மனவெளி
பரணில் பத்திரப்படுத்தப்பட்ட
தானியமாய் இருந்தேன்.
முளைகட்டிய பயிரென
உன் மீது காதல் முளைத்திருக்கிறது.
உன் மனவெளியில் தூவிட
ஆசையோடு எத்தனிக்கிறேன்.
காலநிலை கைகூடாததால்
காலம் பார்த்துக் காத்திருக்கிறேன்!
பயிர்களை மனத்தில் சுமந்து
காலக் கலப்பையை ஓட்டுகிறாய் ..
கடும் வெய்யிலிலும் கணம்கூட
கழனியைவிட்டு விலகாத என் அன்பு உழவனே!
நொடிப்பொழுதில் வெட்டிய மின்னலால்
காதல் மழை பொழிகிறது.
ஈரமான மனவெளியில்
உழவனும் பயிருமாய் நனைந்து கிடக்கிறோம்!
??????????????????????????
சென்றதினி மீளாது
அறிவுக்குழந்தை கண்ணயர்ந்து உறங்கும்போது
மனக்குழந்தையின் விருப்பங்களைத்
தாரைவார்த்துக் கொடுக்கும்
கனவுகளின் கருணைத் தாய்
ஒவ்வொருவரையும் சுமந்து கொண்டுதானிருக்கிறாள்
அழகழகான தருணங்களைப் பிரசவித்தபடியே……
இரவு முழுக்க உள்ளங்கையில்
பொத்தி வைத்து ரசித்த மின்மினிப்பூச்சி
பறந்து போன திசையறியாது
பொழுது விடிந்து தேடித் திரிந்து
சென்றதினி மீளாது என்றபோதும்
புதுப்புது சுவாரஸ்யமான கனவுகளை
மீட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்
ஒவ்வொரு இரவோடும்!!