மின்கிறுக்கல்

யமுனாவீடு 85

படபடத்த
இந்த மனத்தில் எழும்பும்
கோபத்தை
யார்மீதுதான் காட்டுவது?
இந்த இடத்திலிருந்து வெளியேறிவிடவேண்டும்

ஒன்று இரண்டு மூன்று என
சொல்லிமுடித்துத்
துவைத்த ஆடைக்களைப்
பிறகொருநாள் மடித்து வைக்கலாம்
அதனால்தான்
இந்தக் கவிதையை எழுதுகிறேன்

அள்ளிக்கொள்ளச்சொல்லி
நீ சிரிக்கிறாய், இப்பொழுது
நானும் சிரிக்கவேண்டும்
உன்னப்போலவே சிரிக்கட்டுமா?
அவரவருக்குத் தெரிந்தமொழியது
எது?

கடந்துசெல்பவர்கள் எல்லோருமே
பெருஞ்சிரத்தையோடு விசாரிக்கும்
இரண்டுவார்த்தைகளல்ல
அவை.
விசாரிப்புகள் இரக்கமற்றவை
கடந்துசென்றுவிடுகிறார்கள்

கலங்குபவர் யாராயிருப்பினும்
தலையைக்கோதிவிடு
பேரிரைச்சலிடும் மனமது
ஆழ்ந்து உறங்கட்டும்
ஒளிரும் இரவில் வரும் கனவு

வானிலை தெளிவாக இருக்கிறது
பன்றிக்குட்டிகளைப்போல
நடந்துசெல்ல வேண்டும்
ஒருவராவது புன்னகைப்பார்

தனித்தலையும் அவனுக்குள்
கடவுளின் ஒளி
யமுனாவின்
பாதத்தில் முத்தமிட்டு
நீர்த்துளிகளைக் கசியவிடுகிறான்

Exit mobile version