மின்கிறுக்கல்

யமுனா வீடு -97

நீ எதையோ யோசித்துக்கொண்டிருக்கிறாய்
நீ இப்போது பேசியது அதைப்பற்றியதா
இடைமறிக்கும் ஒரு கேள்விக்குப்பிறகு
நீ தேடி ஓடுவது யாருக்கும் தெரியாது.

முடிச்சு அவிழ்கப்பட்ட
ஒவ்வொருவருக்கும் திசையிருக்கிறது
பறப்பது இயல்பென்றாலும்
நழுவியோடிய பந்தைப்
பொறுக்கித்தர யாருமில்லை
நீதான் பந்தைத் தேடவேண்டும்

ஒவ்வொரு அறையையும்
திறந்துபார்க்காதே
இருள் விலக நீ
ஓடத்தொடங்கிவிடுவாய்
எண்ணம் ஓடட்டும்
தனியே எழுதப்பழகு
நீ சிரித்துக்கொண்டிருப்பாய்

சட்டென்று கோவப்பட்டு
உன்னையே உடைத்துவிடக்கூடும்
நிதானம் நிதானெமெனச்
சொல்லிக்கொண்டிருக்கும்
உன்னுடைய கவனம்
யாருக்கும் வராது.

நீ பற்றிக்கொண்டிருக்கும் விரல்
உன்னுடைய அழகான கனவு
விழித்துப் பார்ப்பதில்லை
சவம்போலப் படுத்துக்கிட
நீ எழ உணர்த்தக்கூடும்
இந்த வாழ்வு கனக்கத்தான் செய்யும்

கோபுரம் பார்
நடந்து உள்ளே போ
ஆலையத்தைச் சுற்றத்தொடங்கிய
ஒவ்வொருவருக்கும் வேண்டுதலிருக்கும்
அவர்களின் முகம்பார்
உருகித் தெளிந்து
புன்னகைக்கும் முகம் யமுனாவுடையது

Exit mobile version