவனின் கையை இறுக பிடித்து தன் பக்கத்திலேயே  உட்கார வைத்துக்கொண்டாள்

நல விசாரிப்புகளுக்கு பிறகு  மெல்ல வளவன் அப்பா பற்றிய பேச்சு வந்தது

ஆச்சியின் கண்கள் விரிய  பேசிக்கொண்டிருந்தாள்

உன் அம்மாவும் அப்பாவும் இந்த  தென்னந்தோப்புக்கு தினமும் சைக்கிளில்  வந்துவிடுவார்கள். சுத்தம் செய்வது, தேங்காய்  பொறுக்குவது, புல்  அறுப்பது என  இருவரும் வேலை செய்வதை என் வீட்டு மாடியிலிருந்து பார்ப்பதுதான் எனக்கு பொழுது போக்கு.

சில சமயங்களில்  வீட்டில் கட்சி ஆள்கள் யாரும் இல்லையென்றால் நானும் அவர்களுடன் போய் பேசிக் கொண்டிருப்பேன்

உன் அப்பா உன் அம்மவை பார்த்துக்கொண்டது போல் எந்த கணவனும் இந்த உலகத்தில் பார்த்துக்கொள்ளமுடியாது வளவா.  அம்மாவை ஒரு குழந்தையைப்  போல்  சைக்கிளில் உட்காரவைத்து  முன்பக்கமாக அவர் சிரமப்பட்டு தன் காலை தூக்கி போட்டு சைக்கிள் ஓட்டும் காட்சியெல்லாம்   மறக்கவே முடியாது .

உன் அப்பா அம்மாவை பார்த்துக்கொள்ளும் அந்த ரஸவாத செயலால் எனக்கும் உன் அப்பாவை ரொம்ப பிடித்து விட்டது

எங்கள் வீட்டில் அப்போதே கார் இருந்தாலும் எனக்கு உன் அப்பாவின் சைக்கிளில் ஒரு முறை போக வேண்டும் என்ற ஆசை.

ஒரு நாள் வெட்கத்தை விட்டு உன் அம்மாவிடம்,  என்னை சைக்ளில் வைத்து ஒரு ரவுண்ட் அடிச்சு கொண்டு வந்து விட சொல்லுங்க  அக்கா என்று கேட்டு விட்டேன்

உன் அப்பா அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்,  அட என்னம்மா நீ சின்ன குழந்தை மாதிரி சைக்கிள்ல  போறதுக்கு ஆசைப்படற  என்று சொல்லி, உன் அம்மா அப்பாவுக்கு அனுமதி வழங்கினாள். என்னை விட உன் அப்பவும் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்ததை  அவர் முகம் பார்த்து தெரிந்து  கொண்டேன் .

என்னை மெயின் ரோடு வழியாக ஊர்ப் பள்ளிக்கூடம்  வரை அழைத்து போய் திருப்பி கொண்டு வந்து விட்டார். நான் உன் அம்மா போல் இல்லமல்  ஓடுகிற சைக்கிளில் ஏறி அமர்ந்தது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி .

உன் அப்பா எதோ புத்தகம் பத்தியெல்லாம் பேசிக்கொண்டே  ரொம்ப மகிழ்ச்சியாக சைக்கிள் மிதித்தார், எனக்கு எதுவுமே காதில் விழவில்லை, உற்ச் சாகத்தில் மிதந்தேன் அன்று எனக்கு இருந்த சந்தோஷம்  வேறு எப்போதும் இருந்ததில்லை. 

அந்த சைக்கிள் பயணம் தெருவில் உள்ளவர்கள் கண்ணில் பட அது நெருப்பாய் பரவி இன்று வரை எரிந்து கொண்டே இருக்கிறது வளவா.

என் வீட்டுக்காரரும் அன்று ரொம்ப திட்டினார். ரெண்டு புள்ள பெத்த பொம்மனாட்டி செய்யற வேலையா இது ?  கப்பல் மாதிரி காரு  இருக்கு. நீ இன்னோருத்தன்  சைக்கிள்ள  போயிருக்க, ஆத்து  நிறயா தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்  என்று ரொம்ப கேவலமாக பேசினார்.

