மின்கிறுக்கல்

யமுனா வீடு 41

நீ தானே யமுனா
முன்னே அழைத்துச்செல்கிறாய்
ஒவ்வொரு அலையும்
கால்களை கழுவிச்செல்லுமளவில்
மௌனமாக கடல் பார்த்து
நின்றுகொண்டிருந்தேன்
தொட்டுச்செல்லும் எல்லாமே
அன்பின் அலைகள்தானே
உன்னுடைய நினைவைப்போல
தூரத்தில் யாரையோ
அழைத்துக்கொண்டிருந்தார்கள்
நீலவானம் பார்க்கும் அவர்களுக்கு
கைவிட்டுச்சென்றவனைப் பற்றிய
வருத்தமிருக்கப்போவதில்லை
இரவிற்கான ஒருகதையை
அவர்கள் அறிந்திருக்கக்கூடும்
புலரும் பொழுதில் ஞாபகப்படுத்தினாலும்
மீட்டெடுக்கமுடியாத ஒரு கனவின்
ஆரம்பமோ முடிவோ இருக்குமல்லவா
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை
கடல்பார்த்து நின்றுகொண்டிருக்கும்
இந்த நேரத்திலும்
மனதிலொன்றுமில்லை
மௌனமாகத்தான் இருக்கிறேன்
பொங்கும் கண்ணீர் என்றுமிருக்கும்
நெகிழ்ச்சியாக இருக்கிறது
கபடமற்ற உன்னன்பில்
உண்மையாகத்தான் இருக்கிறேன்
நீ தானே யமுனா
முன்னே அழைத்துச்செல்லப்போகிறாய்
அவர்களுக்கு
ஒரு நன்றியைச்சொல்ல வேண்டும்.

Exit mobile version