மின்கிறுக்கல்

அனார்யா

மராத்திய மூலம் : சரண்குமார் லிம்பாலே
தமிழில் : எஸ். பாலச்சந்திரன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சரண்குமார் லிம்பாலே, மராத்திய எழுத்தாளர், கவிஞர் மற்றும் இலக்கிய விமர்சகர். இதுவரை நாற்பதிற்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவருக்கு பெரும் கவனத்தைப் பெற்றுத் தந்தது இவரது சுயசரிதை நூலான, ” அனார்யா ‘ அல்லது ” அக்கர்மாஷி ” என்கிற நூல் தான். இந்நூல் ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் பெரும்பாலும் சரண்குமார் தனது இளமைக்கால அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்.

ஒழுக்கங்கள் குறித்த மதிப்பீடுகள் எதுவும் பெரிதாக இல்லாமல் வயிற்றுப் பசியைப் போக்குவதிலேயே அவரைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கை கழிகிறது. அவர்களுள் ஒருவனாக இருந்தாலும் சரண்குமார் மட்டும் சுயமரியாதைச் சிந்தனைகளால் பல சமயங்களில் அலைக்கழிக்கப்படுகிறார். வயிற்றுப் பாட்டிற்காக தாங்கள் செய்ய வேண்டியிருக்கும் வேலைகள் குறித்து மிகுந்த வேதனையோடு எழுதுகிறார்.

ஒரு கோப்பை தேநீருக்காக அவர்கள் படும் சிரமங்கள் மிக அதிகம். பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு பேருந்து வரும்போதும் அதன் மேலுள்ள மூட்டைகளை இறக்க இவர்கள் குடும்பத்தோடு காத்திருக்கிறார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம் கொண்டு அவர்களால் தேநீர் தான் வாங்க முடிகிறது.

ஒருவேளை உணவிற்காக சரணின் தங்கைகள் திருடுகிறார்கள். அவரின் குடும்பம் சாராயம் காய்ச்சுகிறது. சமயங்களில் பிச்சையும் எடுக்கிறார்கள்.

சரணின் பாட்டி, மாடுகளின் சாணத்தில் வரும் செரிக்கப்படாத கம்பு மணிகளை எடுத்து, காய வைத்து பொடியாக்கி ரொட்டி சுட்டு உண்ணுகிறாள்.

சரண் சித்தரிக்கும் காட்சிகள் படிக்கும் போது, நாம் எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி நம்மை ஆட்கொள்கிறது.

தாழ்ந்த ஜாதியாக கருதப்படும் மஹர் ஜாதியைச் சேர்ந்த தாய்க்கும் உயர்ந்த ஜாதியென கருதப்படும் பாட்டீல் இனத்தைச் சார்ந்த தந்தைக்கும் முறையற்ற உறவால் பிறந்த சரண் குமார், இந்த குழப்பதினால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுகிறார்.
// என் அம்மா தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவளாக இருக்கும் போது, நான் மட்டும் எப்படி உயர்ந்த சாதிக்காரனாக இருக்க முடியும்?நான் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவன் என்றால் உயர் சாதிக்காரரான என் அப்பாவின் நிலை என்ன? நான் ஜராசந்தனைப் போன்றவன். எனது ஒரு பாதி ஊரோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. மறுபாதியோ சேரியோடு பிணைக்கப்படிருக்கிறது. நான் யார்? என்னுடைய தொப்புள் கொடி யாருடன் பிணைக்கிறது?//
இந்தப் பிரச்சினை அவர் கல்வி கற்பது தொடங்கி திருமணத்திற்கு பெண் தேடுவது வரை அவரைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இத்தனை துன்பங்களுக்கு இடையிலும் சரண் படித்து பட்டம் பெறுகிறார். நல்ல வேலை கிடைக்கிறது. ஆனால் அவரது சாதியப் பின்னணி அவரை அப்போதும் அவரை விடாமல் துரத்துகிறது. மிக மோசமான வாழ்க்கைச் சூழலில் அவரைத் தள்ளுகிறது. அம்பேத்கர் காட்டிய வழியில் உத்வேகத்துடன் பல போராட்டங்களில் கலந்து கொள்ளும் சரண், சில இடங்களில் தனது சாதிய அடையாளங்களை மறைக்கவும் தலைப்படுகிறார்.

இந்நூல் இத்தனை கவனத்திற்கு உள்ளாவதற்குக் காரணம் சரண் குமார் தரும் சம்பவங்கள் அனைத்தும் மராட்டியத்தில் அப்போதைய தலித் மக்களின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சமாக்கின. சரண் அவரது சொந்தக் கதையைக் கூறினாலும் அது ஒரு சமூகத்தின் அவல நிலையை உயர்சாதியினர் அவர்கள் மீது நிகழ்த்தும் சுரண்டல்களைச் சொல்லும் படைப்பாக உள்ளது.

எஸ். பாலச்சந்திரன் அவர்களின் சரளமான மொழி, மொழிபெயர்ப்பு என்கிற உணர்வின்றி இலகுவாக நூலைப் படிக்கச் செய்கிறது.

ஒரு தலித் எழுத்தாளரின் சுய வரலாறு பின் வரும் தலித் இனத்தவர் ஒவ்வொருவருக்கும், ஒரு மாபெரும் வெற்றி சகாப்தமாக உருவெடுக்கிறது. மேலும் பலரை பல படிநிலைகள் தாண்டி மேலெழுந்து வரும் உத்வேகத்தை அவை அளிக்கின்றன. முழுக்க முழுக்க துயரங்கள் நிரம்பிய சரண் குமாரின் வரலாற்றின் இறுதியிலும் தெரியும் ஒளி, அதன் பின் பலரையும் இது போன்ற படைப்புகளைப் படைக்கத் தூண்டியது. இன்று மிகப் பெரிதாக தலித் இலக்கியம் வளர்ந்து நிற்பதற்கு காரணமான படைப்புகளில் ” அனார்யா ” வின் பங்கு மிக முக்கியமானது.

Exit mobile version