ஒரு மழைப்பொழுது
கருணையுள்ள அவள்
கொட்டும் மழையில் நனைந்துகொண்டிருந்தாள்
துயருற்ற மனதின்
ஆற்றுப்படுத்தலாகத்தான் இருக்கும்
வலுத்த மழைக்கு
ஒதுக்கிப்போன ஒருவரும்
அவளை அழைத்துப் பார்க்கவில்லை
அவளையறிந்துகொள்ள
சிலர் கடந்துபோனார்கள்
மழைக்குச் செவிசாய்த்து
மௌனமாக நின்றுகொண்டிருந்தாள்
அவளது தலையில் விழுந்தநீர்
உருண்டோடி
கோபத்தை தீர்த்துக்கொள்ள
மழைப்பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தவனின்
பாதம் கழுவிச்செல்கிறது
எனக்குத் தெரிந்த அவள்
ஒரு மீனைப்போல முத்தமிடுகிறாள்
ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது
அவளைப்பற்றிய
கதைகளைச் சொல்லி
இந்த நிமிடத்தில்
சஞ்சலமற்ற மனதோடு
ஒரு தேநீரைத் தயாரித்து
கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றையும் கொடுத்துவிடப்
பெய்துகொண்டிருக்கும் மழைக்குத்
தெரிந்திருக்கிறது
கனவுகள் இல்லாத
யமுனா
தனித்திருந்தாள்.