எத்தனை நூற்றாண்டை கடந்து இங்கு வந்திருப்போம்
பெரும் நகரத்து நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன்
இந்தப்பாதை போய்கொண்டே இருக்கிறது
கற்களை எடுத்து எறிவதுபோன்ற குரலில்
அலைபேசியில் பேசியபடி சிலர் கடந்து சென்றனர்
இதுவரை தொட்டிச் செடிகளை பார்த்த ஞாபகம் இல்லை
வெப்பநாவுகளை
மின் விளக்குகள் தனித்திருந்தன
யாரவது ஏதாவது கேட்கட்டுமே என்று
கால்கள் மறைந்துகொண்டிருந்தன
நலமா என்று விசாரித்தபடி ஒரு குரல் கடந்துசென்றது
ஞாபகப்படுத்திப்பார்க்க ஓரிரு முகங்கள் வந்து சென்றன
சுவற்றில் ஒரு யுவதியை வரைந்திருந்தனர்
சில்வண்டு ரீங்காரத்தையும் மின்மினிப்பூச்சியையும்
யமுனாவிடம் காட்டவேண்டும்
கைகளில் மடித்து வைத்திருந்த நெகிழிப்பையை சரசரக்க சரிபார்த்துக்கொண்டேன்
இந்த இரவில் உறங்கியிருக்காத அவளை
இன்னும் நான் பார்க்கவில்லை
எதேச்சையாக அழைத்துப் பேசியிருக்கலாம்
குறைந்தபட்சம் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கலாம்
உன்னை வந்தடையும் என்னை உணர்கிறேன் யமுனா