என் அன்புக் காதலனிடம் என் இதயம் இருக்கிறது
என்னிடம் அவன் இதயம் இருக்கிறது
ஒன்று கொடுத்ததற்கு ஒன்று கிடைத்தது,
அதை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்
அவனும் தவறவிட மாட்டான்;
இதை விட வேறு நல்ல பண்டமாற்று இருக்காது தான்
என்னுள் இருக்கும் அவனது இதயம்
என்னையும் அவனையும் ஒன்றாக்கிவிட்டது
என் இதயம்
அவனுள்
அவன் சிந்தனையுள்
உணர்வுகளில்
வழிகாட்டுதலில்
தங்கிவிட்டது.
அவன் என் இதயத்தைக் காதலிக்கிறான்
ஒரு காலத்தில் அவனுக்குரியது என்பதால்;
அவன் இதயத்தை நான் நேசிக்கிறேன்
அது என்னோடு இணைந்துவிட்டதால்;
என் பார்வையால் அவன் இதயம் காயம்பட்டது
காயம்பட்ட அவனது இதயத்தால்
என் இதயமும் காயம்பட்டு வலிக்கிறது.
அவனது காயம் என் இதயத்தில் பிரதிபலித்தது
என்னுள் திறமையாக செயல்பட்டதாகக் கருதுகிறேன்.
இந்த பரிமாற்றத்தால் இருவரும் காயமுற்றோம்
இது ஒரு வரம்.
என் அன்புக்காதலனிடம் என் இதயம் உள்ளது
என்னிடம் அவன் இதயம் உள்ளது.
-ஆங்கில மூலம் சர் ஃபிலிப் சிட்னி [1978]
??????????????????????????
கைக்குள் கை
நான் உன்னைச் சந்தித்த
அந்த முதல் நாள்,
முதல் மணி நேரம்,
முதல் தருணம்
என் நினைவில் உள்ளதென்று நினைக்கிறேன்;
வெளிச்சமோ இருட்டோ
வெயிலோ மழையோ
எதுவாகவும் இருக்கலாம்.
அவற்றை மனதில் பதிக்கவில்லை
அதை நினைவில் நிறுத்தவுமில்லை
அது குறித்த எதிர்காலச் சிந்தனையும் இல்லை.
என் மரத்தில் மொட்டு விட்டிருப்பதை
கவனிக்காத மக்கு நான்;
வசந்த கால வைகாசி வரை
பலருக்கும் பூக்கள் பூக்காது;
இப்போது நினைத்துப் பார்த்தால்
வந்து போன பல நாட்களில்
அதுவும் ஒரு நாள்;
அடையாளமின்றி
அகன்று விடும் பனியைப் போல
முக்கியமின்றி இருந்தது..
அற்பமானதாகத் தோன்றினாலும்
அதில் அதிக அர்த்தமிருக்கிறது.
இப்போது அந்தத் தொடுதலை
அதிகதிகமாக நினைக்கிறேன்;
கைக்குள் கை வைத்த
அந்த முதல் தொடுதல்;
வேறெவருக்கும் புரியாது
ஆங்கில மூலம் – கிறிஸ்டினா ரோசெட்டி