மின்கிறுக்கல்

யமுனாவீடு -93

உன்னைப் பார்க்கிறேன்
இந்தப்பிரபஞ்சம் சிறியதாகத் தெரிகிறது
நடக்கத் தொடங்கிவிடுகிறேன்

ஒவ்வொருநாளும் இப்படித்தான்
ஆகாயத்தைக் கடந்தவன்
நீண்ட சாலையக் கடந்தவன்
உயர்ந்தக் கட்டடங்களைக் கடந்தவனாக
பிரமாண்டமாக நடந்துகொண்டிருக்கிறேன்

இங்கு யாரும்
பறவையாவதில்லை
உனக்கிருக்கும் ஒரே வாழ்க்கையை
நடந்துதான் கடக்கிறாய்
பசிக்கும்போது உன்னைச்சுற்றும்
பறவையைப் பார்க்காதே

திரும்பத் திரும்பப்
பறவைகள் உன்னைச்சுற்றும்
உனக்கானதொரு வெளிச்சம்தேடி
மிகவும் நிதானமாக
எழுந்துபோய்விடு

உன்னுடையத் தடத்தில
உரத்துப்பேசும்
யாரேனும் நடந்துவரலாம்
வேண்டுதலோடு இரு
நேரம் அமையும்போது
எழுந்து நீ நடனமாடலாம்

இருள் திறக்கும்
மெழுகுவர்த்தியை ஏற்றிவை
வெளிச்சம் பரவியதும்
முகங்கள் காணத்தொடங்கலாம்
ஒரு முகம் யமுனாவை
நீ பார்த்துக்கொண்டிருப்பது
ஆறுதலாய் இருக்கும்.

Exit mobile version