இந்த கோபத்தை அவர் தேக்கி வைத்து உன் அக்கா கல்யாணத்திற்கு பணம் கேட்டு வந்த உன் அப்பா அம்மாவிடம் இந்த தென்னந்தோப்பை கிரயமாக  எழுதிக் கேட்டார் , அதுவும் கால்வாசி விலையில். இருவரும் கண் கலங்கி நின்ற காட்சி எனக்கு உயிரே போய்விடும் போலிருந்தது

வேறு யாரிடமும் இந்த இடத்தை விற்க முடியாமல் விலை கேட்டு வருபவர்களையும்  தன்  அரசியல் பின்புலத்தால் கலைத்து விட்டார் என் கணவர்.

அது தென்னந்தோப்பு அல்ல உன் அம்மா -அப்பாவின் காதல்ச்  சின்னம்,  அது யார் கைக்கும் போவதையும்  நான் அப்போது விரும்பவில்லை

அதனால் என் கணவர் சொன்ன விலையை  உண்மை  விலையிலிருந்து கழித்துக்கொண்டு மீதம் உள்ள தொகையை  என்னிடம் இருந்த பணத்தில் இருந்து எடுத்து யாருக்கும் தெரியாமல் உன் அப்பா அம்மாவிடம் கொடுத்து சாகும் வரை இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டேன். தயங்கி, தயங்கி பயந்து கொண்டே வாங்கினார்கள்.

பின் என் கணவர் சொன்ன விலைக்கே கிரயம் நடந்தது . அடிமாட்டு விலைக்கு தோப்பை வாங்கியதற்கு என் கணவர் மகிழ்ச்சியில் எல்லோருக்கும் பார்ட்டி வைத்து கொண்டடினார் .

நான் நமட்டு  சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தேன். உன் அப்பாவும் அம்மாவும் கை கூப்பி தொழுதார்கள்.

இதில் எனக்கு பெரிய இழப்பு என்னவென்றால் உன் அப்பவும் அம்மவும் தோப்புக்கு வராமல் அவர்களை பார்க்காமல் போனதுதான்

அவர்கள் சொன்னபடி ரகசியம் காத்தார்கள். யாருக்காவது கொஞ்சம் சொல்லியிருந்தாலும் என் கணவருக்கு உண்மை தெரிந்து என்னை உயிரோடு கொளுத்தியிருப்பர் .

வளவனுக்கு மனது நெகிழ்ச்சியில் கூத்தாடியது .  அப்பா அம்மா மீது வைத்த காதல், அந்த காதலை பார்த்து ஆச்சிக்கு ஏற்பட்ட ஈர்ப்பு , தென்னந்தோப்பு கை மாற ஆச்சி செய்த தந்திரம், அப்பா வின் சைக்கிளில்  போகும் போது அப்பா புத்தகங்கள் பற்றி பேச  அதை காதில் வாங்காமல் உற்சாகத்தில் திளைத்த,   ஆச்சி அப்போது ஏற்பட்ட ஒரு மென் காதல், ஆகா என்ன ஒரு ஏகாந்தம் . 

வளவன் ஆச்சியிடம் பங்காளிகள் இடம் பற்றி சொன்னதை பேசாமலே  விடை பெற்றான். வீட்டை விட்டு இறங்கி தென்னந்தோப்பை  ஒரு ரவுண்ட் அடித்தான் ,

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே..

என்ற பாரதியின் வரிகள் மனதுக்குள் ஓடின.

ஆச்சி ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள் . 

வீட்டுக்கு வந்தவுடன் பங்காளிகள் வளவனை சூழ்ந்து கொண்டார்கள்

இவர்களிடம் எதைச்சொல்வது ? ஆச்சி முழு பணமும் கொடுத்துவிட்டார்கள் என்பதை நம்புவார்களா ? மென்காதல் என்றால் புரியுமா? வளவன் எதுவும் சொல்லாமல் இருந்தான்   

அவர்கள் பொறுமை இழந்து திட்ட ஆரம்பித்து விட்டார்கள்

அந்த கிழவி உன்னையும் மயக்கிவிட்டாளா ,   அப்போவே  நினைச்சோம் , நீயும் உங்கப்பன் மாதிரி புக் படிக்கிற லூசு தானே, இனி தென்னந்தோப்பு வாங்குன மாதிரிதான், அப்பன், ஆத்தா, புள்ள  எல்லாம் லூசுங்க போல என்று பேசிக்கொண்டே போனார்கள்.

தென்னந்தோப்பு அப்புறம் வாங்கலாம் முதலில் ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று வளவன் யோசித்தான்.

Exit mobile version