மின்கிறுக்கல்

பெருநகர் கனவுகள் – 2

கையசைத்தல்

காரணமே இல்லாமல்
சேர்ந்தும் பிரிந்தும்
செல்கின்ற பொழுதுகளில்
ஓர் இரம்மியமான
கையசைத்தலை மனம்
கற்பனை செய்து கொள்கிறது.

அது கையசைத்தலாக
இருக்க வேண்டுமென்றுகூட
கட்டாயம் இல்லை.

காற்றில் களையும்
கூந்தலைச் சரிசெய்யும் சாக்கில்
வெண்மை பூத்தக் கண்ணாடியை
உள்ளங்கையால் துடைக்கும் பாவனையில்
பொய்யாகத் தெரியும்
கையசைத்தல்கூட
இங்கு நிகழ்வதில்லை.

அம்மாவின் பிடியில்
கவனமாகச் செல்லும்
சிறுமிகள்
அப்பாவின் முதுகில்
களைப்புடன் சாய்ந்திருக்கும்
சிறுவர்கள்
மிதிவண்டியின் பின்சீட்டில்
அமர்ந்திருக்கும் பையன்கள்
என அத்தனைக்கும் நடுவிலேயேயும்
இந்த உலகம் தனித்திருக்கிறது.

கையசைத்தல் சாத்தியப்படாத
ஒரு நகரில்
கைகளை வரைந்து பார்க்கிறேன்.

Exit mobile version