மின்கிறுக்கல்

பெருநகர் கனவுகள் – 3

ஒரு குடுவைக்குள்

ஒரே குடுவைக்குள்
அனைத்தும்
நிகழ்கின்றன.

தகற இடுக்குகளில் காத்திருந்து
காலையில் வந்துவிழும்
நேற்றைய மழைத்துளிகள்.

நிராதரவாய் முற்சந்தியில்
நிற்கும் ஒற்றை மரங்களின்
கண்டுகொள்ளப்படாத
உதிர்ந்த இலைகள்.

மின்சாரக் கம்பியில்
வந்தமர்ந்து
பரபரப்பைக் கண்காணித்துவிட்டு
பறந்தோடும் பறவைகள்.

இல்லாத தன் கையால்
போவோரிடம்
கெஞ்சியபடி நிற்கும்
சீனக்கிழவன்.

எல்லாவற்றையும்
கவனித்தபடியும்
கவனிக்காதபடியும்
கடந்து சுழலும்
நீ;நான்;அவர்கள்.

இங்கு
எல்லாமும்
ஒன்றுபோலவே
நிகழ்கின்றன.

ஒரு குடுவைக்குள்
கலந்து கரைந்து
போதையாகின்றோம்.

Exit mobile version