மின்கிறுக்கல்

யமுனாவீடு -59

இத்தகுபொழுதிலிருந்து விடுபட
எழும்போதே நினைத்துவிடுகிறேன்
நீதான் தொடங்கிவைக்கிறாய்
இந்த நாளை இப்படித்தொடர் என்று

வழக்கமாக நேரத்திற்கு எதையெல்லாம் செய்யவேண்டுமென்பதன் பட்டியல்
தொடரத்தான் செய்கிறது

எப்படியாவது
எழுந்து நடந்துவிடுகிறேன்
ஒரு துளி மகிழ்வைத் தேடுவது
பழகிவிட்டது

சிக்கல்களை உருவாக்குவது
சிக்கல்களை தீர்ப்பதிலே
இந்தப்பொழுது ஒளிரத்தொடங்கிவருகிறது

இரக்கமற்று
கடந்து போகும் இந்தநாளில்
ஒரு தேநீரைக்குடிக்க வேண்டும்
ஒரு முகத்தை பார்க்க வேண்டும்

எல்லோரும் பிரிந்து போகின்றவர்களாக இருக்கையில்
யாரொருத்தரும் அழைக்கப்போவதில்லை

இந்த நிமிடம்
நான் தேடி வருவதற்கு
கடல் இருக்கிறது.
என்னை விட்டு
கடல் செல்வதில்லை
யமுனா
கடல்பார்த்த அனுபவத்தை
எடுத்துக்கொடுக்கிறாய்.

Exit mobile version