பொங்கட்டும் புதுவாழ்வு
தனிமையை மட்டுமே சுமந்திருந்த
பூங்கா நாற்காலியில் இப்பொழுதெல்லாம்
அடிக்கடி அரவணைப்பின் வாசம்.
ஏக்கங்கள் வழிந்திருந்த
பாலர் பள்ளியின் சுவர்களில்
என் பிள்ளைகள் வரைந்த
ஆப்பிள்கள் அசைகின்றன.
கடனட்டைகளின் தூறல் விழுந்து
மனவெளியில் அவ்வப்போது
தவழுகின்றது வானவில்.
சொந்தவீட்டு வரவேற்பறையில்
சட்டகத்திலிருந்து ஆசீர்வதிக்கின்றனர்
இருவீட்டு முன்னத்தி ஏர்கள்.
வளைய எத்தனிக்கும் முதுகெலும்பை
நிமிர்த்தி கர்வப்பட வைக்கிறது
சேமநல நிதியில் சேர்ந்திருந்த வியர்வை.
நிலம் விட்டு நிலம் நகர்ந்து
நீண்டு வளர்கிறது இளம் வாழைக்குருத்து.
இனி அந்த நந்தவனத்தில்
மணக்கட்டும் புது வாழைக்குலையின் வாசம்.