யாதொரு பகையுமில்லாது
தன்னைத் துறக்க
சமுத்திரத்தை பார்த்தபடியிருந்தாள்
ஒவ்வொரு அலையும்
அரற்றி அழைத்துக்கொண்டிருக்க
தூரத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கும்
கப்பல்களைச் சென்றடைய
தடை எதுவுமில்லை
அச்சம் தவிர்த்து
மனதில் நீந்தி
ஆழ்கடலுக்குள் சென்றாள்
இன்சொல்லெடுத்து பாடும்போது
ரகசியங்களை கண்டுகொண்டவள்
ஒரு மீனைப் பிடித்து
கரைக்குத் திரும்பினாள்
ஒவ்வொருவரின் அன்பினில்
வியப்பூட்டும்
பரந்த ஆகாயத்தின் நட்சத்திரங்களை
எண்ணத் தொடங்கியிருந்தவளின்
பாதம் தொட்டுக்கிடந்தது
வலம்புரிசங்கொன்று
கடல் மணல்பரப்பு தகித்துக்கொண்டிருக்க
ஆழி உள்வாங்கியிருந்தது
சூரியன் மேலெழுந்துகொண்டிருந்ததை
நீண்டதூரம்வரை காண முடிந்தது
கீழ் திசை பார்த்து நின்றுகொண்டிருந்தவளை
கதிரவனின் கரங்கள்
வாரி அனைக்க
யமுனா நெருப்பை உடுத்திக் கொண்டாள்
– பாண்டித்துரை