பேசாதே கண்மணியே
உன்னிடம் கேட்பதெல்லாம்
ஒன்றுதான்
என்னருகே பேசாமல்
நின்றிரு.
இருந்து பின்னர் தொலைவது
அத்துணைச் சாதுர்யமான காரியமல்ல
என்பதை உனக்குச் சொல்கிறேன்.
அதுவரை பேசாமலிரு.
நம் கண்களில் ஊரும்
வெறுமையும் வெயிலும்
கடவுள் கொடுத்த வரம்
என உணர்த்துகிறேன்.
அதுவரை அமைதியாயிரு.
வேடிக்கை பார்த்தலில்கூட
ஞானம் பிறக்கும்
என்பதைக் காட்டுகிறேன்.
அதுவரை ஒரு வார்த்தையும்
உதிர்க்காமலிரு.
நீயும் நானும்
யாருமே பொருட்படுத்தாத
ஒரு பொழுதில் அமர்ந்திருக்கிறோம்
என்பதை உரைக்கிறேன்.
அதுவரை மௌனித்திரு.
உனது வார்த்தைகள்
இந்தப் பெருநகர் முதுகில்
புரண்டுவிட்டுப் போகும்
தெருநாய்களின் பசிக்கு ஒப்பானவையாகும்.
ஆகையால் பேசாமலிரு.