மின்கிறுக்கல்

பெருநகர் கனவுகள் – 18

இல்லாதவனின் நகரம்

இன்றுடன்
அவன் இல்லாதபோனதை
மறப்பதற்குரிய சுபத்தினம்
தொடங்குகிறது.

அவனது பெயரை
எப்பொழுதாவது நினைவுக்கூர்ந்து
உச்சரிக்கும் நபர்கள்
நகரத்திற்கு வருவது
குறைகிறது.

அவன் சதா உறங்கும்
சிமென்டு நாற்காலியில்
இப்பொழுது ஒரு நாய்
படுத்துறங்கி அவனைப் பற்றிய
கடைசி குறிப்பையும்
அழித்துவிடுகிறது.

அவனைப் பார்த்து
ஹார்ன் அடிக்கும்
ஒரு மோட்டாரோட்டியும்
வேறு நகரத்திற்கு
சென்றுவிடுகிறான்.

அவனை எட்டி உதைத்து
விளையாடிவிட்டுப் போகும்
இளைஞர்களும்
பள்ளிப் படிப்பை
முடித்துவிட்டார்கள்.

அவனுக்குத் தர்மம்
செய்துகொண்டிருந்த சிலரும்
பிறவிப்பலன் பெற்று
இப்பொழுதெல்லாம் அச்சாக்கடையோரம்
வருவதில்லை.

கடைசியாக
அவனைப் பற்றி
ஒரு நினைவை
இக்கவிதைச் சொல்லிவிட்டு
முடிகிறது.

இத்துடன்
அப்படியொருவன் இருந்தான்
என்பது மறக்கப்படும்.

Exit mobile version